செய்திகள்நம்மஊர்

புதுக்கோட்டை ஆட்சியருக்கு கரோனா தொற்று | corona infection to Pudukkottai collector

புதுக்கோட்டை ஆட்சியர் பி.உமா மகேஸ்வரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரது முகாம் அலுவலகத்தில் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அதிகாலை, இரவு என்றுகூடப் பாராமல் தினந்தோறும் தடுப்பு மருத்துவ முகாம், தடுப்பூசி முகாம் உள்ளிட்ட பணிகளை அலுவலர்களுடனும், அமைச்சர்களுடனும் சென்று ஆய்வு செய்து வந்தார்.

இதுதவிர, பல்வேறு ஆய்வுக் கூட்டங்களையும் அவ்வப்போது நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று (ஜூன் 1) மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். இன்றும் வழக்கம்போல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் திட்டமிடப்பட்டு இருந்தது.

எனினும், கடந்த இரண்டு தினங்களாக ஆட்சியர் பி.உமா மகேஸ்வரிக்கு லேசாகக் காய்ச்சல், உடல் வலி இருந்துள்ளது. இதையடுத்து, நேற்று ஆர்டி-பிசிஆர் மூலம் கரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதற்கான முடிவு நேற்று நள்ளிரவில் தெரிவிக்கப்பட்டது. அதில், ஆட்சியருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதால் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்வதோடு, பரிசோதனை செய்துகொள்ளுமாறும் மாவட்ட நிலையிலான அலுவலர்களைக் கொண்ட வாட்ஸ் அப் குரூப்பில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் புதுக்கோட்டையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் ஆட்சியர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஆட்சியருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்துப் பல்வேறு அலுவலர்களும் தனிமைப்படுத்திக் கொண்டதோடு, பரிசோதனையும் செய்து வருகின்றனர். ஆட்சியர், தொடக்கத்திலேயே கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.



நன்றி!

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *