பெங்களூருவில் இருந்து ஒருவர் புறப்பட்டுவிட்டார்; தமிழகத்தில் இனி நடக்க வேண்டியது நடக்கும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து | sasikala release
பெங்களூருவில் இருந்து ஒருவர் கொடியுடன் புறப்பட்டுவிட்டார். தமிழகத்தில் இனி நடக்க வேண்டியது நடக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற திமுக பிரமுகர் இல்லதிருமண விழாவில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் திமுக ஆட்சியில் அமரும். அதற்கு அடிப்படையாக அனைத்து தொகுதிகளிலும் மக்களின் குறைகளை கேட்க வேண்டும் என திமுக வியூகம் அமைத்து பிரச்சாரம் செய்து வருகிறது.
இன்று (நேற்று) மாலைசிவகங்கையுடன் 2-ம்கட்ட பிரச்சாரம் நிறைவடைகிறது. மொத்தம் 71 தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிப்.12-ம் தேதி 3-ம்கட்ட பிரச்சாரம் தொடங்கும். 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஏற்கெனவே நான் தெரிவித்து இருந்தேன். ஆனால், தற்போதைய சூழலைப் பார்க்கும்போது 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
பெங்களூருவில் இருந்து ஒருவர் (சசிகலா) கொடியுடன் புறப்பட்டுவிட்டார். என்ன நடக்கப் போகிறது என்பது தெரியவில்லை. ஆனால், நடக்க வேண்டியது நடக்கும். இதில், எந்த மாற்றமும் இல்லை என்றார்.