உலகம்சமூகம்செய்திகள்நம்மஊர்

விபத்து வழக்குகளில் வருமான இழப்பு தொகையில் ஓய்வூதியத்தை கழிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு  | HC orders on Accident Cases

 

மதுரை: வாகன விபத்து இழப்பீடு வழக்குகளில் வருமான இழப்பு தொகையில் ஓய்வூதியத்தை கழிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையில் வேளாண் துறையில் ஓவியக் கலைஞராக பணிபுரிந்தவர் கணேசன். இவர் 2017-ல் ஓய்வு பெற்றார். அதன் பிறகு பிளக்ஸ் போர்டு தயாரிக்கும் பணி செய்து வந்தார். கடந்த 5.6.2019ல் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது திருவாப்பூர் அருகே லாரி மோதி உயிரிழந்தார். இதற்கு இழப்பீடு கோரி அவர் மனைவி எஸ்.பிரமிளா, ஸ்டீபன் இன்பென் ரோசர் ஆகியோர் மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்கு தொடந்தார்.

இந்த வழக்கில் ஓய்வூதியத்தை வருமான இழப்பாக எடுத்துக்கொள்ளாமல் மொத்தம் ரூ.11 லட்சத்து 28 ஆயிரத்து 217 இழப்பீடு நிர்ணயம் செய்து, விபத்தில் இறந்தவரின் கவனக் குறைவுக்காக இழப்பீடு தொகையில் 20 சதவீத குறைத்து ரூ.9 லட்சத்து 2 ஆயிரத்து 570 இழப்பீடு வழங்க புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இழப்பீடு தொகையை அதிகப்படுத்தக் கோரி பிரமிளா உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரித்தார்.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.கணபதி சுப்பிரமணியன் வாதிட்டார். பின்னர் நீதிபதி, ”வாகன விபத்து இழப்பீடு வழக்குகளில் வருமான இழப்பீடு தொகை நிர்ணயம் செய்யும் போது இறந்த அரசு ஊழியர் பெற்று வந்த ஓய்வூதியத்தை கழிக்கக் கூடாது. எனவே இந்த வழக்கில் ஓய்வூதியத்தையும் சேர்த்த மொத்த வருமான இழப்பாக ரூ.21 லட்சத்து 72 ஆயிரத்து 948 நிர்ணயம் செய்யப்படுகிறது. இறந்தவர் ஹெல்மெட் அணியாததற்காக 10 சதவீதம் கழித்து மொத்தம் ரூ.19 லட்சத்து 55 ஆயிரத்து 653 இழப்பீடு 7.5 சதவீத வட்டியும் 4 வாரத்தில் மனுதாரருக்கு காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். 

உயர் நீதிமன்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *