வைகோவுடன் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தவிர்க்கிறாரா துரை வைகோ? | Is Durai Vaiko avoiding campaigning with Vaiko
திருச்சி: திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு ஆதரவாக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஆதரவு திரட்டி வருகின்றனர். இதனிடையே, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், மகன் துரை வைகோவுக்கு ஆதரவாக ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனால், வைகோ பிரச்சாரம் செய்யும் இடங்களில் துரை வைகோ பங்கேற்பது இல்லை.
மேலும், கடந்த 6-ம் தேதி திருச்சியில் மதிமுக சார்பில் வைகோ வெளியிட்ட தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியிலும் துரை வைகோ பங்கேற்கவில்லை. மேலும், துரை வைகோ தனது முகநூல் பக்கத்தில் தினந்தோறும் நடைபெறும் பிரச்சாரம் தொடர்பான செய்திகளை பதிவு செய்து வருகிறார். அதிலும், வைகோ தேர்தல் அறிக்கை வெளியிட்ட நிகழ்வு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வைகோ பிரச்சாரம் மேற்கொண்டது தொடர்பான செய்திகள் இடம் பெறவில்லை.
இதுகுறித்து மதிமுக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியது: “மதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்ட நாளன்று துரை வைகோ புதுக்கோட்டையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்ததால் அவர் பங்கேற்கவில்லை. கட்சியின் தலைவர் வேறொருவராக இருந்தால், கண்டிப்பாக அவருடன் வேட்பாளர் செல்ல வேண்டியிருக்கும்.
ஆனால், கட்சித் தலைவர் தந்தை தான் என்பதால், இருவரும் தனித்தனியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினந்தோறும் இருவரும் தேர்தல் நிலவரம் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டுதான் உள்ளனர். பிரச்சாரத்திலும் தனது தந்தை குறித்து பெருமையாகவே துரை வைகோ பேசி வருகிறார். அவர்களுக்குள் நிச்சயமாக எந்த கருத்து வேறுபாடும் இல்லை” என்றனர்.