ஆன்மிகம்

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் அத்தியாயம் – 9 (Sri Sai Satcharitam Chapter – 9)

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் அத்தியாயம் – 9 (Sri Sai Satcharitam Chapter – 9)

அத்தியாயம் – 9

விடைபெறும்போது சாயிபாபாவின்‌ ஆணைகளுக்குக்‌ கீழ்ப்படிதல்‌ – கீழ்ப்படியாதிருத்தலின்‌ விளைவு – சில நிகழ்ச்சிகள்‌ – பிச்சை எடுப்பதும்‌ அதன்‌ அவசியமும்‌ – பக்தரின்‌ (தர்கட்‌ குடும்பத்தின்‌) அனுபவம்‌ – பாபா எவ்வாறு திருப்தியுடன்‌ உண்பிக்கப்பட்டார்‌.

முந்தைய அத்தியாயத்தின்‌ முடிவில்‌, விடைபெறும்போது பாபாவின்‌ ஆணைகளுக்குக்‌ கீழ்ப்படிந்தவர்கள்‌ நன்மையடைந்தனர்‌ என்றும்‌, அவைகளுக்குக்‌ கீழ்ப்படியாதவர்கள்‌ பல துர்ச்சம்பவங்களுக்கு ஆளானார்கள்‌ என்றும்‌ மட்டுமே கூறப்பட்டது. சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளாலும்‌ மற்றும்‌ சம்பவங்களாலும்‌ இக்கூற்று விவரமாக இந்த அத்தியாயத்தில்‌ சித்தரிக்கப்பட்டுள்ளது.

வீர்டி புனித யாத்திரையின்‌ குணாதிசயம்‌

ஷீர்டி புனித யாத்திரையின்‌ ஒரு சிறப்பான வினோதம்‌ என்னவென்றால்‌ எவரும்‌ ஷீர்டியை விட்டு பாபாவின்‌ அனுமதியின்றி அகன்று செல்லமுடியாது. அப்படிச்‌ செல்வாரேயானால்‌, அவர்‌ சொல்லற்கரிய தொல்லைகளை வரவேற்கிறார்‌. ஆனால்‌ எவரேனும்‌ ஷீர்டியைவிட்டு வெளியேறிச்‌ செல்லும்படி பாபாவால்‌ கேட்டுக்‌ கொள்ளப்பட்டால்‌ அவர்‌ அங்கு அதற்கு மேல்‌ தங்கியிருக்க முடியாது. பக்தர்கள்‌ பாபாவிடம்‌ சென்று வந்தனம்‌ செய்து விடை பெற்றுச்‌ செல்லப்போகும்போது அவர்‌ சில யோசனைகள்‌ அல்லது குறிப்புகள்‌ வழங்குவார்‌. இந்த யோசனைகள்‌ பின்பற்றப்பட வேண்டும்‌. இவைகள்‌ பின்பற்றப்படாவிட்டாலும்‌ அல்லது விலக்கப்பட்டு இருந்தாலும்‌, அங்ஙனம்‌ தூண்டுரைகளுக்கு மாறாக நடந்தவர்களுக்கு விபத்துக்கள்‌ நேரிடுவது உறுதி. இதைப்பற்றிச்‌ சில நிகழ்ச்சிகளைக்‌ கீழே குறிப்பிடுகிறோம்‌.

தாத்யா கோதே பாடீல்‌

தாத்யா கோதே பாடீல்‌, ஒருமுறை கோபர்காவன்‌ கடைவீதிக்குக்‌ குதிரை வண்டியில்‌ சென்று கொண்டிருந்தார்‌. அவர்‌ மசூதிக்கு அவசரமாகத்‌ திரும்பிவந்து பாபாவை வணங்கி, தான்‌ கோபர்காவன்‌ கடைவீதிக்குச்‌ செல்லப்போவதாகக்‌ கூறினார்‌. பாபாவோ, “அவசரப்படாதே, சிறிது தாமதித்துக்‌ கடை வீதிக்குச்‌ செல்‌, கிராமத்தைவிட்டு வெளியில்‌ செல்லாதே” என்றார்‌. ஆனால்‌ போவதற்கு அவருடைய வேகத்தைக்‌ கண்ட பாபா, ஷாமாவையாவது (மாதவராவ்‌ தேஷ்பாண்டே) உடன்‌ அழைத்துச்‌ செல்லுமாறு கூறினார்‌. இவ்வுத்தரவைப்‌ பொருட்படுத்தாது தாத்யா கோதே, உடனே குதிரை வண்டியை ஓட்டிச்‌ சென்றார்‌. இரண்டு குதிரைகளில்‌ ரூ.300 விலையுள்ள குதிரை மிகவும்‌ சுறுசுறுப்பாகவும்‌, இருப்புகொள்ளாமலும்‌ இருந்தது. ஸாவ்லிவிஹீர்‌ கிராமத்தைத்‌ தாண்டிய பிறகு, அது தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. இடுப்பில்‌ சுளுக்கு ஏற்பட்டுக்‌ கீழே விழுந்துவிட்டது. தாத்யா அதிகமாகக்‌ காயப்படவில்லை. ஆனால்‌ சாயிபாபாவின்‌ உத்தரவை நினைவிற்கொண்டார்‌. மற்றொரு சந்தர்ப்பத்தில்‌ கோல்ஹார்‌ கிராமத்துக்குச்‌ செல்லும்போது, பாபாவின்‌ நெறிமுறையை மதிக்காமல்‌ குதிரை வண்டியில்‌ சென்றபோது அதுவும்‌ இதே கதிக்கு இலக்காகியது.

ஐரோப்பிய பெருந்தகை

ஷீர்டிக்கு ஒருமுறை ஒரு ஐரோப்பியப்‌ பெருந்தகை, ஏதோ ஒரு குறிக்கோளுடன்‌, நானா சாஹேபின்‌ அறிமுகக்‌ குறிப்புடன்‌ வந்தார்‌. ஒரு கூடாரத்தில்‌ செளகரியமாகத்‌ தங்க வைக்கப்பட்டார்‌. அவர்‌ பாபாவின்‌ முன்‌ மண்டியிட்டு பாபாவின்‌ கையை முத்தமிட விரும்பினார்‌. எனவே அவர்‌‌ மூன்றுமுறை மசூதிக்குள்‌ நுழைய முயன்றார்‌. ஆனால்‌ அவர்‌ அப்படிச்‌ செய்வதை பாபா தடுத்துவிட்டார்‌. கீழேயுள்ள திறந்தவெளி முற்றத்தில்‌ அமர்ந்து, பாபாவின்‌ தரிசனத்தைச்‌ செய்யும்படி கேட்கப்பட்டார்‌. தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பைக்‌ கண்டு மகிழாத ஐரோப்பியர்‌, ஷீர்டியை விட்டு உடனே புறப்பட விரும்பி விடைபெறுவதற்காக வந்தார்‌. பாபா அவரை அடுத்தநாள்‌ போகும்படியும்‌, அவசரப்‌ படவேண்டாம்‌ என்றும்‌ கூறினார்‌. மக்களும்‌ அவரை பாபாவின்‌ அறிவுரையின்படியே செய்ய வேண்டிக்கொண்டனர்‌.

இவற்றையெல்லாம்‌ செவிமடுக்காது, அவர்‌ ஒரு குதிரை வண்டியில்‌ ஷீர்டியை விட்டுப்‌ புறப்பட்டார்‌. முதலில்‌ குதிரைகள்‌ ஒழுங்காக ஓடின. ஆனால்‌ ஸாவ்லிவிஹீர்‌ கிராமத்தைத்‌ தாண்டியதும்‌, எதிரில்‌ ஒரு சைக்கிள்‌ வந்தது. இதைக்‌ கண்டு குதிரைகள்‌ மிரண்டு வேகமாக ஓடின. குதிரை வண்டி தலைகீழாகக்‌ கவிழ்ந்து, அந்தப்‌ பெருந்தகை கீழே விழுந்து சிறிது தூரம்‌ தரையில்‌ இழுத்துச்‌ செல்லப்பட்டார்‌. உடனேயே அவர்‌ காப்பாற்றப்பட்டார்‌ என்றாலும்‌, தனக்கு ஏற்பட்ட காயங்களைக்‌ குணப்படுத்துவதற்காக கோபர்காவன்‌ மருத்துவமனைக்குச்‌ சென்று படுக்க வேண்டியதாயிற்று. இத்தகைய அனுபவங்கள்‌ கணக்கில்‌ அடங்கா, பாபாவின்‌ ஆணைகளுக்குக்‌ கீழ்ப்படியாதவர்கள்‌ ஏதோ ஒரு விதத்தில்‌ விபத்துக்குள்ளானார்கள்‌ என்றும்‌ அவைகளுக்குக்‌ கீழ்ப்படிந்தவர்களோ பத்திரமாகவும்‌, மகிழ்ச்சியாகவும்‌ இருந்தனர்‌ என்றும்‌ எல்லா மக்களும்‌ பாடம்‌ கற்றுக்கொண்டனர்‌.

பிச்சை எடுப்பதன்‌ தேவை

பிச்சை எடுப்பதைப்‌ பற்றிய கேள்விக்குத்‌ தற்போது திரும்புவோம்‌. பாபா உண்மையிலேயே அத்தகைய பெரிய சிறப்புடையவராக, கடவுளாக இருந்தால்‌ தமது வாழ்நாள்‌ முழுக்கப்‌ பிச்சையெடுக்கும்‌ வழக்கத்தை ஏன்‌ அவர்‌ மேற்கொண்டவராய்‌ இருக்கவேண்டும்‌? என்னும்‌ கேள்வி சிலரது உள்ளத்தில்‌ எழக்கூடும்‌. இக்கேள்வி, இரண்டு நோக்கு நிலைகளில்‌ கருதப்பட்டு விடையிறுக்கப்படலாம்‌. (1) பிச்சையெடுத்து வாழ்வதற்கு உரிமையுள்ள தகுதியான மக்கள்‌ யார்‌? வம்சாபிவிருத்தி, செல்வம்‌, புகழ்‌ இம்மூன்று முக்கிய ஆசைகளையும்‌ துறந்து, துறவை மேற்கொள்வோரே பிச்சையெடுத்து வாழத்‌ தகுதியுடையோராவர்‌ என்று நமது சாஸ்திரங்கள்‌ பகருகின்றன. இவர்கள்‌ சமைப்பதற்கு ஏற்பாடுகளைச்‌ செய்து வீட்டில்‌ உண்ண முடியாது. அவர்களை உண்பிக்க வேண்டிய கடமை இல்லறத்தாரின்‌ தோள்களில்‌ விழுகிறது.

சாயிபாபா இல்லறத்தாருமல்ல, வானப்பிரஸ்தருமல்ல. அவர்‌ பிரம்மச்சர்யம்‌ அனுஷ்டித்த ஒரு துறவி. அதாவது சிறுபருவம்‌ முதற்கொண்டே துறவியாவார்‌. இப்பிரபஞ்சமே தமது வீடு என்பதும்‌, தாமே பிரபஞ்ச ஆதாரமும்‌, அழிவற்ற பிரம்மமுமாகிய பகவான்‌ வாசுதேவர்‌ என்பதும்‌ அவருடைய உறுதியான அபிப்பிராயமாகும்‌. எனவே அவருக்கு இரந்து உண்ணும்‌ வழக்கத்திற்கு முழு உரிமை இருக்கிறது.

(2) மற்றவை கீழ்க்கண்ட நிலையின்படி, பஞ்ச்ஸுனா – ஐந்து பாவங்களும்‌ அவைகளின்‌ பிராயச்சித்தமும்‌, உணவுப்‌ பொருட்களும்‌, சாப்பாடும்‌ தயாரிப்பதற்காக இல்லறத்தார்‌ ஐந்து செயல்கள்‌ அல்லது நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியதாய்‌ இருக்கிறது. அதாவது (1) கண்டணீ – பொடியாக்குதல்‌, (2) பேஷணீ – அரைத்தல்‌, (3) உதக்கும்பி – பானைகளைக்‌ கழுவுதல்‌, (4) மார்ஜனீ – பெருக்கிச்‌ சுத்தப்படுத்துதல்‌, (5) சுள்ளீ – அடுப்பு பற்றவைத்தல்‌. இச்செயல்முறைகள்‌ எல்லாம்‌ ஏராளமான சிறிய கிருமிகளையும்‌, ஜந்துக்களையும்‌ கொல்வதற்கு ஏதுவாகிறது.

இவ்வாறாக இல்லறத்தார்கள்‌ ஓரளவு பாவத்தைச்‌ செய்தவர்களாகிறார்கள்‌. இப்பாவத்துக்குப்‌ பரிகாரமாக நமது சாஸ்திரங்கள்‌ ஆறு வகையான தியாகங்களைச்‌ செய்யப்‌ பகர்கின்றன. (1) பிரம்மயக்ஞம்‌ அல்லது பிரம்மத்துக்குச்‌ சமர்ப்பித்தல்‌, (2) வேத அத்யயனம்‌ அல்லது வேத பாராயணம்‌, (3) பித்ரு யக்ஞம்‌ – மூதாதையர்களுக்குச்‌ சமர்ப்பித்தல்‌, (4) தேவ யக்ஞம்‌ – தேவதைகளுக்குச்‌ சமர்ப்பித்தல்‌, (5) பூத யக்ஞம்‌ – ஜந்துக்களுக்குச்‌ சமர்ப்பித்தல்‌, (6) மனுஷ்ய அதிதி யக்ஞம்‌ – மனிதர்களுக்கும்‌ , அழைக்கப்படாத விருந்தாளிகளுக்கும்‌ சமர்ப்பித்தல்‌.

சாஸ்திரப்படி இந்தத்‌ தியாகங்களை முறையாக அனுசரித்தால்‌ மனத்தூய்மை பெற்று ஞானமும்‌, தன்னையுணர்தலையும்‌ பெற உதவும்‌. பாபா வீட்டுக்கு வீடு சென்றதன்‌ மூலம்‌ இல்லறத்தார்க்கு அவர்களின்‌ புனிதக்‌ கடமையை ஞாபகப்படுத்தினார்‌. பாபாவால்‌ தங்கள்‌ வீட்டிலேயே இங்ஙனம்‌ பாடம்‌ கற்பிக்கப்பட்டவர்கள்‌ பேறுபெற்ற மக்கள்‌ ஆவார்கள்‌.‌

பக்தர்களின்‌ அனுபவங்கள்‌

இன்னும்‌ அதிக விறுவிறுப்புள்ள விஷயத்துக்குத்‌ தற்போது திரும்புவோம்‌. கிருஷ்ண பரமாத்மா, பகவத்கீதையில்‌ “அன்புடனும்‌, பக்தியுடனும்‌ யாரொருவர்‌ எனக்கு ஒர்‌ இலை, மலர்‌, பழம்‌ அல்லது நீரை சமர்ப்பிக்கிறாரேோ, அந்தத்‌ தூய்மையான தன்னடக்கமுடையவருடைய அன்புக்‌ காணிக்கையானது ஆர்வத்துடனும்‌, தாமதமின்றியும்‌ என்னால்‌ ஏற்றுக்கொள்ளப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்‌.

சாயிபாபாவின்‌ விஷயத்தில்‌ ஓர்‌ பக்தர்‌ உண்மையிலேயே எதையாவது சமர்ப்பிக்க விரும்பியிருந்து, பின்னால்‌ அதையே சமர்ப்பிக்க அவர்‌ மறந்துவிட்டாரெனினும்‌, பாபா அவருக்கு அல்லது அவரது நண்பருக்கு அந்தக்‌ காணிக்கையை ஞாபகப்படுத்தி, அவரை அளிக்கச்செய்து, அதை ஏற்றுக்கொண்டு பக்தரை ஆசீர்வதித்திருக்கிறார்‌. இதுபோன்ற சில நிகழ்ச்சிகள்‌ கீழே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

தர்கட்‌ குடும்பம்‌ (தந்தையும்‌, மகனும்‌)

முன்னர்‌, பிரார்த்தனா சமாஜத்தைச்‌ சேர்ந்த ராமச்சந்திர ஆத்மாராம்‌ என்னும்‌ பாபா சாஹேப்‌ தர்கட்‌ சாயிபாபாவின்‌ ஓர்‌ உறுதியான பக்தராவார்‌. அவருடைய மனைவியும்‌, மகனும்‌ சாயிபாபாவிடம்‌ அதற்கிணையாகவே அல்லது இன்னும்‌ சற்று அதிகமாகவே கூட அன்பு செலுத்தினர்‌. ஒருமுறை திருமதி தர்கட்டும்‌, அவர்களது மகன்‌ தர்கட்டும்‌ மே மாத விடுமுறைக்கு ஷீர்டிக்குப்‌ போவது எனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால்‌ மகன்‌ போக விரும்பவில்லை. காரணம்‌ அவன்‌ பாந்த்ரா வீட்டைவிட்டுப்‌ போவானாகில்‌ வீட்டில்‌ சாயிபாபாவின்‌ பூஜை முறையாக கவனிக்கப்படமாட்டாது என்று அவன்‌ கருதியதேயாகும்‌. ஏனெனில்‌, அவனது தகப்பனார்‌ பிரார்த்தனா சமாஜத்தைச்‌ சேர்ந்தவராதலால்‌ சாயிபாபாவின்‌ பெரிய படத்தைப்‌ பூஜை செய்வதை அவர்‌ லட்சியம்‌ செய்யமாட்டார்‌ என்று அவன்‌ கருதினான்‌. எனினும்‌ தனது மகன்‌ செய்வதைப்போன்று அதே விதமாக, தான்‌ பூஜா கர்மங்களைச்‌ செய்வதாக அவர்‌ உறுதியாக வாக்களித்த பின்பு ஒரு வெள்ளிக்கிழமை இரவு தாயும்‌, மகனும்‌ ஷீர்டிக்குப்‌ புறப்பட்டனர்‌.

அடுத்த நாள்‌ (சனிக்கிழமை) தர்கட்‌ அதிகாலையில்‌ எழுந்திருந்து பூஜை செய்தவற்குமுன்‌ நீராடிவிட்டுப்‌ பூஜை அறையில்‌ சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, “பாபா, எனது மகன்‌ செய்த அதேமாதிரியாக நான்‌ பூஜை செய்யப்போகிறேன்‌. ஆனால்‌ தயவு செய்து அதை ஒரு இயந்திரகதியான பயிற்சியாக ஆக்கிவிடாதீர்கள்‌”, என்று கூறிக்கொண்டே பூஜை செய்து, சில கற்கண்டுக்‌ கட்டிகளை நைவேத்யமாகச்‌ சமர்ப்பித்தார்‌. அக்கற்கண்டு பகல்‌ உணவின்போது பகிர்ந்தளிக்கப்பட்டது.

அந்நாள்‌ மாலையும்‌, அதன்‌ பின்னர்‌ ஞாயிற்றுக்கிழமையும்‌ எல்லாம்‌ நலமாகவே நடந்தேறின. தொடர்ந்து வேலை நாளான திங்கட்கிழமையும்‌ நன்றாகவே கழிந்தது. தனது வாழ்நாளிலேயே இம்மாதிரியாகப்‌ பூஜையைச்‌ செய்தறியாத தர்கட்‌ தன்‌ மகனுக்கு வாக்களித்தபடி எல்லாம்‌ மிகவும்‌ திருப்திகரமரன முறையிலேயே நடந்தேறிக்கொண்டிருப்பதில்‌ தனக்குள்ளேயே பெருமளவு நம்பிக்கை பெற்றார்‌. அடுத்த நாளான செவ்வாயன்று வழக்கம்போல்‌ காலையில்‌ பூஜையை நிகழ்த்தியபின்‌ தனது வேலைக்குச்‌ சென்றார்‌. மதியம்‌ வீட்டுக்கு வந்து உணவு பரிமாறப்பட்டபோது, பகிர்ந்துகொள்ள கற்கண்டுப்‌ பிரசாதம்‌ இல்லாததைக்‌ கண்டார்‌. அவர்‌ தமது சமையல்காரனை விசாரித்ததில்‌, காலையில்‌ எவ்வித நைவேத்யமும்‌ செய்யப்படவில்லை என்று அறிந்தார்‌. பூஜையின்‌ அந்த அம்சத்தை நிகழ்த்த அவர்‌ அடியோடு மறந்துவிட்டிருந்தார்‌. இது குறித்து தனது இருக்கையைவிட்டு எழுந்திருந்து, பூஜையறையில்‌ விழுந்து வணங்கி, தமது தவறுதலுக்காக வருத்தம்‌ தெரிவித்து, அதே நேரத்தில்‌ இத்தகைய ஒரு சாதாரணமான நடைமுறை விஷயத்தில்‌ வழிகாட்டாததற்காகப்‌ பாபாவை அவர்‌ கடிந்துகொண்டார்‌. பின்னர்‌ தனது மகனுக்கு உண்மைகளைக்‌ கூறி ஒரு கடிதம்‌ எழுதி அதை பாபாவின்‌ பாதத்தடியில்‌ வைத்து புறக்கணிப்பிற்காகத்‌ தம்மைப்‌ பொறுத்தருளவும்‌ வேண்டுமாறு எழுதியிருந்தார்‌.

செவ்வாய்க்கிழமை மதியத்தில்‌ பாந்த்ராவில்‌ இது நிகழ்ந்தது. ஏறக்குறைய இதே நேரத்தில்‌ ஷீர்டியில்‌ மத்தியான தீபாராதனை நிகழ்வதற்குச்‌ சிறிதே முன்பாக பாபா திருமதி தர்கட்டை நோக்கி, “அம்மா, பாந்த்ராவில்‌ உள்ள உனது வீட்டிற்கு, ஏதேனும்‌ உண்ணலாம்‌ என்ற எண்ணத்துடன்‌ சென்றிருந்தேன்‌. கதவு பூட்டப்பட்டிருப்பதைக்‌ கண்டேன்‌. எப்படியோ உள்ளே நுழைந்து, பாவ்‌ (தர்கட்‌), நான்‌ உண்பதற்கு ஏதும்‌ விட்டுவைக்கவில்லை என்பதை வருத்தத்துடன்‌ அறிந்தேன்‌. எனவே பசி தணிக்கப்படாமலேயே திரும்பிவிட்டேன்‌ என்று கூறினார்‌.

அப்பெண்மணிக்கு இது ஒன்றும்‌ புரியவில்லை. அருகிலிருந்த மகனோ அதாவது பாந்த்ராவில்‌ பூஜையில்‌ ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்று அனைத்தையும்‌ புரிந்துகொண்டு, வீடு திரும்ப பாபாவின்‌ அனுமதியை வேண்டினான்‌. பாபா இதை மறுத்தார்‌. எனினும்‌ அங்கேயே அப்பையனைப்‌ பூஜை செய்ய அனுமதித்தார்‌. அப்போது, ஷீர்டியில்‌ நிகழ்ந்த விபரங்களையெல்லாம்‌ பற்றி பையன்‌, தகப்பனாருக்கு ஒரு கடிதம்‌ எழுதி, வீட்டில்‌ பூஜையை அலட்சியம்‌ செய்யவேண்டாமென்று மன்றாடி வேண்டியிருந்தான்‌. இரண்டு கடிதங்களும்‌ ஒன்றையொன்று தாண்டிப்போய்‌ இருவருக்குமே அடுத்த நாள்‌ கிடைத்தது. இது ஓர்‌ அற்புதமல்லவா?!

திருமதி தர்கட்‌

தற்போது திருமதி தர்கட்டின்‌ நிகழ்ச்சியை எடுத்துக்கொள்வோம்‌. அவள்‌ மூன்று பொருட்களைச்‌ சமர்ப்பித்தாள்‌. அதாவது, (1) பரீத்‌ (கத்திரிக்காய்‌ தயிர்பச்சடி), (2) காச்சர்யா (முழு கத்திரிக்காய்‌ பொரியல்‌), (3) பேடா (பால்‌ கேக்‌) இவற்றைப்‌ பாபா எங்ஙனம்‌ ஏற்றுக்கொண்டார்‌ என்பதைப்‌ பார்ப்போம்‌.

ஒருமுறை பாபாவின்‌ பெரும்‌ பக்தரான, பாந்த்ராவைச்‌ சேர்ந்த ரகுவீர்‌ பாஸ்கர்‌ புரந்தரே என்பவர்‌ ஷீர்டிக்குத்‌ தன்‌ குடும்பத்துடன்‌ புறப்பட்டார்‌. பாந்த்ராவில்‌ திருமதி புரந்தரேயிடம்‌, திருமதி தர்கட்‌ சென்று, அவளுக்கு இரண்டு கத்தரிக்காய்கள்‌ அளித்து, ஷீர்டியில்‌ ஒரு கத்தரிக்காயில்‌ பரீத்தும்‌ மற்றதில்‌ காச்சர்யாவும்‌ செய்து, பாபாவுக்கு அவற்றைப்‌ பரிமாறும்படிக்‌ கூறியிருந்தாள்‌. ஷீர்டியை அடைந்த பின்னர்‌, திருமதி புரந்தரே தனது பரீத்துடன்‌ மசூதிக்குச்‌ சென்ற அதே தருணத்தில்‌, பாபா தமது சாப்பாட்டிற்காக அமர்ந்துகொண்டிருந்தார்‌. பாபா, பரீத்‌ மிகவும்‌ ருசியாக இருப்பதைக்‌ கண்டார்‌. எனவே, அவர்‌ அதை அனைவருக்கும்‌ பகிர்ந்தளித்துத்‌ தனக்கு இப்போது காச்சர்யா வேண்டுமெனக்‌ கூறினார்‌.

ராதாகிருஷ்ணமாயிக்கு, பாபா காச்சர்யாக்கள்‌ வேண்டுகிறார்‌ என்ற செய்தி அனுப்பப்பட்டது. அது கத்தரிக்காய்‌ சீசன்‌ இல்லையாதலால்‌ அவள்‌ குழப்பமடைந்தாள்‌. கத்தரிக்காயை எப்படிப்‌ பெறுவது என்பதே தற்போதைய பிரச்சினை, பரீத்தை யார்‌ கொண்டுவந்தார்‌ என்று விசாரித்ததில்‌ காச்சர்யா பரிமாறும்‌ பணியிலும்‌ திருமதி புரந்தரே ஒப்புவிக்கப்பட்டிருந்தாள்‌ என அறியப்பட்டது. காச்சர்யாவைப்‌ பற்றிய பாபாவின்‌ வேண்டுதலின்‌ உட்குறிப்பை அனைவரும்‌ புரிந்துகொண்டனர்‌. எங்கும்‌ வியாபித்திருக்கும்‌ அவர்தம்‌ ஞானத்தைக்‌ கண்ட அனைவரும்‌ ஆச்சர்யத்தில்‌ செயலிழந்தனர்‌.

1915ஆம்‌ வருடம்‌ டிசம்பர்‌ மாதத்தில்‌ கோவிந்த்‌ பாலாராம்‌ மான்கர்‌ என்பவன்‌ தனது தந்தையின்‌ திவசங்களையெல்லாம்‌ செய்வதற்காக, ஷீர்டிக்குச்‌ செல்ல விரும்பினான்‌. புறப்படுவதற்கு முன்‌ திருமதி தர்கட்டைப்‌ பார்க்க வந்தான்‌.

அப்போது பாபாவுக்கு ஏதேனும்‌ கொடுத்தனுப்ப வேண்டுமென்று திருமதி தர்கட்‌ நினைத்தாள்‌. வீடு அனைத்திலும்‌ தேடியும்‌ முன்னமே நைவேத்யமாக அளிக்கப்பட்டிருந்த பேடா ஒன்றைத்‌ தவிர வேறெதையும்‌ அவள்‌ காணவில்லை. பையன்‌ கோவிந்த்‌ மிகவும்‌ துயர்கொண்ட நிலையில்‌ இருந்தான்‌. எனினும்‌ பாபாவிடம்‌ கொண்டுள்ள பெரும்‌ பக்தியின்‌ காரணமாக அவனிடம்‌ பேடாவைக்‌ கொடுத்து அனுப்பினாள்‌. பாபா அதனை ஏற்றுக்கொள்வார்‌ என நம்பினாள்‌.

கோவிந்த்‌ ஷீர்டிக்குச்‌ சென்று பாபாவைக்‌ கண்டான்‌. ஆனால்‌ பேடாவைத்‌ தன்னுடன்‌ எடுத்துச்‌ செல்ல மறந்துவிட்டான்‌. பாபா பொறுத்திருந்தார்‌. மறுபடியும்‌ மாலையில்‌ சென்றபோதும்‌ பேடாவைக்‌ கொண்டுசெல்லாமல்‌ வெறுங்கையுடன்‌ சென்றான்‌. பாபா இதற்குமேல்‌ பொறுக்க இயலாதவராய்‌, “எனக்கு நீ என்ன கொண்டுவந்திருக்கிறாய்” என்று கேட்டார்‌. “ஒன்றுமில்லை!” என பதில்வந்தது. மீண்டும்‌ பாபா அவனைக்‌ கேட்டார்‌. அதே பதில்தான்‌ அளிக்கப்பட்டது. பின்னர்‌ பாபா, “நீ புறப்படும்போது அம்மா உன்னிடம்‌ எனக்காக இனிப்புப்‌ பலகாரம்‌ கொடுக்கவில்லையா?” என்ற குறிப்பான வினாவொன்று கேட்டார்‌. உடனே பையனுக்கு எல்லாம்‌ நினைவு வந்தது. வெட்கமடைந்து பாபாவிடம்‌ தன்னை மன்னிக்க வேண்டிக்கொண்டு தான்‌ இருந்த இடத்திற்கு ஓடிப்போய்‌ பேடாவைக்‌ கொண்டுவந்து பாபாவிடம்‌ கொடுத்தான்‌. கையில்‌ அதைப்பெற்ற உடனேயே, பாபா வாயிலிட்டுப்‌ பேராவலுடன்‌ விழுங்கிவிட்டார்‌. இவ்வாறாகத்‌ திருமதி தர்கட்டின்‌ பக்தி கண்டுணரப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. “மனிதர்‌ எவ்விதம்‌ என்னை நம்புகிறார்களோ அவ்விதமே நான்‌ அவர்களை ஏற்றுக்கொள்கிறேன்‌” (கீதை அத்‌.4 : ஸ்லோகம்‌ 11) என்பது இந்நிகழ்ச்சியால்‌ நிரூபிக்கப்பட்டது.

பாயா எவ்வாறு திருப்தியுடன்‌ உண்பிக்கப்பட்டார்‌?

ஒருமுறை திருமதி தர்கட்‌ ஷீர்டியில்‌ ஒரு குறிப்பிட்ட வீட்டில்‌ தங்கியிருந்தார்‌. மதிய உணவு தயாராகி பதார்த்தங்கள்‌ பரிமாறப்படும்போது பசியுள்ள ஒரு நாய்‌ அங்குவந்து குரைக்கத்‌ தொடங்கியது. திருமதி தர்கட்‌ உடனே எழுந்திருந்து ஒரு ரொட்டித்‌ துண்டை விட்டெறியவும்‌, அது மிகுந்த சுவையுணர்வோடு அதைக்‌ கவ்வி விரைவாக விழுங்கிவிட்டது. பிற்பகல்‌ அவள்‌ மசூதிக்குச்‌ சென்று சிறிது தூரத்தில்‌ அமர்ந்தபோது சாயிபாபா அவளிடம்‌ “அம்மா நான்‌ பெருமளவு திருப்தியுறும்‌ வகையில்‌ எனது பிராணன்கள்‌ யாவும்‌ நிறைவுபெற்றன. இவ்விதமாக எப்போதுமே நடப்பாயாக. இது உன்னை நன்னிலையில்‌ வைக்கும்‌. இம்மசூதியில்‌ அமர்ந்துகொண்டு பொய்‌ பேசவே மாட்டேன்‌. என்னிடம்‌ இவ்விதமாக இரக்கங்கொள்வாய்‌.

முதலில்‌ பசியாய்‌ இருப்போர்க்கு உணவு கொடுத்துப்பின்‌ நீ உண்பாயாக. இதை நன்றாகக்‌ கவனித்துக்கொள்‌” என்று கூறினார்‌. முதலில்‌ அவளால்‌ இதன்‌ பொருளை உணர இயலவில்லை. எனவே அவள்‌, “எங்ஙனம்‌ நான்‌ தங்களுக்கு உணவு அளித்திருக்க முடியும்‌? நானே உணவுக்கு மற்றவர்களைச்‌ சார்ந்து பணம்‌ கொடுத்துச்‌ சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்‌” எனக்கூறினாள்‌. இதற்கு பாபா, “அந்த கவர்ச்சிமிகு ரொட்டியை உண்டு நான்‌ மனப்பூர்வமாகத்‌ திருப்தியடைந்தேன்‌. நான்‌ இன்னும்‌ ஏப்பம்‌ விட்டுக்‌ கொண்டிருக்கிறேன்‌. உணவு வேளைக்கு முன்னர்‌ நீ பார்த்து ரொட்டி அளித்த நாயானது என்னுடன்‌ ஒன்றியதாகும்‌. இவ்வாறாகவே மற்ற உயிரினங்களும்‌ (பூனைகள்‌, பன்றிகள்‌, ஈக்கள்‌, பசுக்கள்‌ முதலியன) என்னுடன்‌ ஒன்றானவைகளாகும்‌. நான்‌ அவைகளின்‌ உருவத்தில்‌ உலாவிக்‌ கொண்டிருக்கிறேன்‌. என்னை இவ்வனைத்துப்‌ படைப்புயிர்களிலும்‌ பார்க்கிறவன்‌ எனக்கு உகந்தவன்‌. எனவே த்‌வைதத்தையும்‌, பேதத்தையும்‌ ஒழித்து இன்று செய்ததைப்போல்‌ எனக்குச்‌ சேவை செய்‌” என்று கூறினார்‌. இவ்வமிர்தத்தினை நிகர்‌ மொழிகளைக்‌ கேட்டு அவள்‌ உருகி, அவளது கண்கள்‌ பனித்து, தொண்டை அடைத்து அவளது மகிழ்ச்சி எல்லையற்றதாக ஆகியது.

நீதி

கடவுளை எல்லா படைடப்புயிர்களிலும்‌ காண்பாயாக” என்பதே இவ்வத்தியாயத்தின்‌ நீதியாகும்‌. உபநிஷதங்கள்‌, பகவத்கீதை, பாகவதம்‌ இவைகளெல்லாம்‌ ஜீவராசிகள்‌ அனைத்திலும்‌ கடவுள்‌ அல்லது தெய்வீகத்தைக்‌ காணும்படியாகவே வற்புறுத்தி அறிவுறுத்துகின்றன. இவ்வத்தியாயத்தின்‌ முடிவில்‌ சொல்லப்பட்ட நிகழ்ச்சியாலும்‌ இன்னும்‌ பல சந்தர்ப்பங்களிலும்‌, உபநிஷத போதனைகளை எவ்வாறு நடைமுறைக்குக்‌ கொண்டுவருவது என்று சாயிபாபா விளக்கிக்‌ காட்டியிருக்கிறார்‌. இவ்வாறாக சாயிபாபா உபநிஷத்தின்‌ விரிவுரையாளராக அல்லது குருவாக இருந்தருளினார்‌.

ஸ்ரீ சாய் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம்.


Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment on gist

Most Popular

Tamil Deepam

started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World.

About Us

TamilDeepam.com was started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World. We identified this online opportunity used to give the awareness in all aspects to the tamil speaking people.

Copyright © 2021 TamilDeepam.com, powered by Wordpress.

To Top