ஸ்ரீ சாய் சத்சரித்திரம் அத்தியாயம் – 20 (Sri Sai Satcharitam Chapter – 20)
ஸ்ரீ சாய் சத்சரித்திரம் அத்தியாயம் – 20 (Sri Sai Satcharitam Chapter – 20)
அத்தியாயம் – 20
தாஸ்கணுவின் பிரச்சினை காகாவின் வேலைக்காரப் பெண்ணால் தீர்ந்தது.
இவ்வத்தியாயத்தில் காகா சாஹேப் தீக்ஷித்தின் வேலைக்காரப் பெண்ணால் எங்ஙனம் தாஸ்கணுவின் பிரச்சினைக்கு விடை காணப்பட்டது என்பதை ஹேமத்பந்த் விவரிக்கிறார்.
முன்னுரை
சாயி (கடவுள்) முதலில் அருவமாய் இருந்தார். பக்தர்களுக்காக ஒரு ரூபத்தை அவர் புனைந்து கொண்டார். பிரபஞ்சம் என்னும் பெரும் நாடகத்தில் மாயை என்ற நடிகையின் உதவியுடன் அவர் நடிகரின் பாத்திரத்தை ஏற்று நடித்தார். நாம் சாயியை (கடவுளை) ஞாபகப்படுத்திக்கொள்வோம். அகக்காட்சியாக உருவாக்கிக் காண்போம். ஷீர்டிக்குச் சென்று மதிய ஆரத்திக்குப்பின் உள்ள நிகழ்ச்சிகளைக் கவனத்துடன் நோக்குவோம். ஆரத்திச் சடங்கு முடிந்த பின்னர் சாயிபாபா மசூதிக்கு வெளியில் வந்து அதன் விளிம்பில் நின்றுகொண்டு, மிகுந்த பட்சமும் அன்பும் கூடிய பார்வைகளுடன் பக்தர்களுக்கு உதியை வினியோகிப்பது வழக்கம். பக்தர்களும் அதே அளவு உணர்ச்சிவேகத்துடன் அவருடைய பாதங்களைப் பற்றிப் பிடித்துக்கொண்டனர். நின்றுகொண்டும் அவரை உற்று நோக்கிக்கொண்டும் உதிமழையை மகிழ்ந்தனுபவித்தார்கள். பாபா கைநிறைய உதியை பக்தர்களின் கைகளில் கொடுத்து அவர்களது நெற்றியில் தமது கைவிரல்களால் மூசிவிட்டார். அவர் தம்முடைய இதயத்தில் அவர்களுக்காகக் கொண்டிருந்த அன்பு எல்லையற்றது.https://tamildeepam.com/sri-sai-satcharitam-chapter-18-19/
பிறகு அவர் பக்தர்களை நோக்கிப் பின்வருமாறு அளவளாவினார். “ஓ! பாவ் சாப்பிடச் செல்லும், அண்ணா நீர் உமது இருப்பிடத்திற்குச் செல்லும். ஓ! பாபு உமது உணவை மகிழ்ச்சியுடன் சாப்பிடும்”. இவ்வாறாகவே ஒவ்வொரு பக்தரையும் அழைத்துப் பேசி அவர்களை வீட்டிற்கு அனுப்பினார். இப்போதும்கூட இக்காட்சிகளை உங்களது கற்பனையைத் தட்டிவிடுவதின் மூலம் நீங்கள் மகிழ்ந்து அனுபவிக்கலாம். நீங்கள் அவைகளைக் கண்டு இன்புறலாம். இப்போது சாயியை அவரது பாதங்களிலிருந்து முகம்வரை நமது மனதில் உருவகப்படுத்தி தியானிப்போம். அவர் முன்னிலையில் தாழ்மையுடனும், அன்புடனும், மரியாதையுடனும் வீழ்ந்து பணிந்துவிட்டு இவ்வத்தியாயத்தின் கதைக்குத் திரும்பிவருவோம்.
ஈசா உபநிஷதம்
தாஸ்கணு ஒருமுறை ஈசா உபநிஷதத்துக்கு மராத்திய விளக்க உரை எழுத ஆரம்பித்தார். முதலில் இவ்வுபநிஷதத்தைப் பற்றிய சுருக்கமான கருத்து ஒன்றை மேற்கொண்டு தொடரும்முன் கூறுவோம். வேதசம்ஹிதையின் மந்திரங்களில் அது உள்ளடக்கப்பட்டிருப்பதால் அது மந்திரோபனிஷத் என்று அழைக்கப்படுகிறது. வாஜஸனேய சம்ஹிதையின் (யஜுர் வேதம்) இறுதியான அல்லது நாற்பதாவது அத்தியாயத்தை இணைத்து உருவாக்குவதால் வாஜஸனேய சம்ஹிதோபனிஷத் என்று அழைக்கப்படுகிறது. பிராம்மணங்களிலும், ஆரண்யகங்களிலும் (மந்திரங்கள், வைதீகச் சடங்குகள் பற்றி விளக்கும் வியாக்கியானங்கள்) காணப்படும் வேதசம்ஹிதைகளில் உள்ளடக்கப் பட்டிருப்பதால், இதுவே மற்ற எல்லா உபநிஷதங்களையும் விடச் சிறப்பானது என்று கருதப்படுகிறது. இது மட்டுமன்று, மற்ற உபநிஷதங்கள் எல்லாம் ஈசா உபநிஷத்தில் சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கும் உண்மைகளைப் பற்றிய வியாக்கியானங்களேயாகும் என்று எண்ணப்படுகிறது. உதாரணமாக உபநிஷதங்களிலேயே பெரிதான பிருஹதாரண்யக உபநிஷதமாவது ஈசா உபநிஷத மூலத்தோடு இணைந்த விளக்கவுரை என்று பண்டிட் சத்வலேகர் கருதுகிறார்.
பேராசிரியர் R.D. ரானடே கூறுகிறார், “ஈசா உபநிஷதம் ஒரு சிறிய உபநிஷதமேயாகும். இருப்பினும் அசாதாரணமாக, துளைத்து உட்செல்லும் ஆழ்ந்த நுண்ணறிவுத் திறத்தைக் காட்டுகின்ற பல குறிப்புக்களையும் அது பெற்றிருக்கின்றது. பதினெட்டே செய்யுட்களுள்ள குறுகிய வட்டப்பரப்பில், ஆத்மாவைக் குறித்து மதிப்பு மிகப்பெற்ற அகநிலை உணர்வு சார்ந்த வர்ணனையை, தீயன செய்யத்தூண்டும் மயக்கங்களுக்கும், கவலைகளுக்கும் இடையில் கலக்கமுறாத முழுநலம் வாய்க்கப்பட்ட கர்மயோகம் என்னும் போதனைத் தொகுப்பிற்கு முன்னோடியான அறிவிப்பையும், இறுதியாக ஞானம் – கர்மம் இவைகளின் தகுதிகளைப் பற்றிய கருத்து முரண்பாடு நீக்கத்திற்குரிய ஒரு விளக்கத்தையும் அளிக்கிறது. ஞானம் – கர்மம் என்ற எதிரிடைகளின் வாதப் பொருத்தமுடைய கூட்டிணைப்பே உபநிஷத்தின் ஆணிவேரில் உறைந்திருக்கும் மிகமிக மதிப்புள்ள கருத்தாகும். உயர்நிலை இணைப்பாக்கத்தின்போது பேதம் துடைத்தழிக்கப் படுகிறது. அவர் மற்றுமோர் இடத்தில் நீதி, மறை மெய்மை, நுண்பொருள் கோட்பாட்டியல் இவைகளின் ஒருமித்த கலவையே ஈசா உபநிஷதத்தின் பாடல்கள் என்றும் கூறுகிறார்.
மேலே தரப்பட்ட இவ்வுபநிஷதத்தைப் பற்றிய சுருக்கமான விளக்கங்களால், வட்டாரப் பேச்சு மொழியில் இதனை மொழி பெயர்ப்பது என்பதும் சரிநுட்பமான அதே அர்த்தத்தைக் கொணர முற்படுவதும் எவ்வளவு கடினமானது என்று எவரொருவரும் அறிய இயலும். தாஸ்கணு இதைச் செய்யுள் – செய்யுளாக மராத்திய ‘ஒவி’ யாப்பு வகையில் மொழிபெயர்த்தார். ஆயினும் உபநிஷதத்தின் சாராம்சத்தை அவர் புரிந்துகொள்ளாததால் தமது செயல்நிறைவு பற்றி அவர் திருப்தி கொள்ளவில்லை. மன நிறைவடையாதவராய் சில அறிஞர்களைத் தனது சந்தேகங்கள் பற்றியும், கஷ்டங்களைப் பற்றியும் கலந்து ஆலோசித்து அவர்களுடன் அதைப்பற்றி மிகவும் விரிவாக விவாதித்தார். அவர்கள் அவைகளுக்கு விடைகாணவும் இல்லை, அறிவாராய்ச்சிமுறை சார்ந்தோ, திருப்தியுடையதோவாகிய விளக்கமும் அளிக்கவில்லை. எனவே தாஸ்கணு இதனைப் பற்றிச் சிறிது மனஉளைவுடன் இருந்தார்.
சத்குரு ஒருவரே விளக்கமளிக்க உரிமையும் கருதியும் உடையவர்
நாம் பார்த்தவிதமாக இவ்வுபநிஷதம் வேதங்களின் சாராம்சமாகும். அது ஆத்மானுபூதியின் விஞ்ஞானமாகும். அது பிறப்பு, இறப்பு என்னும் கட்டுக்களை அறுத்தெறியக்கூடிய, நம்மை விடுவிக்கின்ற அரிவாள் அல்லது ஆயுதமாகும். எனவே, தாமே ஆத்மானுபூதி அடையப்பெற்ற ஒருவரே உபநிஷதத்திற்கு உண்மையான சரியான விளக்கம் அளிக்க முடியும் என்று அவர் நினைத்தார். தாஸ்கணுவை ஒருவரும் திருப்திப்படுத்த இயலாதபோது, சாயிபாபாவை இதுவிஷயமாக அவர் கலந்து ஆலோசிக்க முடிவுசெய்தார். ஷீர்டிக்குப் போக அவருக்கு ஒரு சந்தர்ப்பம் நேரிட்டபோது சாயிபாபாவை அவர் கண்டார். அவர்முன் வீழ்ந்து பணிந்தார். ஈசா உபநிஷத்தைப் பற்றிய தனது கஷ்டங்களைத் தெரிவித்து, அதைப்பற்றிய சரியான தீர்வு தரும்படி அவரை வேண்டிக்கொண்டார். சாயிபாபா அவரை ஆசீர்வதித்துக் கூறியதாவது, “நீ கவலைப்பட வேண்டியதில்லை. இவ்விஷயத்தைப்பற்றி எவ்விதக் கஷ்டமும் இல்லை. நீ வீட்டிற்குத் திரும்பிப்போகும் வழியில் விலேபார்லேயில் காகாவின் (காகா சாஹேப் தீக்ஷித்தின்) வேலைக்காரி உனது சந்தேகங்களைத் தீர்த்து வைப்பாள்”.
பாபா இதைச் சொல்லும்போது அங்கிருந்து இதனைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் பாபா வேடிக்கை செய்கிறார் என்றும், “கல்வி அறிவற்ற வேலைக்காரி ஒருத்தி இவ்வாறான சிக்கல்களை எங்ஙனம் தீர்த்துவைக்க முடியும்” என்றும் சொல்லிக்கொண்டனர். ஆனால் தாஸ்கணுவோ வேறுவிதமாக எண்ணினார். பாபா எதைப் பேசியபோதும் அவை உண்மையில் நிறைவேறியே தீரும். பாபாவின் சொல்லே பிரம்மத்தின் (ஆண்டவரின்) ஆணைப்பத்திரமாகும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
காகாவின் வேலைக்காரி
பாபாவின் மொழிகளில் முழுமையான நம்பிக்கைக்கொண்டு ஷீர்டியை விட்டு அவர் விலேபார்லேவிற்கு (பம்பாயின் புறநகர்ப் பகுதி) வந்து காகா சாஹேப் தீக்ஷித்துடன் தங்கினார். அடுத்தநாள் காலை தாஸ்கணு மகிழ்வாக ஒரு சிறுதுயில் கொண்டிருக்கும்போது (சிலர் அவர் வழிபாடு செய்துகொண்டிருக்கும்போது என்று கூறுகின்றனர்) ஒரு ஏழைப்பெண் அழகான பாடல் ஒன்றை இனிமையான குரலில் பாடிக்கொண்டிருந்தாள். பாடலின் உட்பொருளாவது:
“கருஞ்சிவப்புக் கலர் உடை, அது எவ்வளவு நன்றாய் இருக்கிறது. அதன் எம்ராய்டரி வவேலை எவ்வளவு நேர்த்தியாய் இருக்கிறது. அதன் முந்தானையும், பார்டரும் எவ்வளவு அழகாய் இருக்கிறது”? என்பதாக..!
அவரை வெளியே ஈர்க்கும் அந்த அளவிற்கு அப்பாடலை அவர் விரும்பினார். வெளியே வந்து பார்த்தபோது காகா சாஹேபின் வேலைக்காரனான நாம்யாவின் சகோதரியான ஒரு சிறுமியால் அது பாடப்பெற்றதைக் கண்டார். அப்போது அச்சிறுமி பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்தாள். அவளது மேனியில் கிழிந்த உடை ஒன்றே இருந்தது. அவளது வறுமையான நிலையையும், அவளது களிப்பான உளப்பாங்கையும் கண்டு தாஸ்கணு அவளுக்காகப் பரிதாபப்பட்டார். அடுத்த நாள் ராவ்பகதூர் M.V. ப்ரதான் என்பவர் ஒருவருக்கு ஒரு ஜதை வேஷ்டி கொடுத்தபோது, அவரை தாஸ்கணு அந்த ஏழைச் சிறுமிக்கு புதிய உடை வாங்கி அளிக்கும்படிக் கேட்டுக்கொண்டார். ராவ் பகதூரும் அழகிய பாவாடைத் தாவணி ஒன்றை வாங்கிவந்து அவளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்.
பசியால் வாடும் ஒருவனுக்கு, அதிர்ஷ்டவசமாக உண்பதற்கு நல்ல விருந்து கிடைக்கப்பெற்றதைப் போன்றே, அவளது களிப்பு கரைகாணாது போயிற்று. மறுநாள் புத்தாடையை அவள் அணிந்துகொண்டாள். பெருமகிழ்ச்சியுடனும், கொண்டாட்டத்துடனும் சுற்றிச்சுற்றி ஓடினாள். சுழன்று நடனம் ஆடினாள். மற்றச் சிறுமிகளுடன் ஃபுகடி (கோலாட்டம்) விளையாடி அவர்களை எல்லாம் வென்றாள். அதற்கடுத்த நாள் அதை வீட்டில் பெட்டியில் வைத்துவிட்டு, தனது பழைய கந்தலையே அணிந்து வந்தாள். ஆனால் முன்தினம் காணப்பெற்ற மாதிரியே அதே அளவு ஆனந்தத்துடன் காணப்பட்டாள். இதைக் கண்ணுற்ற தாஸ்கணுவின் இரக்கவுணர்ச்சி, புகழ்ச்சியாக மாறியது. அச்சிறுமி ஏழையானதால் கந்தலையே அணியவேண்டும். ஆனால் தற்போது அவளிடம் ஒரு புதிய உடை இருக்கிறது. அதை அவள் பத்திரப்படுத்தி இருக்கிறாள். பழைய கந்தலையே உடுத்தியும், எள்ளளவும் துன்பமோ, மனச்சோர்வோ இல்லாதபடி அவற்றை அவள் தாங்கிக்கொண்டாள்.
இவ்வாறாக நமது இன்ப, துன்ப உணர்ச்சிகள் எல்லாம் நமது மனத்தின் பாங்கைப் பொறுத்தே இருக்கின்றன என்பதை அவர் உணர்ந்தார். இந்நிகழ்ச்சியைப் பற்றியே அவர் ஆழ்ந்து ஆராய்ந்து கடவுள் முன்னும் பின்னும் எல்லாத் திசைகளிலும், எல்லாப் பொருட்களிலும் சூழ்ந்து ஊடுருவி இருக்கிறார் என்றும், கடவுளால் அவனுக்கு வழங்கப்பட்டவையனைத்தும், உறுதியாக அவனது நன்மைக்கேயாகும் என்னும் மறுக்கவியலாத திட நம்பிக்கையுடன் கடவுளால் தனக்கு அருளப்பட்டவைகள் அனைத்தையும் மகிழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உணர்ந்தார்.
இக்குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் ஏழைச் சிறுமியின் வறுமை நிலை, அவளது கந்தல் உடை, புதுப்பாவாடைத் தாவணி, அதை அன்பளிப்பாகக் கொடுத்தவர், அன்பளிப்பைப் பெற்றவள், அதனை ஏற்றுக்கொள்ளுதல் எல்லாம் கடவுளின் கூறுகளே. அவரே எல்லாவற்றிலும் ஊடுருவிப் பரந்து இருக்கிறார் என்று தாஸ்கணு உபநிஷதப் பாடத்தின், நடைமுறைச் சான்று விளக்கத்தினைப் இவ்விடத்தில் பெற்றார். எதுநேரினும் அது கடவுளின் ஆணையே என்றும், கடைமுடிவாக அது நமக்கு நன்மை அளிக்கும் என்று தமக்குரியதானவைகளிடம் திருப்தி கொள்ளுதல் என்பதுமாகும்.
தந்நேரில்லா போதனைமுறை
மேற்கூறிய நிகழ்ச்சியிலிருந்து பாபாவின் வழிகள் தனித்தன்மை வாய்ந்தவை மற்றவற்றினின்றும் மாறுபாடானவை என்பதை வாசகர்கள் காண்பார்கள். பாபா ஒருபோதும் ஷீர்டியை விட்டுச் சென்றதில்லையாயினும் அவர் சிலரை மச்சிந்த்ரகட்டுக்கும் சிலரை கோலாப்பூர் அல்லது ரோலாப்பூருக்கும் சாதனைகள் பயில்வதற்கு அனுப்பினார். சிலருக்குத் தமது வழக்கமான ரூபத்தில் தோன்றினார். சிலருக்கு விழிப்பு நிலையிலோ அல்லது கனவிலோ, இரவிலோ அன்றிப் பகலிலோ தோன்றி அவர்களது ஆசைகளைப் பூர்த்தி செய்தார். தமது அடியவர்கட்கு பாபா உபதேசிக்கக் கையாண்ட எல்லா வழிகளையும் விவரிப்பதென்பது இயலாத காரியம்.
இக்குறிப்பிட்ட விஷயத்தில் அவர் தாஸ்கணுவை விலேபார்லேக்கு அனுப்பினார். அங்கே வேலைக்காரியின் மூலம் அவரது பிரச்சினையை பாபா தீர்த்து வைத்தார். தாஸ்கணுவை வெளியே அனுப்பியிருக்க வேண்டியதில்லை. நேரிடையாகவே பாபா அதை அவருக்குக் கற்பித்து இருக்கலாம் என்று கூறுவோர்க்கு பாபா சரியான அல்லது மிகச்சிறந்த வழியையே பின்பற்றினார் என்று நாம் கூறுகிறோம். அல்லாவிடில் ஏழைச்சிறுமியும் அவளது புடவையும் கடவுளால் வியாபிக்கப்பட்டு இருக்கிறது என்னும் பெரியதோர் பாடத்தினை தாஸ்கணு எவ்வாறுதான் கற்றிருக்க முடியும்! இவ்வுபநிஷத்தைப் பற்றிய மற்றொரு உயர்ந்த பகுதியைக் கூறி இவ்வத்தியாயத்தை முடிக்கிறோம்.
ஈசாவின் நீதி
ஈசா உபநிஷதத்தின் முக்கிய அம்சங்களுள் ஒன்று அது அளிக்கும் நீதிபோதனைகள்.
நுண்பொருள் கோட்பாட்டியல் நிலைகளைக் குறித்து உபநிஷதங்களில் காணும் முன்னேற்றத்தை அடிப்படையாகக்கொண்டே நிச்சயமாக உபநிஷதத்தின் நீதியும் அமைக்கப்பட்டுள்ளது. உபநிஷதத்தின் ஆரம்ப மொழிகளே கடவுள் எங்கும் வியாபித்திருக்கிறார் என்பதை நமக்கு அறிவிக்கின்றன. இந்த நுண்பொருள் கோட்பாட்டியல் நிலையென்று தெளியப்பட்ட முடிவிலிருந்து கிளைத்தெழும் பிறிதோர் முடிவாக அது அளிக்கும் நீதிபோதனையாவது, அவரே யாண்டும் நிலவியுள்ளார். தனக்குக் கடவுளால் அருளப்பட்ட யாவையும் நிச்சயமாக நன்மைக்காகவே ஆனது என்னும் உறுதியான நம்பிக்கையில் கடவுள் தனக்கு அருளியவற்றை மகிழ்ந்து அனுபவிக்கவேண்டும் என்பதாகும்.
பிறர் பொருளைக் கண்டு பேராசைப்படுவதை உபநிஷதம் தடுக்கிறது என்பது இயல்பாகவே தொடர்ந்து அறியப்படுகிறது. யாதாகினும் கடவுளின் ஆணையேயென்றும் எனவே, அது நமக்கு நன்மையளிக்கும் என்ற நம்பிக்கையில் நமக்குள்ளவைகளைக் கொண்டு நாம் திருப்தியடையவேண்டும் என்று நாம் பொருத்தமாகவே அறிவுறுத்தப்படுகிறோம்.
மற்றுமொரு நீதிபோதனை யாதெனின், சாஸ்திரங்களில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த கர்மங்களை ஆண்டவரது சங்கல்பம் என்று அமைவடக்கத்துடன் ஏற்றுக்கொண்டு, அந்த நம்பிக்கை உள்ள மனப்பாங்குடன் மனிதன் தனது வாழ்நாளை எப்போதும் கர்மம் செய்துகொண்டிருப்பதிலேயே கழிக்கவேண்டும் என்பதேயாகும். செயலின்மை என்பது இவ்வுபநிஷதத்தின்படி, நமது ஆன்மாவை அரிக்கும் புழுவாகும். மனிதன் இம்முறைப்படி கர்மங்கள் புரிவதில் தனது வாழ்நாளைக் கழிக்கும்போது மட்டுமே நிஷ்காம்யம் என்கின்ற முழுநிறை நிலையை எய்துவதை எண்ண இயலும்.
முடிவாக அதன் வாசகங்கள் கூறுவதாவது “ஆத்மாவினுள் அனைத்து ஜீவராசிகளையும், அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் ஆத்மாவையும் காண்பவன் – உண்மையில் அனைத்து ஜீவராசிகளும் மற்றும் உளதாய் இருக்கும் ஒவ்வொரு பொருளும் ஆத்மாவாகவே ஆகிவிட்ட அப்பேர்ப்பட்ட மனிதன் எங்ஙனம் மயக்கநிலைக்கு ஆட்பட இயலும்? ஆழ்ந்த மனத்துயரமடைவதற்கு அவனுக்கு அடிப்படைக் காரணம் யாதாக இருக்க முடியும்?
வெறுப்புணர்வு, சித்தத்தின் மயக்கம், ஆழ்ந்த மனத்துயரம், யாவும் ஆத்மாவை யாண்டும் தரிசிக்க இயலாத நமது பண்பிலிருந்தே கிளம்புகின்றன. ஆயின் எவனொருவன் அனைத்துப் பொருட்களிலும் ஏகத்தையே (ஒருமையையே) தெளிவாக உணர்கிறானோ, எவனுக்கு ஒவ்வொரு பொருளும் ஆத்மாவாகிவிட்டதோ, அதே உண்மையின் காரணமாக மனித இனத்தின் குறைபாடுகளினால், இனி ஒருபோதும் பாதிக்கப்படாதவனாகின்றான்” https://tamildeepam.com/sri-sai-satcharitam-chapter-2/
ஸ்ரீ சாய் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம்.