பாரியன்பன் நாகராஜன் – கவிதைகள்!
நாம் சந்தித்துக் கொண்ட
முதல் சந்திப்பில்
நீ நீயாகவும்
நான் நானாகவும் இருந்தோம்.
நமது அடுத்த சந்திப்பில் தான்
சில மாற்றங்கள் நிகழ்ந்தது.
பிரிதொரு சந்திப்பில்
பெரியதொரு மாற்றங்கள்
நிகழ்ந்தது நமக்குள்.
இறப்பிற்கு முன் நிகழும்
சந்திப்பே நமது இறுதி
சந்திப்பாகும்.
அது எப்போதும் நிகழுமென்று
நம்மில் யாராலும்
அறுதியிட்டு சொல்ல முடியாது.
அன்றைய சந்திப்பில்
நம்மிடையே மாற்றங்கள்
ஏதுமின்றி
விழிகள் கசியும் ஈர துளிகளில்
இதயம் மலர்ந்தும்
அன்புவொன்றே பூத்திருக்க
நம் நட்பின் நறுமணம்
அங்கெங்கும் வியாபித்திருக்கும்.
நன்றி கவிஞர் பாரியன்பன் நாகராஜன்