வாழ்வியல்

கட்டுரை வாழ்வாங்கு வாழ தேவை மனவளம் ! கவிஞர் இரா. இரவி

வாழ்வாங்கு வாழ தேவை மனவளம்

வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவ பெரிதும் தேவை மனவளம் தான். மனவளம் என்றதும் நம் எல்லோரின் நினைவிற்கு வருவது விவேகானந்தர் தான். அவர் தான் மனவளம் குறித்து அரிய பல கருத்துக்களை எழுதியவர்.
உனக்குள் எல்லா வலிமையும் இருக்கிறது. உன்னால் எதையும் சாதிக்க முடியும். நீ தூய்மையுள்ளவனாகவும், வலிமையுள்ளவனாகவும் இருந்தால், நீ ஒருவனே உலகில் உள்ள அனைவருக்கும் சமமானவன் ஆவாய். உயிரே போனாலும் நீ நேர்மையுடன் இரு.
விவேகானந்தர் எழுதியதோடு, பேசியதோடு நில்லாமல் எழுதியபடி வாழ்விலும் கடைபிடித்தவர். முக்கடல் ஆர்ப்பரிக்கும் இடத்தில் அஞ்சாமல் நீந்தியே சென்று தியான மண்டபம் அடைந்தவர்.
சுனாமியால் பல அழிவுகள் நிகழ்ந்த போதும் தியான மண்டபமும், உலகப் பொதுமறை வடித்த திருவள்ளுவர் சிலையும் எந்தவித சேதமின்றி தப்பித்தன. திருக்குறளிடம் சுனாமி தோற்றது. விவேகானந்தரின் வைர வரிகள் அனைத்தும் மனவளம் சார்ந்தவை. இவை அனைத்தும் மாமனிதர் காந்தியடிகள் வாழ்க்கைக்கு முற்றிலும் பொருந்தும்.
காந்தியடிகள் சிறுவனாக, மாணவனாக இருந்த போது, கல்வி அதிகாரி ஆய்வுக்கு வந்து இருந்த போது ஆசிரியரே சக மாணவனை பார்த்து எழுது என்று வற்புறுத்திய போதும் எழுத மறுத்தவர். பின்னாளில் நன்கொடையாக வந்த 50 பவுன் தங்க நகையை கஸ்தூரிபாய் கேட்ட போதும் காந்தியடிகள் தர மறுத்தார். பொதுத் தொண்டுக்காக வந்த கொடையை சொந்தத் தேவைக்கு எடுக்கக் கூடாது, உண்மையாக, நேர்மையாக இருக்க வேண்டும் என்று விளக்கிக் கூறினார். அதனை உணர்ந்த கஸ்தூரிபாயும் அந்த தங்க நகை வேண்டாம் என்று சொன்னார். மனவலிமையுடனும், நேர்மையுடனும், உண்மையுடனும் வாழ்ந்ததன் காரணமாகவே இன்றும் காந்தியடிகள் உலக மக்களால் போற்றப்படுகிறார். ஒபாமாவும் பாராட்டி மகிழ்கிறார்.
மகாகவி பாரதியார் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தவர். செல்லம்மாள் பக்கத்து வீட்டில் கடன் வாங்கி வந்து வைத்த அரிசியை சிட்டுக்குருவிகளுக்கு தந்து மகிழ்ந்தவர். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாடியவர். அச்சமில்லை பாடலை உரக்கப் பாடினாலே, பாடியவருக்கும் அச்சம் அகன்று விடும். மன்னரைப் பார்க்க வந்த போதும் நூல்களை மட்டுமே கொண்டு வந்தவர்.
இந்தியாவின் கடைக்கோடியில் படகோட்டி மகனாகப் பிறந்து, இந்தியாவின் முதற்குடிமகனாக உயர்ந்தவர், செய்தித்தாள் விற்றுப் படித்து தலைப்புச் செய்தியானவர் மாமனிதர் அப்துல்கலாம். அவரிடம் மகிழ்வான நேரம் எது? என்று கேட்ட போது, குடியரசுச் தலைவரான நேரத்தைக் குறிப்பிடவில்லை. போலியோ நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, மிகவும் எடை குறைவாக செயற்கைக்கால் செய்து கொடுத்து, எளிதாக அவர்கள் நடந்த போது மனம் மகிழ்ந்தேன் என்றார். இது தான் மன வளம்.
நாடறிந்த நல்ல எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர், முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள், விதைத்துக் கொண்டே சென்றால் அறுவடை ஒரு நாள் வரும், இயங்கிக் கொண்டே இரு. என்பார். இன்றைய இளைஞர்கள் பலர், ஒரே ஒரு முறை முயற்சி செய்து விட்டு தோல்வி என்றவுடன் மனம் தளர்ந்து விடுகின்றனர். குரங்கு விதை விதைத்து தண்ணீர் ஊற்றி விட்டு மறுநாள் மண்ணைத் தோண்டி விதையை எடுத்துப் பார்த்து முளைக்கவில்லையே என்று வருந்தியது போலவே இன்றைய இளைஞர்கள் பலர் ஒரே முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுகின்றனர். தோல்விக்கு துவளாமல் தொடர்ந்து முயல்வதே மனவலிமை ஆகும்.
வித்தகக் கவிஞர் பா. விஜய், அவமானங்களை சேகரித்து வையுங்கள், அது முன்னோக்கி செலுத்தும் உந்து சக்தி என்பார். யாராவது நம்மை கேலி பேசி அவமானப்படுத்தினால், கோபப்பட்டு திருப்பி பேசாமல், அடிக்காமல், வாழ்வில் வென்று காட்டுவதே சிறப்பு. அதற்கு மனவலிமை அவசியம்.
திரு. பழனியப்பன் என்பவருக்கு, பார்வை இருந்தது. காய்ச்சல் வந்து பார்வை பறிபோனது. அவருக்கு பார்வையின் பயனும், பார்வையின்மையின் துன்பமும் தெரியும். பார்வை பறிபோய் விட்டதே என்று சோகத்தில் நான்கு சுவற்றுக்குள் முடங்கி விடாமல், அகவிழி பார்வையற்றோர் விடுதி தொடங்கி பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு உணவு, உறைவிடம் வழங்கி வருகிறார். மதுரையில், புதூர் காய்கறி மார்க்கெட் அருகில் உள்ள அந்த விடுதியில் தங்கி, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டம் பயின்று வருகிறார்கள் மாணவர்கள். பழனியப்பன் அவர்களின் தொண்டுள்ளத்திற்கு காரணம் மனவலிமை. அவரை சந்திக்கும் போதெல்லாம் எனக்குள் மனவலிமை பிறக்கும். நாமும் பிறருக்கு பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும்.
மூன்று தலைமுறை பாடலாசிரியர் காவியக் கவிஞர் வாலி பாடல் எழுத முயற்சி செய்து விட்டு முடியாமல் சொந்த ஊர் செல்ல முடிவு எடுத்த போது கவியரசு கண்ணதாசனின் பாடலான, மயக்கமா? கலக்கமா? பாடலில் உள்ள உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்ற வைர வரிகளை கேட்டபின் முடிவை மாற்றிக் கொண்டு திரும்பவும் முயற்சி செய்து திரைத்துறையில் வென்றார். வெற்றிக்குக் காரணம் மனவலிமை. நமக்குக் கீழ் உள்ளவர்களைப் பார்த்து ஆறுதல் அடைவதும், நமக்கு மேல் உள்ளவர்களைப் பார்த்து பெருமை கொள்வதும் மனவலிமை.
ஒரு சீப்பு வியாபாரி தனது மூன்று மகன்களில் திறமையானவருக்கு அடுத்த பொறுப்பை ஒப்படைக்கலாம் என்று நினைத்து மூவரிடமும், அருகில் உள்ள புத்தமடத்தில் சீப்பு விற்று வாருங்கள் என்றார். முதல் மகன், புத்தமட பிட்சுகள் அனைவருக்கும் மொட்டைத் தலை, அவர்களிடம் சீப்பு விற்பதா? இயலாத செயல் என்று சொல்லி விட்டான். இரண்டாவது மகன், புத்தமடம் சென்று புத்த பிட்சுகளை சந்தித்து சீப்பு என்பது தலைவார மட்டுமல்ல, அரித்தால் சொறியவும் பயன்படுத்தலாம் என்று சொல்லி 50 சீப்புகள் விற்க ஏற்பாடு செய்து வந்தான். மூன்றாவது மகன், புத்தமடத் தலைவரிடம் ஒரு சீப்பைக் காட்டினான். இந்த சீப்பில் புத்தரின் போதனையான ஆசையே அழிவுக்குக் காரணம்? அச்சடித்துள்ளேன். தினமும் இங்கு வரும் பக்தர்களுக்கு நன்கொடையாக வழங்குங்கள். புத்தரின் பொன்மொழியையும் படிப்பார்கள் என்றான். புத்தமடத்தின் தலைவர் 5000 சீப்புகள் வழங்கிட ஆணை வழங்கினார். வியாபாரி மூன்றாவது மகனிடம் பொறுப்பை வழங்கினார். உடன்பாட்டுச் சிந்தனையும் வித்தியாசமான சிந்தனையும் வெற்றிக்கு வழிவகுக்கும்.
ஒரு தீவில் காலணி விற்க சென்று பார்த்து வரும்படி ஒரு விற்பனை முகவரை அனுப்பி வைத்தனர். அவர் அந்தத் தீவை சுற்றிப் பார்த்து விட்டு வந்து அங்கே காலணி அணியும் பழக்கம் யாருக்குமே இல்லை. ஒரு காலணி கூட விற்க முடியாது என்றார். பின், மற்றொரு முகவரை அனுப்பி வைத்தனர். அவர் சுற்றிப்பார்த்து விட்டு வந்து 500 ஜோடி காலணிகள் கொடுங்கள் என்றார். ஒருவரிடமும் காலணிகள் இல்லை, அவர்களிடம் காலணிகளின் பயனை எடுத்துக் கூறினேன். வாங்கிக் கொள்வதாக சொன்னார்கள் என்றார். நேர்முகமான சிந்தனையே மனவலிமை.
குரு ஒருவர் ரோஜாச் செடியை காண்பித்து சீடரிடம் என்ன தெரிகிறது என்றார். செடி முழுவதும் முட்களாக இருக்கின்றன என்றார். மற்றொரு சீடரிடம் கேட்டார். ரோஜா மலர் மலர்ந்து, சிரித்து நம்மை வரவேற்கின்றது என்றார். ஒரே பொருள் இருவருக்கும் பார்வை மாறுபடுகின்றது. அதனால் தான் எதையும் நேர்முகமாக பார்க்கும் பார்வையை வழங்குவது மனவலிமை.
எடிசன், ஓர் அரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்து தனது உதவியாளரிடம் கொடுத்து அருகே வைக்கச் சொன்னார். கை தவறி கீழே போட்டு விட்டார். உடைந்து விட்டது அருகில் நின்றவர் கேட்டார் உதவியாளர். உடைத்து விட்டாரே, நீங்கள் ஏன் திட்டவில்லை என்றார். அதற்கு எடிசன் சொன்னார். உடைந்த பொருளை என்னால் திரும்பவும் உருவாக்க முடியும். ஆனால் நான் திட்டி அவர் மனம் உடைந்தால் அதை எதனாலும் ஒட்ட முடியாது என்றார். இந்த மனநிலை பலருக்கு வர வேண்டும். எடிசனின் ஆய்வுக்கூடம் தீப்பற்றி எரிந்து நாசமானது. அதற்கும் அவர் கலங்கவில்லை. நடந்து முடிந்த செயலுக்காக கவலை கொள்வதில் பயனில்லைஎன்பதை நன்கு அறிந்திருந்தார். அதனால் தான் அவரால் பல கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்க முடிந்தது. காரணம் மனவலிமை.
மண்வளம் என்பது பயிர் வளர்க்கும். மனவளம் என்பது உயிர் வளர்க்கும். நிம்மதியாக வாழ வழி சொல்லுங்கள் என்று குருவிடம் ஒரு சீடன் கேட்டான். அதற்கு குரு சொன்னார். நான் சிந்திக்கும் போது சிந்திக்கிறேன், பேசும் போது பேசுகிறேன், உண்ணும் போது உண்ணுகிறேன், உறங்கும் போது உறங்குகிறேன். இவற்றைக் கடைபிடி என்றார். சீடனுக்கு வியப்பு! நாமும் அப்படித்தானே செய்கிறோம் என்று குருவிடம் சொன்னான். நீ உண்ணும் போதும் ஏதாவது சிந்திப்பாய், உறங்கும் போதும் ஏதாவது சிந்திப்பாய், அதனால் நிம்மதி இழப்பாய், எந்த ஒரு செயலையும் ஈடுபாட்டுடன் ஒருமுகமாக செய்தல் வேண்டும் என்றார்.
பணம் இருந்தால் மகிழ்ச்சி, நிம்மதி நிலவும் என்று சிலர் தவறாக எண்ணுகின்றனர். பணக்காரர்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்கிறார்களா? என்றால் இல்லை. குறுக்கு வழியில் கோடிகளை ஈட்டி விட்டு எப்போது மாட்டுவோம் என்ற பயத்தில் நிம்மதி இழந்து, மகிழ்ச்சி இழந்து, தூக்கம் இழந்து இயந்திரமாகவே, நடைப்பிணமாகவே வாழ்ந்து வருகின்றனர் என்பதே உண்மை. மனம் வளமாக இருந்தால் உடல் நலமாக இருக்கும். உடல்நலத்தையும், மனவளமே முடிவு செய்கின்றது.
மனம் குறித்து நம் நாட்டில் பல பழமொழிகள் உள்ளன. அவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மனவலிமை, மனவளம் வெற்றிக்கு வழிவகுக்கும்.
மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம்.
மனம் போல் வாழ்வு, மனம் ஒரு கோயில், மனம் எனும் மகாசக்தி, மனம் எனும் மந்திரச்சாவி. இந்தத் தலைப்புகளில் பல்வேறு நூல்களும் வந்து விட்டன.
மனம் ஒரு குரங்கு என்று ஒரு பழமொழி உண்டு. ஆம், மனம் குரங்கு தான். அடிக்கடி தாவும், அதனைக் கட்டுப்படுத்துவது நம் கடமை. ஒவ்வொரு மனிதனின் மனதிலும் தேவதையும் உண்டு, மிருகமும் உண்டு, தேவதை சொல்வது போல நடந்தால் மகிழ்ச்சி, நிம்மதி நிலவும், வாழ்வாங்கு வாழலாம். ஆனால் மனதில் உள்ள விலங்கு சொல்வது போல நடந்தால் நம்மை மற்றவர்கள் மனிதனாகப் பார்க்காமல் விலங்கு என்றே எண்ணுவார்கள்.
செய்தித்தாளில் படித்த தகவல் ஒன்று. நீ புலியாக வேண்டுமானால், உடலில் கோடு போடுவதால் பயனில்லை, முதலில் நீ ஒரு புலி என்பதை நீ நம்ப வேண்டும்.
இதைத்தான் விவேகானந்தர், நீ என்னவாக விரும்புகின்றாயோ அதுவாகவே ஆகின்றாய். உன்னை பலமானவன் என்று நீ நினைத்தால் பலமானவன், உன்னை பலவீனமானவன் என்று நீ நினைத்தால் பலவீனமானவன் ஆவாய் என்கிறார்.
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் முதலில் மனவலிமை வேண்டும். பிறந்தோம், இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை. சாதித்து சிறப்பதே வாழ்க்கை என்பதை உணர வேண்டும். தன்னம்பிக்கைக்கும், தலைக்கனத்திற்கும் நூலிழை தான் வேறுபாடு. என்னால் முடியும் என்று எண்ணுவது தன்னம்பிக்கை. என்னால் மட்டுமே முடியும் என்று எண்ணுவது தலைக்கனம்.
இந்த உலகில் மிகவும் நேசிக்கும் நபர் யார்? என்று கேட்டால் அப்துல்கலாம் என்றும், அன்னை தெரசா என்றும், அப்பா என்றும், அம்மா என்றும், மனைவி என்றும், குழந்தை என்றும், காதலி என்றும், நண்பன் என்றும் சொல்வார்கள். ஆனால் என்னிடம் யாராவது இந்தக் கேள்வி கேட்டால் இந்த உலகில் மிகவும் நேசிக்கும் நபர் யார்? என்றால் என்னைத் தான் சொல்வேன். ஆம், முதலில் உங்களை நீங்கள் நேசிக்க வேண்டும், அதற்கு அடுத்துத்தான் நீங்கள் நேசிக்கும் மற்றவரை சொல்ல வேண்டும். உன்னை நீ விரும்பு, உன்னை நீ நேசி, உங்களை நினைத்து நீங்களே பெருமை கொள்ள வேண்டும்.
தோல்விக்கு துவளாத உள்ளம் வேண்டும், கவலை கொள்ளாத உள்ளம் வேண்டும், பிறருக்கு உதவிடும் உள்ளம் வேண்டும், மனம் என்றால் இதயம் என்று தவறான கற்பிதம் உள்ளது. மனத்தின் இருப்பிடம் மூளை தான். இன்று இதயம் மாற்று அறுவைச்சிகிச்சை செய்கின்றனர். அவர்களின் மனம் மாறுவதில்லை, நினைவு அகல்வதில்லை, இது புரியாமல் இன்றைக்கும் திரைப்படப் பாடலாசிரியர் இதயம், இதயம் என்றே பாடல் எழுதுகின்றனர். மனத்தை வளமையாக்கி, வலிமையாக்கி மண்ணில் நல்லவண்ணம் வாழ்வோம் நாம் .

நன்றி 
கவிஞர் இரா.இரவி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *