உலகம்தொழில்நுட்பம்

ஆரக்கிளுக்கு டிக்டாக் விற்கப்படாது: சீன ஊடகம் தகவல், மௌனம் காக்கும் நிறுவனம் | ByteDance not to sell TikTok’s US operations to Oracle: CGTN

ஆரக்கிளுக்கு டிக்டாக் விற்கப்படாது: சீன ஊடகம் தகவல். 

டிக்டாக்கின் அமெரிக்க செயல்பாட்டுப் பிரிவை ஆரக்கிள் நிறுவனம் வாங்கவுள்ளதாக வந்த தகவல் பொய் என்றும், அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், சீன அரசு நடத்தும் ஆங்கில தொலைக்காட்சி சேனலான சிஜிடிஎன் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம், பாதுகாப்புக் காரணங்களுக்காக டிக்டாக் உட்பட 58 சீன செயலிகளை இந்தியா தடை செய்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகம், டிக்டாக்கின் அமெரிக்க பிரிவு செயல்பாடுகளை செப்டம்பர் மாதத்துக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்கவில்லையென்றால், டிக்டாக் செயலி அமெரிக்காவிலும் தடை செய்யப்படும் என்று பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தது.

இந்நிலையில் திங்கட்கிழமை காலை அன்று, ஆரக்கிள் நிறுவனத்துக்கு டிக்டாக்கின் அமெரிக்க பிரிவை, டிக்டாக்கின் உரிமையாளரான பைட் டான்ஸ் நிறுவனம் விற்றுவிட்டதாக செய்திகள் வந்தன. இன்னொரு பக்கம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், டிக்டாக்கை வாங்க தாங்கள் எடுத்த முயற்சிகளை பைட் டான்ஸ் நிறுவனம் ஏற்கவில்லை என்றும் அறிக்கை வெளியிட்டது.

ஆனால் தற்போது பைட் டான்ஸ் நிறுவனம் ஆரக்கிள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட எந்த அமெரிக்க நிறுவனத்துக்கும் தங்களது அமெரிக்க பிரிவையோ, சோர்ஸ் கோட் (Source Code) என்று சொல்லப்படும் செயலிக்கான ஆணைகளையோ விற்கவில்லை என்று சீன அரசுக்குச் சொந்தமான ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பைட் டான்ஸ் தரப்பிலிருந்து இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *