ஆரோக்கியம்செய்திகள்நம்மஊர்

இன்று உலக மனநல தினம்: அனைத்து தரப்பினரையும் சமமாக பாதிக்கும் மனநல பிரச்சினை | world mental health day

மனநலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்.10-ம் தேதி உலக மனநல தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் ‘சமத்துவமற்ற உலகில் மனநலம் பேணுதல்’ என்பதாகும்.

மனநலப் பிரச்சினைகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து புதுக்கோட்டை மாவட்ட மனநல திட்டஅலுவலர் ஆர்.கார்த்திக் தெய்வ நாயகம், ‘இந்து தமிழ்’ நாளித ழிடம் கூறியதாவது:

பொருளாதார ஏற்றத்தாழ்வு

ஒவ்வொருவரின் மனநலத்தின் மீது சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும், அதற்கான காரணிகளையும் ஆராய்ந்து மனநலத்தை மேம்படுத்த முடியும்.

பிரச்சினையானது ஏழை, பணக்காரர், நகரம், கிராமம் என்ற வேறுபாடின்றி அனைவரையும் சமமாக பாதிக்கக்கூடியது. பெரும்பான்மை யான கிராம மக்களைக் கொண்ட நம் நாட்டில், நகரங்களில் மட்டுமேமனநல மருத்துவம் எளிதாக கிடைக்கிறது. குறிப்பிட்ட பகுதிகளில் அரசு சாரா தன்னார்வ நிறுவனங்கள் மனநல சேவையை வழங்குகின்றன. எனினும், அவர்களது சேவையானது, பெறப்படும் நன்கொடையின் அளவைப் பொறுத்தே அமைகிறது.

இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் மத்திய அரசின் நிதியுதவியுடன், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மனநல திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம், நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிதல், அவசர மற்றும் தொடர் சிகிச்சை, ஆதரவற்ற மனநோயாளிக்கு பாதுகாப்புடன்கூடிய சிகிச்சை மற்றும் மனநலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மேலும், கிராம மக்களுக்கு எளிதாக மனநல மருத்துவத்தை வழங்குவதற்காகத் தொலைதூர மனநல மருத்துவர் பணியிடம் உருவாக்கப்பட்டு, அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மனநலப் புறநோயாளிகள் பிரிவு செயல்படுகிறது.

ஆர்.கார்த்திக் தெய்வநாயகம்

ஆதரவற்று சாலையில் சுற்றித்திரியும் மனநல நோயாளிகளை மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையம் மூலம் மீட்டு, சிகிச்சைஅளிக்கப்படுகிறது. புதுக்கோட்டைமாவட்டத்தில் இப்பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காக பல்வேறு துறை அலுவலர்களை உள்ளடக்கி மீட்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கல்லூரி அளவில் தூதுவர் குழுவும் செயல்பட்டு வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வியாழன்தோறும் சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக ‘மனநல வியாழன்’ எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தலைமை மற்றும் தாலுகா அரசு மருத்துவமனைகளில் மனநல சேவை தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. மனநல திட்டத்தின் மூலம் நீட் தேர்வு எழுதிய 1.10 லட்சம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தங்களுடைய மனநல சிக்கலை வெளிப்படையாக சொல்லமுடியாமல் தவிக்கும், குரலற்றவர்களின் குரலாக மாவட்ட மனநல திட்டம் செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *