திமுக உட்கட்சித் தேர்தல்: மாவட்டச் செயலர் பதவிக்கு 2-வது நாளாக மனுதாக்கல் | DMK internal party election
சென்னை: திமுக உட்கட்சித் தேர்தலையொட்டி, 2-வது நாளாக மாவட்டச் செயலர் பதவிக்கு நேற்று வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தமிழகத்தில் திமுக நிர்வாக ரீதியிலான 72 மாவட்டங்களின் செயலர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.
முதல் நாள் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கான மனுக்கள் பெறப்பட்டன.
தொடர்ந்து நேற்று, நீலகிரி, ஈரோடு வடக்கு, தெற்கு, திருப்பூர் வடக்கு, தெற்கு, கோவை வடக்கு, தெற்கு, மாநகர், கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு, தருமபுரி கிழக்கு, மேற்கு, நாமக்கல் கிழக்கு, மேற்கு, சேலம் கிழக்கு, மேற்கு, மத்திய மாவட்டம், கரூர், திருச்சி வடக்கு, தெற்கு, மத்திய மாவட்டம் உள்ளிட்ட 21 மாவட்டங்களுக்குப் போட்டியிடுவோரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
அமைச்சர்கள் மனு: அமைச்சர்கள் சு.முத்துசாமி (ஈரோடு தெற்கு), செந்தில் பாலாஜி (கரூர்), அன்பில் மகேஸ் பொய்யாமொழி (திருச்சி தெற்கு) ஆகியோர், அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, இணை அமைப்புச் செயலர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா ஆகியோரிடம் மனுக்களை வழங்கினர்.
அதேபோல, முன்னாள் அமைச்சரும், அதிமுகவிலிருந்து அமமுக சென்று, பின்னர் திமுகவில் இணைந்துள்ள பழனியப்பன், தருமபுரி மேற்கு மாவட்டச் செயலர் பதவிக்கு மனு அளித்துள்ளார். இதுதவிர, டி.எம்.செல்வகணபதி (சேலம் மேற்கு), ராஜேந்திரன் (சேலம் மத்திய மாவட்டம்), மதுரா செந்தில் (நாமக்கல் மேற்கு), ராஜேஷ்குமார் (நாமக்கல் கிழக்கு) ஆகியோரும் மனுக்களை அளித்தனர்.
நீலகிரி மாவட்டச் செயலர் பதவிக்குப் போட்டியிடும் முபாரக், வனத் துறை அமைச்சர் க.ராமச்சந்திரனுடன் வந்து மனுவை வழங்கினார். வரும் 25-ம் தேதி வரை மனுக்கள் பெறப்பட்டு, 30-ம் தேதி தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் வெளியாகும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முதல்வர் ஆலோசனை: இதற்கிடையில், நேற்று அரசு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு அறிவாலயம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், நேற்று முன்தினம் மாவட்டச் செயலர் பதவிக்குப் போட்டியிட மனு அளித்த போட்டி வேட்பாளர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
துணைப் பொதுச் செயலர் பதவி: சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியதால் காலியாக உள்ள திமுக துணைப் பொதுச் செயலர் பதவிக்கு கனிமொழி, கீதா ஜீவன், புதுக்கோட்டையைச் சேர்ந்த விஜயா ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டன. ஆனால், கனிமொழி, கீதாஜீவன் இருவரும் விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை விஜயா நேற்று அறிவாலயம் வந்து, முதல்வரை சந்தித்துச் சென்றார்.