இன்று சந்திர கிரகணம் 2022
சந்திர கிரகணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கு முக்கிய கோயில்களின் நடைகள் சாத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று சந்திர கிரகணம் நிகழ உள்ளது. மதியம் 2.39 மணிக்கு தொடங்கும் கிரகணம் மாலை 6.29 மணி வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய ஸ்தலங்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், தி.நகர் திருமலை தேவஸ்தானம் உள்ளிட்ட கோயில்களின் நடை சாத்தப்படும். அதேபோல திருச்சி ரங்கநாதர் கோயில், தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர்கோயில், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆகிய கோயில்களின் நடையும் சாத்தப்படும்.
இதையும் படிங்க: திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்கிறீர்களா? உகந்த நேரம் இதோ…!
சந்திர கிரகணம் தொடங்குவதற்கு முன் வரை திறந்திருக்கும் கோயில் நடைகள் கிரகணம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் சாத்தப்பட்டு, பின்னர் கிரகணம் முடிந்த பிறகு மாலை 6.29 மணிக்கு மேல் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் நடை திறக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய மக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கூறப்படுகிறது.