செய்திகள்நம்மஊர்

புதுக்கோட்டை | சாதி ஆதிக்கக் கொடூரத்தை செய்தவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்: வைகோ | Govt should crack down on social stigma with an iron fist: Vaiko insists

சென்னை: “புதுக்கோட்டையில் சாதி ஆதிக்கக் கொடூரத்தை செய்த கொடியவர்கள் எவராக இருந்தாலும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”புதுக்கோட்டை மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூரில் உள்ள வேங்கை வாசல் தெருவில் வசிக்கும் பட்டியல் சமூக மக்கள் குடிநீருக்காக நீண்ட காலம் போராடி வந்த நிலையில் 2016-இல் அங்கு குடிநீர்த் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த குடிநீரைக் குடித்த சிறுவர்கள் உடல் நலன் கெட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவர்கள் குடிநீரால்தான் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தனர். பின்னர் வேங்கை வாசல் குடிநீர்த் தேக்கத் தொட்டியிலிருந்த தண்ணீரை ஆய்வு செய்த போது அதில் மனித மலம் கலந்து இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இறையூருக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் விரைந்து சென்று நேரில் ஆய்வு நடத்தி உள்ளார். அப்போது, பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் கயவர்கள் சிலர் மலம் கழித்து வந்தது வெளிப்பட்டது. இக்கொடூரக் குற்றத்தை செய்த அழுக்கு மனம் படைத்தோர் நாகரிக மனித சமூகத்தில் வாழவே தகுதி அற்றவர்கள். இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது; வெட்கக்கேடானது; இந்த சாதி ஆதிக்கக் கொடூரத்தை செய்த கொடியவர்கள் எவராக இருந்தாலும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும்.

அதுமட்டுமல்ல அதே ஊரில் கோவிலுக்குள் பட்டியல் சமூக மக்கள் அனுமதிக்கப்படுவது இல்லை என்பதை அறிந்த மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் துறை அதிகாரியும் பட்டியல் இன மக்களை கோவிலின் உள்ளே அழைத்துச் சென்று வழிபடச் செய்து, தீண்டாமைக் கொடுமையை தகர்த்து உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல ஊர்களில் தேநீர் கடைகளில் இரட்டைக் குவளை முறை பயன்படுத்தப் படுகின்ற கொடுமையும் நடக்கிறது.

காலம் காலமாகப் புரையோடிக் கிடக்கும் சாதி ஆதிக்க வன்மம், ஒடுக்கப்பட்ட, பட்டியல் இன மக்கள் மீதான தீண்டாமை கொடுமை பல வகைகளில் தொடர்ந்து வருவது நாட்டிற்கே பெருத்த அவமானம்; தலைக்குனிவு ஆகும். தமிழக அரசு, சாதிவெறி கொண்டு அலையும் ஆதிக்கவாதிகளை இனம் கண்டு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இத்தகைய சமூக இழிவுகளை இனி எவரும் கனவிலும் நினைக்கக் கூடாத நிலையை தமிழ்நாட்டில் ஏற்படுத்த வேண்டும்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *