ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு: தமிழக அரசு பரிசீலனை | Insuring bulls participating in jallikattu will be considered: Minister Raghupathi
புதுக்கோட்டை: “ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தவதற்காக காப்பீடு செய்யப்படுவதைப் போல, போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் காப்பீடு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தமிழ்நாட்டில் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியை புதுக்கோட்டையில் உள்ள தச்சங்குறிச்சியில் வரும் ஜனவரி 6-ம் தேதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக பலரும் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்பித்துவிட்டனர். ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஒழுங்குப்படுத்துவதற்காகவே ஆன்லைன் பதிவு செய்யப்படுகிறது. எனவே, அதுகுறித்து விவாதிக்க வேண்டிய தேவை இல்லை. காப்பீடு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, போட்டிகளை நடத்துபவர்களை காப்பீடும் செய்கின்றனர். வரும் காலங்களில் போட்டி நடத்தவதற்காக விழா அமைப்பாளர்கள் காப்பீடு செய்வதைப் போல, போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் காப்பீடு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்” என்றார்.
முன்னதாக, “ஆன்லைன் சூதாட்ட தடை குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் தொடர்பாக 15 நாட்களுக்குள் மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டுள்ளது. அதை முழுவதுமாக நான் இன்னும் படித்துப் பார்க்கவில்லை. அதை படித்துபார்த்த பின்னர்தான் கருத்து சொல்ல முடியும்.
ஆன்லைன் ரம்மி தொடர்பான வழிகாட்டுதல்கள் ஆன்லைன் ரம்மி நிறுனங்களையோ, ஆன்லைன் சூதாட்டங்களை நடத்துகிறவர்களையோ பாதுகாக்கும் சட்டமாக இருந்துவிடக்கூடாது. முழுமையாக ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நோக்கம். அதை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்” என்று அவர் கூறினார்.