உழவனின் உள்ளம் பூரித்து மகிழ வேண்டும் உழவன் செழித்தால் உலகம் செழிக்கும்! தைப்பொங்கல்
உழவனின் உள்ளம் பூரித்து மகிழ வேண்டும் உழவன் செழித்தால் உலகம் செழிக்கும்!
உழவன் சிரிக்க வேண்டும் சிரிக்க வைப்போம் உதவிடுவோம் உழவிற்கு உதவிக்கரம் நீட்டிடுவோம்!
உலகத்தமிழர்கள் யாவரும் ஓரணியில் திரண்டிடுவோம் ஒப்பற்ற தமிழை யாவரும் உயர்த்திப் பிடித்திடுவோம்!
உலகின் எந்த மூலையில் வாழ்ந்திட்ட போதிலும் உன்னத தமிழில் பேசுவோம் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்! தைப்பொங்கல்
முதல் மொழிக்குச் சொந்தக்காரர்கள் தமிழர்கள் முந்தைய மொழிகள் அனைத்திற்கும் முந்தையது நம் தமிழ்!
தமிழர்களின் திருநாள் தைத்திங்கள் நன்னாள் தரணி முழுவதும் கொண்டாடி மகிழ்வோம்!
கதிரவனுக்கு நன்றி சொல்லும் பொன்னாள் காளைகளுக்கும் நன்றி உரைக்கும் நன்னாள்!
செம்மொழிகள் அனைத்திற்கும் தாய்மொழி தமிழ்மொழி செம்மாந்து தமிழர்கள் மார்தட்டி கூறிடுவோம்!
முதல்மனிதன் பேசியது தமிழ் உரைத்தார் பாவாணர் மூடநம்பிக்கைகள் ஒழித்து பகுத்தறிவை வளர்த்திடுவோம்!
யானைகட்டி போரடித்து உழவுசெய்தவன் தமிழன் யாவரும் கேளீர் யாதும் ஊரே என்றவன் தமிழன்! தைப்பொங்கல்
விலங்குகளிடம் நேசம் பாசம் காட்டியவன் தமிழன் வேறுபாடு காணாமல் சகோதரர்களாகப் பழகுபவன்!
வேற்றுமையிலும் ஒற்றுமை கண்டு வாழ்பவன் தமிழன் வெற்றிவாகை சூடி பீடுநடை போடுபவன் தமிழன்!
தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா! தரணி வியக்கும் தமிழனடா! ஒன்றுபடுவோம்! சாதிப்போம்.
– கவிஞர் இரா. இரவி.

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982