மோகனூர் மணல் குவாரி, சேமிப்புக் கிடங்கில் முறைகேடு: அமலாக்கத் துறை சோதனை | Mohanur sand quarry, warehouse malpractice: Enforcement Directorate raid
நாமக்கல்: மோகனூர் அருகே ஒருவந்தூரில் உள்ள மணல் குவாரி மற்றும் செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள மணல் சேமிப்புக் கிடங்கில் மத்திய அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூரில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைந்துள்ளது. அங்கு எடுக்கப்படும் மணல் மோகனூர் அடுத்த செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள சேமிப்புக் கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின் அங்கிருந்து விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. குவாரி ஒப்பந்தக்காராக புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமையாவும், சேமிப்புக் கிடங்கு ஒப்பந்தகாரராக அதே மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவரும் உள்ளனர். இம்மணல் குவாரியில் முறைகேடாக மணல் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைனில் பதிவு செய்பவர்களுக்கு வழங்கவில்லை என புகார் எழுந்தது.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் 10 பேர் செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள மணல் சேமிப்புக் கிடங்கு மற்றும் ஒருவந்தூர் மணல் குவாரியிலும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். காலையில் தொடங்கிய சோதனை மாலை 5 மணியை கடந்தும் நடைபெற்று வருகிறது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.