தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல் | Chance of rain in Tamil Nadu for 6 days – Information from Meteorological Department
Chance of rain in Tamil Nadu for 6 days – Information from Meteorological Department
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஆக. 13) சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, நாளை முதல் வரும் 18-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.
ஆக. 12-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக புதுக்கோட்டையில் 12 செ.மீ., தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 11 செ.மீ., மதுரை மாவட்டம் தனியமங்கலம், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ., தேனி மாவட்டம் அரண்மனைப்புதூரில் 9 செ.மீ., திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மதுரை மாவட்டம் சத்தியார், ஆத்தூர் ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.