செய்திகள்நம்மஊர்

நாமக்கல் அருகே அருந்ததியர் குடியிருப்பில் முதல்வர் திடீர் ஆய்வு – அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார் | CM Stalin visits Arunthathiyar houses near namakkal

நாமக்கல்: நாமக்கல் அருகே சிலுவம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டு அவர்களது குறைகளை கேட்டறிந்ததுடன் அவர்களிடம் கலந்துரையாடினார். முதல்வரின் திடீர் வருகை அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

நாமக்கல்லில் இன்று உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். முன்னதாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் நேற்றுமுன்தினம் மதியம் கரூரில் இருந்து நாமக்கல்லுக்கு வந்தார். பின், நாமக்கல் – திருச்செங்கோடு செல்லும் சாலையில் உள்ள சிலுவம்பட்டி ஊராட்சி அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது 3 சதவிகித உள் ஒதுக்கீட்டில் மருத்துவம், பொறியியல் மற்றும் பல்வேறு உயர்கல்வி பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின், அங்குள்ள ஹோமியோபதி மருத்துவர் ஜெயபிரகாஷ் என்பவரது வீட்டிற்கு சென்று தேநீர் அருந்தி அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கல்வி குறித்த விவரங்களையும், அக்குடியிருப்பில் எத்தனை குடும்பங்கள் உள்ளன என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

அப்போது மருத்துவர் ஜெயபிரகாஷ், அவரது மனைவி எம். தரணி பிரபா பி.எஸ்.சி., பி.எட் படித்து முடித்து தற்போது எம்.எஸ்.சி., முடிக்கும் தருவாயில் உள்ளதாக தெரிவித்தார். மேலும், குடியிருப்பில் குடிநீர் வசதி, மின்சார வசதி போன்றவை குறித்தும் கேட்டறிந்தார். அப்போது ஜெயபிரகாஷ் குடும்பத்தினர் முதல்வருக்கு தேநீர் வழங்கினர். தேநீர் அருந்தியபடி உரையாடி முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கோவை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வரும் கவின் என்ற மாணவனுடனும், புதுக்கோட்டையில் மருத்துவம் படித்து செல்வி தாரணி என்ற மாணவியுடனும் உரையாடினார்.

மேலும், மேற்படிப்பு குறித்து கேட்டறிந்து, கல்வி தான் ஒருவருக்கு மிகப்பெரிய செல்வம், யாராலும் அழிக்க முடியாதது கல்வி தான், எனவே நன்கு உயர்கல்வி படித்து சமுதாயத்திற்கும், மாநிலத்திற்கும் சேவை ஆற்றிட வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து அங்குள்ள பழனி என்பவரது வீட்டிற்கு சென்ற முதல்வர் அவரது பேத்தி சமிக்ஷாவிடம் அவரது படிப்பு குறித்து கேட்டார். அதற்கு அம்மாணவி 10ம் வகுப்பு படித்து வருவதாக தெரிவித்தார்.

அப்போது நன்கு படித்து உயர்கல்வி பயில வேண்டுமென்றும், உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்து கொடுக்கும் எனவும் முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களிடம் அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்து, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். முதல்வரின் திடீர் வருகை அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது. ஆய்வின்போது நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் உள்பட உயர் அலுவர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *