அமைச்சர் நேருவின் பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்தில் இன்று புகார்: அண்ணாமலை தகவல் | Complaint to Election Commission about Minister Nehrus speech
கோவை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா குறித்தும், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் குறித்தும் அமைச்சர் நேரு பேசியுள்ள பேச்சு எடிட் செய்யப்படாத வீடியோவுடன் இன்று தேர்தல் ஆணையத்தில் புகாராக அளிக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை ஈச்சனாரி விநாயகர் கோயிலில் இருந்து பழநிக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேற்று மாலை பாதயாத்திரை மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக நன்றாக வளர வேண்டும் என எம்எல்ஏ வானதி சீனிவாசன் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தார். இன்று அக்கோரிக்கையை நிறைவேற்ற அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
அரசியல் பணிகளுக்கு இடையே 105 கிமீ தூரம் 3 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். மிகப்பெரிய நெஞ்சுறுதி கொண்டவர். நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு ரசித்து பார்த்த அரசியல் தலைவி. அவரது பயணம் சரித்திர புனித பயணமாகும்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா செய்வது குறித்தும், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் குறித்தும் அமைச்சர் நேரு பேசியுள்ளார். பாஜக சார்பில் மூத்த நிர்வாகிகள், எடிட் செய்யப்படாத வீடியோவுடன் இன்று தேர்தல் ஆணையத்தில் இதை புகாராக அளிக்க உள்ளனர்.
டி.ஆர்.பாலு, பழமையான கோயில்களை இடித்தது குறித்து பேசிய வீடியோவை நாங்கள் எடிட் செய்யவில்லை. இதுகுறித்து அமைச்சர் வேலு அளித்துள்ள புகாரை மறுக்கிறேன்.
கே.என்.நேருவின் நடவடிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். கோயிலுக்கு செல்வது தொடர்பாக சேலத்தில் பட்டியல் இன சகோதரரை திமுக பிரமுகர் ஆபாசமாக திட்டியுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் இன்று மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
சமூக நீதி குறித்து பேச திமுக கட்சியினருக்கு என்ன தகுதி இருக்கிறது. புதுக்கோட்டையில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் தொடர்பாக இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்க உள்ளது. 2 நாட்களில் கட்சியின் நிலைப்பாடு தெரிவிக்கப்படும். ஏற்கெனவே பண பட்டுவாடா தொடங்கப்பட்டுள்ளது. பாஜகவை பொறுத்தவரை இந்த தேர்தலில் பலத்தை காட்டுவதை விட ஒரு வலுவான வேட்பாளர் நிற்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
முன்னதாக, ஈரோட்டில் நேற்று பேசிய அமைச்சர் எ.வ.வேலு, தோழமைக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது குறித்து, ஈவிகேஎஸ் இளங்கோவனிடம், அமைச்சர் நேரு பேசிக் கொண்டு இருந்தார். அதை அமைச்சர் நேருவும், இளங்கோவனும் பண விநியோகம் குறித்து பேசுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பிவிட்டனர். வேண்டுமென்றே திட்டமிட்டு ‘மார்பிங்’ செய்து இதனை பரப்பியுள்ளனர் என்றார்.