பெண் குழந்தைகள் தினம். மகளுக்கு ஒரு கடிதம்! கவிஞர் இரா. இரவி.
மகளே நீ பிறந்ததும் பெண்ணா என்று
முகம் சுளித்தவர்கள் இன்று வியந்து பார்க்கின்றனர்!
பொட்டைப் பிள்ளையை படிக்க வைக்கிறான் என
புறம் பேசியவர்கள் இன்று பிரமித்து விட்டனர்!
செல்லம் தந்து கெடுக்கின்றான் என்றவர்கள்
சொந்தம் எங்கள் சொந்தமென்று பாராட்டுகின்றனர்!
மேல்படிப்பு எதற்கென்று மட்டம் தட்டியவர்கள்
மனதார பாராட்டி மகிழ்கின்றனர் உன்னை!
வெளியூருக்கு படிக்க அனுப்புகின்றான் என்று என்னை
வாயுக்கு வந்தபடி பேசியவர்கள் வாயடைத்து விட்டனர்!
ஒத்தையிலே அனுப்புறான் சமைந்த புள்ளையை என்றோர்
ஓகோ என்று புகழ்கின்றனர் மகளே உன்னை!
தடைகளைத் தகர்த்து சாதித்து பெயர் எடுத்தாய்
தடகளப் போட்டியிலும் நீ வென்று விட்டாய்!
உயர் பதவி அடைந்து நல்ஊதியம் பெறுகின்றாய்
உன் அலுவலகத்தில் நீயே தலைவியாய் இருக்கின்றாய்!
உனக்குக் கீழ்தான் கேலி பேசியோர் மகன்கள் உள்ளனர்
உயரத்தில் இருந்தாலும் தலைக்கனம் இல்லை உனக்கு!
வசிக்கும் ஊரிலிருந்தே வாழ்த்துகின்றேன் உன்னை
வந்தவர் போனவர் அனைவரும் பாராட்டுகின்றனர் உன்னை!
உன்னைப் பெற்றதற்காக பெருமை கொள்கிறோம்
ஒருபோதும் யாரும் வருந்தாதீர் பெண் பிறந்தால்!
பெண்ணைப் பெற்றவர்கள் பாக்கியவான்கள் உண்மை
பெண் பிள்ளையால் கிடைத்தது பெருமை!
பெண் பெற்றதற்காக அன்று குறை சொன்னவர்கள்
பெருமைப்பட்டு வாழ்த்தி பாராட்டிச் செல்கின்றனர்!

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982