கரோனா வைரஸ் தடுப்பூசி விலை எவ்வளவு தெரியுமா?? 2021 பிப்ரவரியில் வெளிவருகிறது
2021 பிப்ரவரியில் வெளிவருகிறது ஆக்ஸ்போர்டு மருந்து கரோனா வைரஸ் தடுப்பூசி 2 டோஸ் விலை ரூ.1,000 சீரம் நிறுவன சிஇஓ ஆதார் பூணாவாலா தகவல்
கரோனா தடுப்பூசி உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் சீரம் இந்தியா நிறுவனம், அடுத்த ஆண்டு முதல் தடுப்பூசி விற்பனைக்குக்கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்கள் மற்றும் முதியோருக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் கிடைக்கும். அதிகபட்சம் இதன் விலை 2 டோஸ் ரூ.1,000 ஆக இருக்கும் என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஆதார் பூணாவாலா தெரிவித்தார்.
இறுதி கட்ட சோதனை முடிவுகளைத் தொடர்ந்து உரிய மருத்துவ அனுமதிக்குப் பிறகு இது விற்பனைக்கு வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வரும் 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பேசிய பூணாவாலா தெரிவித்தார்.
இந்த தடுப்பூசி மருந்து அனைத்து இந்தியர்களுக்கும் கிடைப்பதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும். தடுப்பூசி தயாரிப்பதில் பிரச்சினை காரணமாக கால தாமதம் ஆவதாகக் கருத வேண்டியதில்லை
அனைவருக்கு தடுப்பூசி எடுத்துக் கொள்வது, அதாவது 2 டோஸ் மருந்து எடுத்துக் கொள்வதற்கு 2024-ம் ஆண்டு வரை ஆகலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார். விலை குறித்து பேசிய அவர், ஒரு டோஸ் 5 டாலர் முதல் 6 டாலர் வரை இருக்கும். இந்திய மதிப்பில் 2 டோஸ் விலை ரூ.1,000 ஆக இருக்கும் என்று அவர் கூறினார்.
இந்தியா மிக அதிக அளவு தடுப்பூசி மருந்தை வாங்க வேண்டியிருக்கும். இதனால் 3 டாலர் முதல் 4 டாலருக்கு கிடைக்கலாம். கோவாக்ஸ் தடுப்பூசியும் இதே விலையில்தான் இருக்கும் என்று பூணாவாலா கூறினார்.மருந்தின் செயல்பாடு குறித்து விளக்கமளித்த அவர், ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அளித்த தடுப்பூசி மருந்து முதியவர்களுக்கு மிகச் சிறந்த பலனை அளித்துள்ளது என்று குறிப்பிட்டார்.
தடுப்பூசியில் டி-செல் செயல்பாடு மிகச் சிறப்பாக உள்ளது. இது நீண்ட கால அடிப்படையில் பலன் தரக்கூடிய அம்சமாகும். இது மனித உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்யும். ஆனால் எவ்வளவு காலம் இந்த தடுப்பூசி உடலில் நோய் எதிர்ப்புத் திறனை தக்க வைத்திருக்கும் என்பது போக போகத்தான் தெரியும் என்றார்.