கவிதைகள்வாழ்வியல்

கல் சூப் – சுஜாதா : ஒரு கதையின் கதை

கதைக்குக் கால் உண்டா? நிச்சயம் உண்டு. எப்படி? சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் உருவான ஒரு கதை, சின்னஞ்சிறு கால்களால் நடந்து நடந்து இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தக் கதையை எழுதியது யார் என்று தெரியாது. வாய்வழியாகச் சொல்லப்பட்டு வந்த இந்தக் கதை, பின்னர் புத்தகமாகக் கொண்டு வரப்பட்டது.

ஐரோப்பாவில் வேகமாகப் பரவி பின்னர் அமெரிக்கா, ரஷ்யா, ஆசியா, ஆப்பிரிக்கா என்று உலகின் பல பகுதிகளிலும் காலூன்றி விட்டது. இப்படிப் பரவிய கதையில் அந்தந்த நாட்டுக் கலாச்சாரத்துக்கு ஏற்ப மாற்றங்கள் நிகழ்ந்தன. உண்மையான கதையிலிருந்த சுவாரசியத்தோடு மனித மாண்புகளும் சேர்ந்த போது, கதை வேறு ஒரு பரிமாணத்துக்குச் சென்றுவிட்டது. அதனால்தான் இந்தக் கதைக்கான தேவையும் வரவேற்பும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சரி, அது என்ன கதை? கோடரி சூப், பட்டன் சூப், ஆணி சூப், மர சூப், கல் கூழ், கல் குழம்பு என்ற பெயர்களில் ஒரே கதை பலவிதமாக வலம் வந்துகொண்டிருந்தாலும் இந்தக் கதைகளின் மூலம் கல் சூப் கதைதான். அப்படி என்னதான் இந்தக் கல் சூப் கதையில் இருக்கிறது?

வழிபோக்கர் ஒருவர் மிகுந்த பசியோடு ஒரு வீட்டுக் கதவைத் தட்டி, உணவு ஏதாவது கிடைக்குமா என்று கேட்கிறார். அந்த வீட்டிலிருக்கும் பாட்டி உணவு எதுவும் இல்லை என்று கூறிவிடுகிறார். அருகில் வேறு வீடுகளும் இல்லை. பசியைத் தாங்கவும் முடியவில்லை. அதனால் ஒரு பாத்திரமும் தண்ணீரும் தரும்படி, பாட்டியிடம் கேட்கிறார்.

என்ன செய்யப் போகிறாய் என்று கேட்கும் பாட்டியிடம், பிரமாதமான கல் சூப் தயாரிக்கப் போவதாகச் சொல்கிறார். பாட்டிக்கு வியப்பு. பாத்திரத்தில் நீர் கொண்டு வந்து கொடுக்கிறார். மூன்று கற்களை வைத்து அடுப்பை உண்டாக்கி, அதன் மீது தண்ணீர்ப் பாத்திரத்தை வைத்து, அருகிலிருக்கும் கற்களைச் சுத்தம் செய்து பாத்திரத்தில் போடுகிறார். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், இதில் கொஞ்சம் வெங்காயம் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்கிறார்.

உடனே பாட்டி தோட்டத்தில் இருக்கும் வெங்காயத்தைப் பறித்து வந்து கொடுக்கிறார். கேரட்டும் பீன்ஸும் இருந்தால் சுவை இன்னும் பிரமாதம் என்கிறார். மீண்டும் தோட்டத்துக்குச் சென்ற பாட்டி பீன்ஸ், கேரட்டுடன் வருகிறார். அவற்றையும் கொதிக்கும் நீரில் போட்டுவிட்டு, கொஞ்சம் உப்புச் சேர்த்தால் அமிர்தமாக இருக்கும் என்கிறார். பாட்டியும் உப்பைக் கொண்டுவந்து கொடுக்கிறார். சூப் தயார். கொஞ்சம் மிளகுத்தூள் சேர்த்தால் எவ்வளவு சூப் வேண்டுமானாலும் குடிக்கலாம் எஎன்கிறார்,

பாட்டி மிளகுத்தூளையும் கொடுக்கிறார். சுவைத்துப் பார்த்த வழிபோக்கர், அடடா, அற்புதமான சூப் என்று பாராட்டிவிட்டு, கற்களை எடுத்து வெளியில் போடுகிறார். பிறகு பாட்டியும் வழிபோக்கரும் சுவையான சூப்பை வயிறு நிறைய குடிக்கிறார்கள். கல் சூப் பிரமாதம் என்று பாராட்டும் பாட்டியிடம், இதுக்குக் காரணம் நீங்கள்தான், உங்களுக்கு நன்றி என்று சொல்லிவிட்டுச் செல்கிறார் அந்த வழிபோக்கர்.

இந்தக் கதையில் பசியோடு இருப்பவர் தனது புத்திசாலித்தனத்தால் எப்படிப் பசியைப் போக்கிக்கொள்கிறார் என்று சுவாரசியமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. வழிபோக்கரின் புத்திசாலித்தனம் மட்டும் போதுமா? அவர் ஒரு பெண்ணை ஏமாற்றி அல்லவா சூப் தயாரித்திருக்கிறார் என்ற கேள்வி வருகிறது இல்லையா? அப்போதுதான் இந்தக் கதையில் மாற்றம் நிகழ ஆரம்பித்தது. இந்தக் கதையைக் குழந்தைகளுக்குச் சொல்லும்போது வேறு என்னவெல்லாம் தேவை என்று யோசித்தவர்கள் இப்படிக் கதையை மாற்றினார்கள். இரண்டு ராணுவ வீரர்கள் பசியுடன் ஒரு கிராமத்துக்கு வவந்தனர்.

ஏழைகள் வசிக்கும் கிராமம் என்பதால் சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. அதனால் ஒரு பாத்திரத்தையும் தண்ணீரையும் கொடுத்தால், தாங்கள் கல் சூப் தயாரித்துப் பசியாறிவிடுவோம் என்கிறார்கள். தண்ணீரோடு மிகப் பெரிய பாத்திரம் கிடைக்கிறது. கற்களைச் சுத்தம் செய்து பாத்திரத்தில் போட்டு, அடுப்பில் வைத்துக் கொதிக்க விடுகிறார்கள்

அதற்குள் கல் சூப் பற்றிய செய்தி கிராமத்தில் பரவிவிடுகிறது. குழந்தைகளும் பெரியவர்களும் கல் சூப் தயாரிப்பதைக் காண ஓடி வருகிறார்கள். பாத்திரத்திலிருந்த நீரை ருசி பார்த்த ஒரு வீரர், சூப் நன்றாக வந்திருக்கிறது. கேரட் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்கிறார். உடனே ஒரு குழந்தை வீட்டிலிருந்து கேரட்களை எடுத்து வருகிறது. கேரட்டுடன் பீன்ஸ் சேர்த்தால் இன்னும் ருசியாக இருக்கும் என்கிறார் மற்றொரு வீரர்

அடுத்த குழந்தை வேகமாக ஓடிச் சென்று பீன்ஸ் எடுத்து வருகிறது. அதை வாங்கி பாத்திரத்தில் போட்டுவிட்டு, எல்லோரும் சாப்பிடக் கூடிய இந்த சூப்பில் வெங்காயமும் உருளைக்கிழங்கும் சேர்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிறார்கள். இரு குழந்தைகள் அவரவர் வீட்டிலிருந்து வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் எடுத்துக்கொண்டு வருகிறார்கள். அவற்றையும் வேக வைக்கிறார்கள். மீண்டும் சுவைத்துப் பார்த்துவிட்டு, உப்பும் காரமும் குறைவாக இருப்பதாகச் சொல்கிறார்கள். குழந்தைகள் உப்பையும் மிளகுத் தூளையும் கொண்டுவந்து கொடுக்கிறார்கள். எல்லாவற்றையும் போட்ட பிறகு அற்புதமான சூப் தயராகிவிடுகிறது. பாத்திரத்தில் இருந்த கற்களை எடுத்து வெளியில் போட்டுவிட்டு, கல் சூப் தயார் என்று அறிவிக்கிறார்கள்

குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை எல்லோருக்கும் சூப்பைக் கொடுத்துவிட்டுத் தாங்களும் பருகுகிறார்கள். தாங்கள் கொடுத்த பொருட்களால் உருவான சூப் என்பதை அறியாமல், கல் சூப் பிரமாதம் என்று அனைவரும் பாராட்டுகிறார்கள். இதற்குக் காரணம் நீங்கள்தான் என்று சொல்லிவிட்டுச் செல்கிறார்கள் வீரர்கள். பசியோடு இருப்பவர்களுக்குச் சக மனிதர்கள் உதவ வேண்டும் என்பதையும் அந்த உதவியில் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்க வேண்டும் என்பதையும் சொல்கிறது, இந்தக் கதை. சூப் செய்வதற்கு ஒரே வீட்டில் பொருட்கள் இல்லாவிட்டாலும்கூட அவரவரிடம் இருப்பதைப் பகிர்ந்துகொண்டால், சுவையான சூப்பை எல்லோரும் பருகலாம்

பசி மிகவும் கொடுமையானது. வேறு எந்தக் காலக்கட்டத்தையும்விட இந்தக் கரோனா காலக்கட்டத்தில் இந்தக் கதையின் தேவை அதிகமாக இருக்கிறது. உங்களுக்கு அருகில் யாராவது பசியோடு இருந்தால் ‘கல் சூப்’ கதையை நினைத்துப் பாருங்கள். உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள். ஒரு மனிதரின் பசியைப் போக்குவதைவிடச் சிறந்த செயல் வேறு என்னவாக இருக்க முடியும்?

நன்றி இந்து தமிழ் திசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *