செய்திகள்நம்மஊர்

தினகரன் – சாத்தான்குளம் ,வியாபாரிகள்,கொலை, வழக்கு,காவலர்கள், செவிலியர்கள் உட்பட 105 பேர் சாட்சிகளாக சேர்ப்பு.. சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல்

சாத்தான்குளம் ,வியாபாரிகள்,கொலை, வழக்கு,காவலர்கள், செவிலியர்கள் உட்பட 105 பேர் சாட்சிகளாக சேர்ப்பு.. சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல்

மதுரை, : சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 105 பேர், சிபிஐ குற்றப்பத்திரிகையில் சாட்சிகளாக இடம்பெற்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.  சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ். இவர்களது கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இவ்வழக்கில் கடந்த செப்.25ல் மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒருங்கிணைந்த குற்றப்பத்திரிக்கையை சிபிஐ போலீசார் தாக்கல் செய்தனர். கொரோனா பாதித்து இறந்த எஸ்எஸ்ஐ பால்துரை தவிர, மற்ற 9 பேருக்கும் எதிராக சிபிஐ கூடுதல் எஸ்பி வி.கே.சுக்லா, 31 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த குற்றப்பத்திரிக்கையில் சாத்தான்குளம் காவல்நிலைய தலைமை காவலர் பியூலா, ரேவதி உள்ளிட்ட 6 காவலர்கள், சிறை ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் சில வியாபாரிகள், உறவினர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட 105 பேர் சாட்சிகளாக இடம் பெற்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் விசாரணை அறிக்கை, டெல்லி தடயவியல் ஆய்வு மைய அறிக்கையும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது

மேலும் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், கொலையான இருவருக்கும் ஏற்பட்டுள்ள ரத்தக்காயத்துடன், சாத்தான்குளம் காவல் நிலைய சுவரில் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளை டிஎன்ஏ பரிசோதனை செய்ததில், ரத்தக்கறையுடன் இருந்த ஆடையுடன் பொருந்தியுள்ளது.

இறந்தவர்களின் ஆடைகள், காவல் நிலைய சுவர் மற்றும் இதர இடங்களில் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் ஜெயராஜின் மனைவியும், பென்னிக்சின் தாயாருமான செல்வராணியின் ரத்த மாதிரிகளுடன் ஒத்துப்போகிறது.சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்தபோது அவர்கள் துன்புறுத்தப்பட்ட இடம் மற்றும் போலீஸ் சுவரில் இருந்த ரத்தக்கறைகள் உள்ளிட்டவை ஜெயராஜ் மற்றும் பென்னிக்சிற்கு உடையது என்பது உறுதியாகியுள்ளது.

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு இரு வழக்குகளிலும் தொடர்பு உள்ளது. கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரணையில், கேமரா, செல்போன் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும் 2 பேரும் போலீசாரால் ரத்தம் சொட்டச் சொட்ட தாக்கப்பட்டு காயம் ஏற்படுத்தப்பட்டது உறுதியாகியுள்ளது.அரசு மருத்துவமனையில் உள்ள ஆரம்பக்கட்ட பதிவேடு, மருத்துவ பரிசோதனை அறிக்கை, கிளைச்சிறையில் சேர்க்கை தொடர்பான பதிவேடுகள் உள்ளிட்ட இந்த சம்பவம் தொடர்பான பலவித அறிக்கைகளிலும், ஆவணங்களிலும் ஏராளமான முரண்பாடுகள் இருந்தது சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது.போலீசாரால் தாக்கப்பட்ட இருவரையும் பரிசோதிக்காமல் மருத்துவர் தகுதி சான்று வழங்கியுள்ளார். கோவில்பட்டி கிளைச்சிறையில் ரிமாண்ட் செய்தபோது, இருவருக்கும் இருந்த காயங்களை சிறை பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர். மாஜிஸ்திரேட் விசாரணையில் இருவருக்கும் 18 இடங்களில் காயம் இருப்பது தெரிய வந்துள்ளது., இவ்வாறு குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *