“ஜல்லிக்கட்டில் அரசியல் செய்யக் கூடாது” – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் | “Do not do Politics on Jallikattu” – Former Minister Vijayabaskar
புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஐ.எஸ்.மெர்சி ரம்யாவை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று சந்தித்து, ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு ஆன்லைன் பதிவு முறையை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு ஆன்லைன் பதிவு முறை பின்பற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதில், எங்கிருந்தும், யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் விண்ணப்பித்து அவருடைய காளையை ஜல்லிக்கட்டில் பங்கேற்க வைக்கக்கூடிய சூழல் உள்ளது. அதேநேரத்தில், உள்ளூரில் காளை வளர்ப்போருக்கு அனுமதி கிடைக்காது.
ஆன்லைன் பதிவு முறையால் காலம் காலமாக இருந்து வரும் மரபு மீறப்படுகிறது. எனவே, இதைத் தடுக்க வேண்டும். ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் தலா 750 காளைகள் பங்கேற்பதை மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டின் போது படுகாயம் அடையும் காளைகளை தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாடு அரசு கால் நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
இதைத் தடுப்பதற்கு, புதுக்கோட்டையில் உயர் சிகிச்சை வசதியுடன் கூடிய பல் நோக்கு கால்நடை மருத்துவமனையை ஏற்படுத்த வேண்டும். ஜல்லிக்கட்டு காளைகள் பராமரிப்பாளர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் வழங்குவதாக திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட வில்லை. அனைத்து கட்சிகளைச் சேர்ந்தோராலும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருவதால், ஜல்லிக்கட்டில் அரசியல் செய்யக் கூடாது.
தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டும் கூட செயல்பாட்டுக்கு வராமல் உள்ள புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை விரைந்து செயல்படுத்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிமுக ஆட்சியில் ரூ.75 கோடியில் கட்டப்பட்ட சிறுநீரக ஒப்புயர்வு மையத்தையும் செயல்படுத்த வேண்டும் என்றார்.