வாழ்வியல்ஆன்மிகம்உறவுகள்உலகம்கோவில்சமூகம்டிரெண்டிங்நம்மஊர்

தைப்பொங்கல் வரலாறு  ஏன் தை பொங்கல் கொண்டாடப்படுகிறது? History of Thai Pongal Why is Thai Pongal celebrated?

ஏன் தை பொங்கல் tamil

தைப்பொங்கல் வரலாறு  ஏன் தை பொங்கல் கொண்டாடப்படுகிறது?

பொங்கல் (Pongal) என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும்.இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை இந்து கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது.

சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள்.  உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்கு கொண்டு வந்து, தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

நான்கு நாள் திருவிழா

pongal history tamildeepam
Bhogi

முதல் நாள் போகிப் பண்டிகை Bhogi

போகி பண்டிகை என்பது பழையன கழித்தல் என்பதாக அடையாளம் கொண்டு வேளாண்மையை மேற் கொண்டவர்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.

சூரிய நாட்காட்டியின் படி, தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது.  இந்த நாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள், தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும். பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் “போக்கி’ என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி “போகி’ என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால்,  நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.

அக்காலத்தில் போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் இருந்தது. அப்போது அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளைப் புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.

தை பொங்கல்
Thai Pongal

இரண்டாம் நாள் தைப்பொங்கல்  Thai Pongal

பொங்கலன்று அதிகாலை எழுந்து மொழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்குப் புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும், புதிய கரும்பையும், புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். கோலமிட்ட இடத்தில் தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி, கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று “பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!” என்று உரக்கக் கூவுவர்.

தை பொங்கல் tamildeepam
Mattu Pongal

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல் Mattu Pongal

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. ‘பொங்கலோ பொங்கல் ! மாட்டுப் பொங்கல்!

உழவுக்கருவிகளைச் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம், காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனைக் காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.

மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர். அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு  வண்ணம் பூசி, கூரான கொம்பில் சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்குத் தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள். பட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக!’ என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

kaanum pongal
Kaanum Pongal

நான்காம் நாள் காணும் பொங்கல்: Kaanum Pongal

இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள் இடம்பெறும்.இது பொதுவாக இந்தியாவிலேயே கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர்.

காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் விழா. காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.

இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினைக் கட்டி, அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று,  அதனை கல்லில் இழைத்து பாதத்திலும் முகத்திலும் பூசிக்கொள்வார்கள்.

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *