மழலைக்காக லிஃப்ட் உடன் மர வீடு – இணையத்தை மகிழச் செய்த தந்தை – மகன் பாசம்! | Internet Loves a Toddler’s Reaction
தனக்காக லிஃப்ட் வசதியுடன் தந்தை கட்டிய மர வீட்டிற்கு அந்த லிஃப்டில் ஏறிப்போகும் சிறுவன் ஒருவனின் குதூகலச் சிரிப்பு இணையவாசிகளின் இதயத்திலும் மகிழ்ச்சியை பூக்கச் செய்து வைரலாகி வருகிறது.
அப்பா… உணர்ச்சிகளால் வெளிப்படுத்த முடியாத இந்த மந்திரச் சொல்லுக்கு சொந்தக்கார்கள் தங்களின் குழந்தைகளை மகிழ்விக்க பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். குழந்தைகளின் சின்னச் சின்ன முயற்சிகளை ஊக்குவிப்பதில் தொடங்கி தங்களின் காயங்களை மறைத்துக் கொண்டு குழந்தைகளின் குதூகலத்தில் கரைந்து போவது, இயலாமையை வெளிக்காட்டாமல் குழந்தைகளை வெற்றியாளர்களாக்குவது என அப்பாக்களின் அளவிடமுடியாத அன்பு எப்போதும் வார்த்தைகளுக்குள் அடங்கவிடுவதில்லை.
இப்படிபட்ட தனித்துவமான தந்தை – சேய் உறவும் அதன் குதுகலமும் இணையவாசிகளின் இதயத்தை கொள்ளை கொண்டுள்ளது. தத்துக் குதித்தோடி விளையாடும் தனது சின்னஞ்சிறு மகன் விளையாடுவதற்காக தந்தை ஒருவர் பரண் போன்ற மர வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள், அந்த பரண் வீட்டிற்கு ஏறிப்போக ஒரு லிஃப்ட் எனப்படும் தூக்கி வசதியையும் ஏற்படுத்தியிருக்கிறார். மர வீட்டிற்கு லிஃப்ட் கொஞ்சம் ஆச்சரியம்தானே.
டேனி டெரனி என்ற பயனர் தனது ட்விட்டர் பக்கத்தில், வியாழக்கிழமை 46 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், இந்த அப்பா தனது மகன் விளையாட லிஃப்ட் வசதியுடன் ஒரு மர வீடு கட்டியுள்ளார். அதை பார்க்கும் குழந்தையின் கொண்டாட்டம் கொள்ளை அழகு என்று பதிவிட்டுள்ளார். வீடியோ கேமரா படம் ஒன்றை போட்டு Imgur/Tourmalin என்று குறிப்பிட்டுள்ளார்.
தத்தித் தத்தி நடந்து வரும் சிறுவன் ஒருவன் மரத்தால் செய்யப்பட்ட தூக்கு கூடை ஒன்றில் ஏறுவதில் இருந்து வீடியோ தொடங்குகிறது. கூடைக்குள் ஏறும் குதூகலம் சிறுவனின் முகத்திலும் உடலிலும் பரவியிருக்கிறது. கூடைக்குள் ஏறி கீழே விழாமல் இருக்க அதற்கான ஏற்பாடுகளை செய்த பின் தந்தை அந்த தூக்கு கூடையை மேல தூக்குகிறார். அந்த கூடை பரண் வீட்டின் தளத்தை அடைந்ததும் பின்னோக்கி இறங்கும் சிறுவன் வெற்றிக் கொண்டாட்டத்தில் பரண் திட்டில் கை வைத்து சிரிக்கிறான். பிறகு திரும்பி வந்து கூடைக்குள் நிற்க மீண்டும் மெல்ல தூக்கு கூடை கீழே இறங்குகிறது. இப்போதும் சிறுவனின் உடலிலும், முகத்திலும் குதூகலம் குறையவில்லை; மாறாக துள்ளிக் குதித்து கை தட்டி இரட்டிப்பாகி இருக்கிறது.
சிறுவனின் இந்த சந்தோஷம், அது பகிரப்பட்டதில் இருந்து 3.4 மில்லியன் பார்வைகளையும், 1.9 லட்சம் விருப்பங்களையும் பெற்று 23 ஆயிரம் பேர் இதனை ரிட்வீட்ட செய்துள்ள நிலையில் அதிகமான கமண்ட்களையும் பெற்றுள்ளது.
பயனர் ஒருவர், “அந்த லிஃப்ட் தானாக இயங்கும் உபாயம் கண்டுபிடிக்கும் வரை அப்பாவின் கைகளுக்கு நல்ல உடற்பயிற்சி தான்” என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், “ஒரு நாளில் எத்தனை முறை அந்த லிஃப்ட் விளையாட்டு நடந்திருக்கும் என்று என்னால் எண்ணிப்பார்க்க முடிகிறது” என்று தெரிவித்துள்ளார். மூன்றாவது பயனர் ஒருவர், “என்னே ஒரு சந்தோஷம்” என பதிவிட்டு அதனை பகிர்ந்துள்ளார்.