திருச்சி, புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 54 பேர் காயம் | Jallikattu in Pudukottai, Trichy
திருச்சி/புதுக்கோட்டை: திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் 2 இடங்களில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 54 பேர் காயமடைந்தனர்.
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகேயுள்ள கருங்குளம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், பங்கேற்க திருச்சி,புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து700 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன.
கால்நடை மருத்துவக் குழுவினரின் பரிசோதனைக்குப் பிறகு, 665காளைகள் வாடிவாசலில் இருந்துஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. இந்த காளைகளை அடக்க 265 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். இதில், காளைகள் முட்டியதில் வீரர்கள் 17 பேர், காளைஉரிமையாளர்கள் 11 பேர், பார்வையாளர்கள் 5 பேர் என மொத்தம் 33 பேர் காயமடைந்தனர். இவர்களில் 27 பேர் தற்காலிக மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
மாடுபிடி வீரர்களான மதுரை செல்வராஜ்(23), மணப்பாறை குளத்துப்பட்டி எடிசன்(24), கருங்குளம் சாலமன்(28) உட்பட 6 பேர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாதகாளைகளின் உரிமையாளர்களுக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. பல ஆயிரக்கணக்கான மக்கள் ஜல்லிக்கட்டைப் பார்த்து ரசித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள வேந்தன்பட்டியில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர்(சிறப்பு) பெ.வே.சரவணன் தலைமையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார். இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி, வட்டாட்சியர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 571 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்குவதற்கு 300 பேர் களம் இறங்கினர். இவர்களில் 21 பேர் காயம் அடைந்தனர்.