Rewind 2023: ஆளுநர் சர்ச்சை முதல் ‘பேரிடர்’கள் வரை – தமிழகம் சந்தித்த ‘சம்பவங்கள்’ | just rewind 2023 tamil nadu incidents
ஆளுநர் சர்ச்சை: தமிழகத்தில் 2023-ஆம் ஆண்டு அதிக சர்ச்சையில் சிக்கிய பெயர் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநரின் செயல்பாடுகள் மீது திமுக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. ‘ஆளுநர் 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை டெல்லிக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டு உள்ளார்; குறிப்பாக, பல்கலைக்கழகங்களில் முதல்வரை வேந்தராக நியமிக்கும் மசோதாவை ஆளுநர் ரவி டெல்லிக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்திருக்கிறார். மத ரீதியாக தொடர்ந்து பேசி வருகிறார். ஆளுநர் நடுநிலையாக செயல்படவில்லை, அவர் மாணவர்களிடம் சானாதனம் பற்றி பேசிவருகிறார். இந்தியா இந்து நாடு என்று பேசி வருகிறார்’ உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
ஆனால் ஆளுநர் ரவி அவற்றை சற்றுகூட சீரியஸாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று தமிழக மாநில ஆளுநர் ரவி பேசியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடுமையாக கொந்தளித்தனர். அதேபோல் ஆளுநர் முதல் நாள் தமிழ்நாடு சட்டசபையில் ஆற்றிய உரை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளை தாமாக சேர்த்தும் பேசினார். அடுக்கடுக்கான சர்ச்சைகளைக் கண்டு ஆத்திரமடைந்த திமுக, ஆளுநர் ஆர்.என் ரவியை பதவியை நீக்க வேண்டும் என குடியரசுத் தலைவரிடமே புகாரளித்தது கவனம் பெற்றது. ஆளுநர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்ததும் கவனிக்கத்தக்கது.
நாங்குநேரி சாதிவெறி சம்பவம்: திருநெல்வேலி நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த பட்டியலின மாணவர் ஒருவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் படிக்கும் பிற சாதி மாணவர்கள், தன்னை சாதி ரீதியாக துன்புறுத்துவதாக, அந்த மாணவர் பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்துள்ளார். இந்தப் புகாரை ஏற்றுக் கொண்ட நிர்வாகம், துன்புறுத்தலில் ஈடுபட்ட மாணவர்களை கடுமையாக எச்சரித்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பிற சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று, பட்டியலின மாணவரின் வீட்டுக்குள் சென்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி தாக்குதல் நடத்தியது. இதனைத் தடுக்க வந்த மாணவரின் தங்கைக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
அக்டோபர் மாதம் நடந்த இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரத்தக்கறை படிந்த அந்த படிக்கட்டின் புகைப்படங்கள் இன்னும் மனதைவிட்டு நீங்காத வடுவாய் மாறிவிட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் இது மாதிரியான சாதியப் போக்குகளை தடுக்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டார் முதல்வர் ஸ்டாலின். மாணவர்களிடையே இது மாதிரியான சாதிய மனப்போக்கு சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
செந்தில் பாலாஜி கைது: திமுகவிலும், கொங்கு மண்டலத்திலும் அசைக்க முடியாத பவர்ஃபுல் அமைச்சராக வலம் வந்தவர் செந்தில் பாலாஜி. மதுவிலக்கு – ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தபோது கரூரையே கலக்கியபடி இருந்தவர், திடீரென இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிட்டார். அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் செந்தில் பாலாஜி குறித்து ஊடகங்களிடம் பேசாத நாட்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு தனது இருப்பை தக்கவைத்திருந்தார் செந்தில் பாலாஜி. வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி, செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்குமாறும், ஜூன் 28-ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார். பிறகு செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதன்பிறகு அவர் ஜாமீன் கேட்டு போராடியும், இதுவரை மூன்றுமுறை அவரின் மனு நிராகரிக்கப்பட்டது. தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மருத்துவ காரணங்களுக்கான ஜாமீன் தர முடியாது என உச்ச நீதிமன்றமே தெரிவித்துவிட்டது. இவர் மீதான நடவடிக்கை, திமுகவுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது.
மிக்ஜாம் புயல்: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல மாறியது. தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், ஒவ்வொரு முறையும் வெள்ளம், புயல் அபாயத்தின்போது சென்னை நீருக்குள் மூழ்கி மீண்டும் மீண்டும் மீள்கிறது. முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், பாதிப்பு என்பது ஒரு தொடர்கதையாகவே இருக்கிறது என மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
திரைப்படங்களில் பார்ப்பதுபோல மக்களுக்கு ஹெலிகாப்டலில் உணவு வழங்குவதும், படகில் பயணிப்பதும் என சென்னை மக்கள் மறுபிறகு எடுத்த அளவுக்கு சின்னாபின்னமானிவிட்டனர். 2015 மழையையும், 2023 நிலவரத்தையும் ஒப்பிட்டு பேசிவருகிறது ஆளும் அரசு, ஆனால் எதிர்கட்சியோ ஆளும் அரசை குற்றம்சாட்டி வருகின்றது. சென்னையில் 2015-ல் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் 199 பேர் உயிரிழந்தனர். தற்போது இதுவரை 16 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மிக்ஜாம் புயலால் சென்னை பேரிடரை சந்தித்துள்ள நிலையில் கடலோர மெட்ரோ நகரங்களான மும்பை, கொல்கத்தாவும் இனிவருங்காலங்களில் காலநிலையால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறது ஓர் ஆய்வறிக்கை.
தென் மாவட்டங்களில் வெள்ளம்: சென்னை வெள்ள பாதிப்பு சரியாவதற்குள், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்கள் அதிகனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால், பலர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். மேலும், இந்த 4 மாவட்டங்களில் விவசாய நிலங்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. அதேபோல், பொதுச் சொத்துகளும் சேதமடைந்துள்ளன. மக்கள் தங்களது வாழ்நாள் பொருளாதாரத்தை இயற்கையிடம் பறிகொடுத்துவிட்டு, நிற்கதியாய் போக்கிடம் இல்லாமல் நிற்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ரூ.1,000 கோடி அளவுக்கு சாலைகள் சேதமடைந்துள்ளன எனக் கூறப்படுகிறது. ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயிலில் சிக்கியிருந்த 500-க்கும் மேற்பட்ட பயணிகள் மூன்று நாட்களாக உணவு, குடிநீர் இன்றி அவதி அடைந்ததை மறக்க முடியாது. இந்தச் சம்பவம் தமிழக மக்களையே புரட்டிப்போட்டது. 4 மாவட்டங்களிலும் இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
எண்ணூர் கழிவு: மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து, சென்னையின் அனைத்து பகுதிகளும் மீண்டு விட்டன. ஆனால், எண்ணூர் பகுதி மட்டும் இன்னும் இதிலிருந்து மீளவில்லை. அதற்கு காரணமாக அமைந்தது கச்சா எண்ணெய் கழிவுகள்தான். எண்ணூர் பகுதியில் கொசஸ்தலையாற்றில் மர்மமான முறையில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. எண்ணெய் கசிவால் அங்குள்ள குடியிருப்புகளின் சுவர்களில் எண்ணெய் படிந்தது.
மீன்பிடி படகுகள் மீதும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வரும் போது உடலிலும், உடையிலும் எண்ணெய் படிந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சுமார் 70 டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் கடலில் கலந்துள்ள அளவு அதைவிட பல மடங்கு என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கச்சா எண்ணெய் பாதிப்பை தொடர்ந்து சென்னை எண்ணூரில் இயங்கி வரும் கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலையில் இருந்து அமோனியா கசிவு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர். இந்த வாயுக் கசிவினால், பெரியகுப்பம், சின்னக்குப்பம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 பேருக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அப்பகுதியில் நிலைமை சீராக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இந்தப் பிரச்சினையில் இருந்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
வேங்கைவயல் விவகாரம்: புதுக்கோட்டையில் கடந்த 2022 டிசம்பர் 26 ஆம் தேதி வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சங்களை உலுக்கியது. இந்த அருவருக்கத்தக்க நிகழ்வு நடந்து ஓராண்டு நிறைவடைந்து விட்டது. இவ்வளவு காலம் கடந்தும்கூட வேங்கைவயல் கொடூரத்துக்கு காரணமானவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை; தண்டிக்கப்படவில்லை என்பதுதான் அப்பகுதி மக்களின் வேதனையாக மாறியுள்ளது.
வேங்கைவயல் கொடூரத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையும், நிலைப்பாடும் ஆகும். பாதிக்கப்பட்ட தங்கள் மீதே ஐயங்கள் எழுப்பப்படும் நிலையில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது தான் தங்களை நிம்மதியாக வாழ வைக்கும் என்று பட்டியலின மக்கள் கண்ணீர் மல்க வேதனை தெரிவிக்கின்றனர்.
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு: வாச்சாத்தி கிராமத்தில் 1992-ம் ஆண்டு நடந்த சம்பவத்துக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நீதி கிடைத்துள்ளது. தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில் அரசு அதிகாரிகளால் 18 இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். 215 குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம். பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி வேல்முருகன் என்பவர் விசாரித்து வந்தார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், சுய தொழில் செய்ய உதவி செய்யவேண்டும் என்று அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். அவர்கள் இறந்து போயிருந்தால் அவர்களது குடும்பத்துக்கு இந்த உதவிகளைச் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். “பாதிக்கப்பட்டவர்கள் இறந்தபோயிருந்தால் அவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இதில் குற்றம் புரிந்தவர்களிடம் ரூ.5 லட்சம் வசூலிக்க வேண்டும்” என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். இந்திய நீதித் துறை வரலாற்றில் முக்கியமான ஒன்றாக வாச்சாத்தி வழக்கு பதிவாகியுள்ளது.
பங்காரு அடிகளார் மரணம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான ஆன்மிக குரு பங்காரு அடிகளார் கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி மறைந்தார். அடிகளாரின் மறைவு, அவரது பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான பக்தர்கள் கதறி அழுத வீடியோக்கள் பார்ப்பவர்களை கலங்கச் செய்தது. மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை கடந்த 1970-ம் ஆண்டு நிறுவினார்.
கோயில் கருவறைக்கே சென்று பெண்கள் நேரடியாக வழிபாடு செய்யும் முறையை ஏற்படுத்தி பெறும் புரட்சிக்கு வித்திட்டார். மாதவிலக்கு நாட்களிலும் இங்கு தடையின்றி வழிபடலாம் என்பது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் சக்திமாலை அணிந்து, இருமுடி சுமந்து மேல்மருவத்தூர் வந்து ஆதிபராசக்தி அம்மனை வழிபடத் தொடங்கினர். சித்ரா பவுர்ணமி, ஆடிப்பூரம், தைப்பூசம் போன்ற விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் மேல்மருவத்தூர் வந்து பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்று வந்தனர். பக்தர்களால் ‘அம்மா’ என்று மிகுந்த அன்போடு அழைக்கப்பட்டார் பங்காரு அடிகளார். அவரின் இழப்பு ஆவரின் பக்தர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாக மாறியிருக்கிறது.
பொன்முடி: திமுக அமைச்சரவையில் முக்கிய முகமாக இருந்தவர் பொன்முடி, பல்கலைக்கழக விவகாரங்களில் ஆளுநருக்கு ஏட்டிக்குபோட்டியாக செயல்பட்டு வருவார். கடந்த 2006 2011 வரை திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த 2016ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை, விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த 19-ஆம் தேதி தீர்ப்பளித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார் 30 நாட்களுக்கு பிறகு விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அடுத்தடுத்து திமுக அமைச்சர்கள் சிக்கி வருவது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்த் மரணம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.28) காலை காலமானார். அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 153-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடிக்கும் அளவுக்கு பிஸியான நடிகராக வலம் வந்தார். ‘செந்தூரப்பூவே’ படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற விஜயகாந்த், தமிழக அரசின் எம்.ஜி.ஆர்.விருது, கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.
இந்தி எதிர்ப்பு, ஈழத் தமிழர் விடுதலை உள்ளிட்ட விஷயங்கள் அதீத ஈடுபாடு கொண்ட விஜயகாந்த் விடுதலை புலிகள் தலைவர் மீது கொண்ட பேரன்பால் தன் மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். 2011ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 தொகுதிகளில் வென்று எதிர்கட்சி தலைவர் நாற்காலியில் அமர்ந்தார். சினிமாவில் தனக்கென ஒரு பாதையையும் ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி, அரசியலில் தனி முத்திரை பதித்த விஜயகாந்த்தின் மறைவு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்துக்குமே பேரிழப்பு என அரசியல் கட்சியினர் தொடங்கி திரைப்பிரபலங்கல் வரை கதறுகின்றனர். விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்ற நிலையில், மக்கள் வெள்ளமென திரண்டு கண்ணீருடன் பிரியாவிடை அளித்தனர். இன்று அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
திமுகவுக்கு இடர்கள்: ஒட்டுமொத்தமாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு இந்த ஆண்டு பெரும் இடர்கள் நிறைந்திருந்தன. ஒருபக்கம், ஆளுநர் சர்ச்சை முதல் அமைச்சர்கள் சிலர் மீதான நடவடிக்கை வரையிலான அரசியல் சவால்களை சந்தித்து வந்த திமுக அரசு, மறுபக்கம் கனமழை, புயல், வெள்ளம் என இயற்கைப் பேரிடர்களில் இருந்து மக்களை மீட்கும் சவால்களையும் சந்தித்து வந்தது கவனிக்கத்தக்கது.