உலகம்கவிதைகள்செய்திகள்

பெரியார் போற்றும் பெருந்தமிழன் காமராசர் ! கவிஞர் இரா. இரவி!

பெரியார் போற்றும் பெருந்தமிழன் காமராசர் !
கவிஞர் இரா. இரவி!

கதராடை அணிந்திட்ட கருப்புச் சட்டைக்காரர் என்று
காமராசரை அன்று சிலர் சொன்னதுண்டு !

பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப் படுத்தினார்
பெருமளவு பள்ளிகளை திறந்து வைத்தார் !

மேட்டுக்குடிக்கு மட்டும் என்றிருந்த கல்வியை
மாடு மேய்ப்பவருக்கும் பொதுவாக்கிய மேய்ப்பர் காமராசர் !

பொறியாளர்களும் மருத்துவர்களும் தமிழகத்தில்
பெருகிட காரணமாக இருந்தவர் காமராசர் !

கல்வி வள்ளல் என்ற பட்டத்திற்குப் பொருத்தமானவர்
கல்வி அதிகம் கற்காவிட்டாலும் அருமை அறிந்தவர் !

படிக்காத மேதையாக வாழ்வில் சிறந்தவர்
படிக்காதவர் பெயரில் பல்கலைக்கழகம் உருவானது !

நேர்மையின் சிகரமாக வாழ்ந்து காட்டியவர்
நாணயத்தின் இலக்கணமாக வாழ்ந்து சிறந்தவர் !

மாட மாளிகை கூட கோபுரம் வெறுத்தவர்
மண்வாசனை மாறாமல் வாழ்ந்திட்ட சித்தர் !

ஆசையை அறவே அழித்திட்ட புத்தர்
அன்பால் அனைவரின் உள்ளம் நிலைத்தவர் !

கல்விச் சாலைகள் மட்டுமல்ல ஆலைகளும் திறந்தவர்
கல்வியை தமிழகத்தில் வெள்ளமாகப் பாய்ச்சியவர் !

மாலை நேரக் கல்லூரிகளும் திறந்திட்டவர்
மனதார மக்கள் பாராட்டும்படி தமிழகம் ஆண்டவர் !

அன்னையே கேட்ட போதும் முப்பது ரூபாய்
அதிகம் வழங்கிட சம்மதம் தராதவர் !

ஏழைகளின் இன்னலை என்றும் அறிந்தவர்
இன்னல் நீக்கிட திட்டம் தீட்டியவர் !

மூட நம்பிக்கைகளை முற்றாக வெறுத்தவர்
மூளையை பகுத்தறிவுக்கு நன்கு பயன்படுத்தியவர் !

பெரியார் எளிதில் யாரையும் பாராட்ட மாட்டார்
‘பச்சைத் தமிழர்’ என்று காமராசரைப் பாராட்டினார் !

காமராசரின் ஆட்சிக்கு துணை நின்றவர் பெரியார்
பெரியாரின் கொள்கைக்கு துணை நின்றவர் காமராசர் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *