பணம் பறித்த வழக்கில் சாட்சியை மிரட்டிய மதுரை பெண் காவல் ஆய்வாளர் பணி நீக்கம் | Madurai female police inspector dismissed for threatening witness in extortion case
மதுரை: பணம் பறித்த வழக்கில் சாட்சியை மிரட்டியதாக பெண் காவல் ஆய்வாளர் வசந்தி நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த பேக் விற்பனையாளரான அர்ஷத் 2021-ம் ஆண்டு தனது நண்பர் ஒருவரை பார்க்க மதுரை நாகமலை புதுக்கோட்டைக்குச் சென்றார்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் நிலைய பெண் ஆய்வாளர் வசந்தி, காவல் துறைக்கு தொடர்பில்லாத சிலருடன் சேர்ந்து சோதனை என்ற பெயரில் அர்ஷத்தை மிரட்டி அவரிடம் ரூ. 10 லட்சத்தைப் பறித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அர்ஷத், மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து ஆய்வாளர் வசந்தி மற்றும் 5 பேரை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், வசந்தி நிபந்தனை ஜாமீனில் இருந்தார். வழக்கின் முக்கிய சாட்சியான ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஒருவரை வசந்தி மிரட்டி உள்ளார்.
இதையடுத்து, அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் போலீஸார் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வசந்திக்கு எதிரான மிரட்டல் புகாரை தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் குழு ஒன்றை அமைத்து விசாரித்து முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் கைது நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டது.
விசாரணையில் சாட்சியை மிரட்டியது உறுதியான நிலையில் வசந்தி சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கில் துறை ரீதியாக விசாரணை மேற்கொண்ட நிலையில், அவரை நிரந்தரமாகப் பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்து மதுரை சரக டிஐஜி பொன்னி உத்தரவிட்டார்.