விவசாயத் தொழிலாளர்களுக்கு தனித் துறை உருவாக்கக் கோரி மார்ச் 16-ல் ஆர்ப்பாட்டம்: வி.தொ.ச அறிவிப்பு | March 16 Demonstration demanding the creation of a separate sector for agricultural labourers
புதுக்கோட்டை: விவசாயத் தொழிலாளர்களுக்கென தனித் துறையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி மார்ச்16-ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-வது மாநில மாநாடு புதுக்கோட்டையில் பிப்.4-ம் தேதி தொடங்கியது. இன்று (பிப்.6) நிறைவடைந்தது. நிறைவு நாளான இன்று நடைபெற்ற மாநாட்டில் சங்கத்தின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் பி.வெங்கட், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர்ராஜன், மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் ஆகியோர் பேசினர்.
மாநாட்டில் தலைவராக எம்.சின்னத்துரை எம்எல்ஏ, பொதுச் செயலாளராக வீ.அமிர்தலிங்கம், பொருளாராக அ.பழனிச்சாமி, துணைத் தலைவர்களாக ஏ.லாசர், பி.வசந்தாமணி, மலைவிளைப்பாசி, அ.கோதண்டன், ஜி.ஸ்டாலின், எம்.முருகையன், ஜி.கணபதி செயலாளராக எஸ்.சங்கர், எம்.முத்து, சி.துரைசாமி, எஸ்.பூங்கோதை, எஸ்.பிரகாஷ், வீ.மாரியப்பன், க.சண்முகவள்ளி உள்ளிட்ட 82 பேர் கொண்ட மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலியை ரூ.600-ஆக வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் குடும்பத்துக்கு 100 நாட்கள் வேலையும், ரூ.281 வீதம் சம்பளத்தை குறைக்காமலும் வழங்க வேண்டும். மேலும், திமுக தனது தேர்தல் வாக்குறுதியின்படி 150 நாட்கள் வேலை வழங்க வேண்டும். நகர்புறங்களோடு இணைக்கப்பட்ட கிராமங்களில் வேலையின்மை தொடர்ந்து வருகிறது.
தமிழக அரசு 2021-ல் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நகர்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக செயல்படுத்தியது. ஆனால், 2022-ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே, வரும் நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்து திட்டத்தை முழுமையாக அமலாக்கம் செய்வதோடு, விவசாய தொழிலாளர்களுக்கு என தனித் துறையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் மார்ச் 16-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.