டிச.3-ல் உருவாகி தமிழகம் நோக்கி நகரும் புயல் – 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை | Michaung Cyclone may come towards Tamil Nadu says Meteorological Department
சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாக உள்ள ‘மிக்ஜாம்’ (Cyclone Michaung) என்ற புயல் தமிழகத்தை நோக்கி வரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 2-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த நிலையில், வங்கக் கடலில் உருவாக உள்ள புயல் தமிழகத்தை நோக்கி வரக்கூடும். அதே சமயத்தில் வரும் 2-ஆம் தேதி புயல் உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருநாள் தாமதமாக 3-ஆம் தேதி உருவாகும் எனவும் மிக்ஜாம் (Cyclone Michaung) என பெயரிடப்பட்ட இந்த புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் புயல் தமிழகத்தை நோக்கி வரும்போது கனமழை முதல் மிக கனமழை வரும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். இன்று விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, புதுக்கோட்டையில் கனமழை பெய்யக்கூடும். டிசம்பர் 2,3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
2-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், 3, 4 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். இன்று தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்றானது 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்” என்றார்.
இந்திய வானிலை ஆய்வு மைய தகவல்கள்: நவ.27 அன்று உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளது. பின்னர், இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணிநேரத்துக்குள் மேலும் வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் டிச.3 அன்று புயல் சின்னமாக மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
- நவ.30 கனமழை – செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள். (10 மாவட்டங்கள்)
-
- டிச.1 கனமழை –கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை (6 மாவட்டங்கள்)
-
- டிச.2 மிக கனமழை – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள். (5 மாவட்டங்கள்) கனமழை – ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்கள். (8 மாவட்டங்கள்)
-
- டிச.3 மிக கனமழை – திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள். (5 மாவட்டங்கள்) கனமழை – ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள். (8 மாவட்டங்கள்)
-
- டிச.4 கனமழை – சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள். (5 மாவட்டங்கள்)