செய்திகள்நம்மஊர்

கடலில் கூண்டு கட்டி, மீன் வளர்த்து, ஏற்றுமதி செய்ய விரைவில் புதிய திட்டம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல் | New project to build cages, raise fish and export at sea: Minister Anita Radha krishnan

கடலில் கூண்டு கட்டி, மீன் வளர்த்து ஏற்றுமதி செய்யும் புதிய திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில், இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட படகு உரிமையாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு தாட்கோ கழகத் தலைவர் மதிவாணன், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன் , கீழ்வேளூர் எம்எல்ஏ நாகை மாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 24 படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1.13 கோடி மதிப்பிலான நிவாரணத் தொகையை மாநில மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா, மாவட்ட ஊராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி, நாகை நகராட்சித் தலைவர் மாரிமுத்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை இணை இயக்குநர் ஜேய்ஸ் ஆலிவ்ரேச்சல், உதவி இயக்குநர்கள் ஜெயராஜ், சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மீனவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசிடம் தமிழக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கடலில் கூண்டு கட்டி, அதில் மீன்களை வளர்த்து, அவற்றை ஏற்றுமதி செய்யும் புதிய திட்டம் தமிழகத்தில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.

புதுக்கோட்டையில்…

தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் வடவாளத்தில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 1,300 பேருக்கு ரூ.2.49 கோடி மதிப்பில் 6,500 ஆடுகள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 34 படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1.6 கோடி நிவாரணத் தொகை காசோலையாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், எம்எல்ஏ வை.முத்துராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியபோது, “கால்நடைத் துறையில் மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்க 10 நாட்களில் 1,145 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்” என்றார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கடலில் எல்லைகள் தெரியாததாலும், படகுகளை எல்லைத்தாண்டி காற்று இழுத்துச் செல்வதாலும் இலங்கை கடற்படையிடம் தமிழர்கள் கைதாகின்றனர். அதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. மீனவர்களின் தகவல் தொடர்புக்காக சாட்டிலைட் போன் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *