ஆன்மிகம்

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் அத்தியாயம் – 5 (Sri Sai Satcharitam Chapter – 5)

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் அத்தியாயம் – 5 (Sri Sai Satcharitam Chapter – 5)

அத்தியாயம் – 5

சாந்த்பாடீலின்‌ கல்யாண கோஷ்டியுடன்‌ பாபாவின்‌ வருகை – வரவேற்கப்பட்டு சாயி என அழைக்கப்படுதல்‌ – மற்ற ஞானிகளுடன்‌ தொடர்பு – அவருடைய உடையும்‌ அன்றாட நிகழ்ச்சி நியதிகளும்‌ – பாதுகைகளின்‌ கதை – மொஹிதினுடன்‌ மல்யுத்தப்‌ பயிற்சியும்‌, வாழ்க்கையில்‌ மாற்றமும்‌ – தண்ணீரால்‌ விளக்கெரித்தல்‌ – போலி குரு ஜவ்ஹர்‌ அலி.

சாந்த்பாடிலின்‌ கல்யாண கோஷ்டியுடன்‌ பாபா திரும்புதல்‌

சென்ற அத்தியாயத்தில்‌ குறிப்பிட்டபடி இப்போது முதலில்‌ சாயிபாபா காணாமற்போன பிறகு ஷீர்டிக்கு எங்ஙனம்‌ திரும்பிவந்தார்‌ என்பதை விவரிக்கிறேன்‌. நைஜாம்‌ சமஸ்தானத்தைச்‌ சேர்ந்த ஓளரங்கபாத்‌ ஜில்லாவிலுள்ள தூப்காவன்‌ என்கிற கிராமத்தில்‌ சாந்த்பாடீல்‌ என்ற வசதியுள்ள முஹமதியப்‌ பெருந்தகை ஒருவர்‌ இருந்தார்‌. அவர்‌ ஓளரங்காபாத்துக்குப்‌ போய்க்கொண்டிருக்கையில்‌ ஒரு பெண்‌ குதிரையைத்‌ தொலைத்துவிட்டார்‌. இரண்டு மாதங்கள்‌ பிரயாசையுடன்‌ தேடினார்‌. ஆனாலும்‌ காணாமல்‌ போன அக்குதிரையைப்‌ பற்றிக்‌ கொஞ்சமும்‌ தகவல்பெற இயலவில்லை. ஏமாற்றத்துடன்‌ குதிரைச்‌ சேணத்தை தன்‌ தோளில்‌ போட்டுக்கொண்டு ஓளரங்கபாத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்தார்‌.

நாலரை காததூரம்‌ பிரயாணம்‌ செய்த பின்னர்‌ ஒரு மாமரத்தினருகில்‌ வந்தார்‌. அதன்‌ அடியில்‌ ஒரு பக்கிரி (விசித்ர மனிதர்‌) உட்கார்ந்து இருந்தார்‌. அவரது தலையில்‌ ஒரு குல்லாய்‌ இருந்தது. கஃப்னி என்னும்‌ நீண்ட ஆடை தரித்திருந்தார்‌. கமக்கட்டில்‌ சட்கா என்னும்‌ குட்டையான பருமனான ஒரு தடி வைத்திருந்தார்‌. ஹூக்கா குடிப்பதற்குத்‌ தயார்‌ செய்துகொண்டிருந்தார்‌.

சாந்த்பாடீல்‌ அவ்வழியே போவதைக்‌ கண்டு அவரைத்‌ தன்னிடத்திற்குக்‌ கூப்பிட்டுப்‌ புகைபிடிக்கவும்‌ கொஞ்சம்‌ ஓய்வெடுத்துக்கொள்ளவும்‌ சொன்னார்‌. அவ்விசித்ர மனிதர்‌ அல்லது பக்கிரி குதிரைச்‌ சேணத்தைப்‌ பற்றி வினவினார்‌. சாந்த்பாடீல்‌ தனது தொலைந்து போன குதிரையின்‌ மீதிருந்த சேணம்‌ அது என்று கூறினார்‌. அதற்கு அவர்‌ அவரிடம்‌ அருகாமையிலுள்ள சோலையொன்றில்‌ தேடும்படி கேட்டுக்கொண்டார்‌.

அவர்‌ அங்கே சென்றார்‌. ஆச்சரியத்திலும்‌ ஆச்சரியம்‌! அவர்‌ தன்னுடைய குதிரையைக்‌ கண்டுபிடித்துவிட்டார்‌. அந்த பக்கிரி ஓர்‌ சாதாரண மனிதரல்ல. ஆனால்‌ ஓர்‌ அவலியா (பெரும்‌ ஞானி) என்று எண்ணினார்‌. குதிரையுடன்‌ பக்கிரியிடம்‌ திரும்பி வந்தார்‌.

ஹூக்கா குடிப்பதற்குத்‌ தயாராகியது. ஆனாலும்‌ இரண்டு பொருட்கள்‌ தேவைப்பட்டன. குழாயைப்‌ பற்றவைப்பதற்கு நெருப்பு, சாபி – புகை இழுக்கப்‌ பயன்படும்‌ ஒரு துண்டுத்‌ துணியை நனைப்பதற்கு தண்ணீர்‌. பக்கிரி தனது கத்தியை எடுத்து அதை வலிய நிலத்தில்‌ நுழைத்தார்‌. அதிலிருந்து எரியும்‌ ஒரு நிலக்கரி நெருப்புத்‌ துண்டம்‌ வந்தது. அதை அவர்‌ குழாய்‌ வழி இட்டார்‌. பிறகு தமது சட்காவைத்‌ தரையில்‌ அடித்தார்‌. அவ்விடத்திலிருந்து நீர்‌ கசியத்‌ தொடங்கியது. சாபி நனைக்கப்பட்டு பிறகு பிழியப்பட்டுக்‌ குழாயில்‌ சுற்றப்பட்டது.

இங்ஙனம்‌ எல்லாம்‌ முடிந்த பின்னர்‌ பக்கிரி ஹூக்கா குடித்துவிட்டு சாந்த்பாடீலுக்கும்‌ புகைக்கக்‌ கொடுத்தார்‌. இவற்றையெல்லாம்‌ கண்ணுற்ற சாந்த்பாடீல்‌ வியப்புற்றார்‌. பின்பு அவர்‌ அவரைத்‌ தன்‌ வீட்டிற்கு அழைத்து தனது விருந்தோம்பலை ஏற்றுக்கொள்ளும்படிச்‌ சொன்னார்‌. மறுநாள்‌ அவர்‌ பாடீல்‌ வீட்டிற்குச்‌ சென்று சிலநாள்‌ தங்கியிருந்தார்‌. பாடீல்‌, தூப்காவன்‌ கிராமத்தின்‌ அதிகாரி. அவருடைய மனைவியின்‌ சகோதரரது புதல்வன்‌ கல்யாணம்‌ செய்யப்படவிருந்தான்‌. ஷீர்டியிலிருந்து மணப்பெண்‌ தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாள்‌.

எனவே ஷீர்டிக்குப்‌ புறப்படுவதற்கு பாடீல்‌ ஆயத்தங்கள்‌ செய்யத்துவங்கினார்‌. பக்கிரியும்‌ கல்யாண கோஷ்டியுடன்‌ கூடவந்தார்‌. கல்யாணமும்‌ எவ்விதச்‌ சிரமமும்‌ இன்றி முடிவடைந்து கோஷ்டியும்‌ தூப்காவனிற்கு திரும்பியது. ஆனால்‌ பக்கிரி மாத்திரம்‌ ஷீர்டியிலேயே இருந்தார்‌. பின்னர்‌ அங்கேயே நிரந்தரமாக தங்கினார்‌.

சாயி என்னும்‌ பெயரை பக்கிரி எப்படி அடைந்தார்‌?

கல்யாண கோஷ்டி ஷீர்டியை அடைந்ததும்‌ கண்டோபா கோவிலுக்கு அருகிலுள்ள ஓர்‌ ஆலமரத்தடியில்‌ வந்து தங்கினர்‌. கண்டோபா கோவிலின்‌ பரந்தவெளியில்‌ வண்டிகள்‌ அவிழ்த்து விடப்பட்டன. கோஷ்டியில்‌ உள்ளவர்கள்‌ எல்லாம்‌ ஒவ்வொருவராக இறங்கினர்‌. பக்கிரியும்‌ கீழே இறங்கினார்‌. இளம்‌ பக்கிரி இறங்கிக்கொண்டிருப்பததை. பகத்‌ மஹல்ஸாபதி கண்ணுற்றார்‌. உடனே “யா! சாயி” (சாயி வரவேண்டும்‌!) என்று கூவினார்‌. அதிலிருந்து மற்றவர்களும்‌ அவரை சாயி என்று அழைத்தார்கள்‌. அதிலிருந்து அவர்‌ “சாயிபாபா” என்னும்‌ பெயரால்‌ அறியப்பட்டார்‌.

மற்ற ஞானிகளுடன்‌ தொடர்பு

சாயிபாபா மசூதியில்‌ தங்கத்‌ துவங்கினார்‌. தேவிதாஸ்‌ என்ற ஒரு ஞானி, பாபா வருவதற்குப்‌ பல ஆண்டுகளுக்கு முன்பே ஷீர்டியில்‌ தங்கியிருந்தார்‌. பாபா அவர்தம்‌ நட்பை விரும்பினார்‌. அவருடன்‌ மாருதி கோவிலிலும்‌, சாவடியிலும்‌ தங்கியிருந்தார்‌. சில சமயங்களில்‌ தனியாகவும்‌ இருந்தார்‌. பிறகு ஜானகிதாஸ்‌ என்று மற்றொரு ஞானியும்‌ வந்தார்‌. பாபா அவருடன்‌ பேசிக்கொண்டிருப்பதிலேயே பெரும்பாலான நேரத்தைக்‌ கழித்தார்‌. அன்றி ஜானகிதாஸ்‌ பாபா தங்கியிருந்த இடத்திற்குச்‌ செல்வார்‌. அங்ஙனமே புண்தாம்பேயினின்று இல்லறத்திலிருந்த வைசிய ஞானியான கங்காகீர்‌ எப்போதும்‌ ஷீர்டிக்கு வந்தார்‌.

சாயிபாபா தம்‌ இரு கைகளாலும்‌ தண்ணீர்‌ குடத்தைத்‌ தோட்டத்திற்கு நீர்‌ பாய்ச்சுவதற்காக எடுத்துச்‌ சென்றபோது முதன்முதலாக அவரைக்‌ கண்ட கங்காகீர்‌ ஆச்சர்யப்பட்டு வியந்து கூறியதாவது, “ஷீர்டி ஆசீர்வதிக்கப்பட்டது. அது விலைமதிக்க முடியாத வைரத்தைப்‌ பெற்றிருக்கிறது. இம்மனிதர்‌ இன்று தண்ணீர்‌ சுமந்துகொண்டிருக்கிறார்‌. ஆனாலும்‌ அவர்‌ சாதாரண மனிதர்‌ அல்ல. இந்நிலம்‌ (ஷீர்டி) அதிர்ஷ்டமும்‌, புண்ணியமும்‌ உடையதாதலின்‌ அஃது ஓர்‌ வைரத்தைப்‌ பெற்றது”. அங்ஙனமே யேவலா மடத்தைச்‌ சேர்ந்த ஆனந்த்நாத்‌ என்பவர்‌ புகழ்பெற்ற ஞானியும்‌, அக்கல்கோட்‌ மஹராஜின்‌ சீடரும்‌ ஆவார்‌. அவர்‌ ஷீர்டி மக்கள்‌ சிலருடன்‌ ஷீர்டிக்கு வந்திருந்தார்‌. அவர்‌ சாயிபாபாவைத்‌ தம்முன்‌ கண்டபோது வெளிப்படையாகப்‌ பின்வருமாறு கூறினார்‌, “இது உண்மையில்‌ விலைமதிக்க முடியாத இரத்தினமாகும்‌. அவர்‌ ஒரு சாதாரண மனிதர்‌ போன்று தோன்றினாலும்‌, அவர்‌ ஒரு சாதாரணக்கல்‌ அல்ல. ஒரு வைரக்கல்‌, கூடிய விரைவில்‌ நீங்கள்‌ இதை உணர்வீர்கள்”. இதைக்கூறிய பின்னர்‌ அவர்‌ யேவலாவுக்குத்‌ திரும்பிவிட்டார்‌. இது சாயிபாபா இளைஞனாய்‌ இருக்கும்போது சொல்லப்பட்டது.

பாபாவின்‌ உடையும்‌ அன்றாட நிகழ்ச்சி நியதியும்

சாயிபாபா இளம்‌ பருவத்தில்‌ தமது தலையில்‌ முடி வளர்த்தார்‌. தலைமுடியை ஒழுங்குபடுத்துவதே இல்லை. விளையாட்டு வீரனைப்‌ போன்று அவர்‌ உடையணிந்தார்‌. அவர்‌ ராஹாதாவிற்கு சென்றிருந்தபோது ஜெந்து (சாமந்தி), ஜாய்‌ (மல்லிகை), ஜூய்‌ (முல்லை) ஆகியவற்றின்‌ சிறிய புஷ்பங்களைக்‌ கொணர்ந்து, தரையைச்‌ சுத்தப்படுத்தி, காய்ந்த நிலத்தைக்‌ கொத்தி, அவற்றை நட்டு தண்ணீர்‌ விட்டார்‌. வாமன்‌ தாத்யா என்னும்‌ ஓர்‌ அடியவர்‌ அவருக்குத்‌ தினந்தோறும்‌ இரண்டு பானைகள்‌ கொடுத்தார்‌. இவற்றைக்கொண்டு பாபா தமது செடிகளுக்குத்‌ தண்ணீர்‌ விடுவது வழக்கம்‌. கிணற்றிலிருந்து நீர்‌ இறைத்து மட்குடங்களை தாமே தோளில்‌ தூக்கிச்‌ செல்வார்‌.

மாலை நேரங்களில்‌ மண்‌ பானைகள்‌ வேப்பமரத்தடியில்‌ வைக்கப்பட்டிருக்கும்‌. அவை வெறும்‌ பச்சை மண்ணால்‌ செய்யப்பட்டு சுடப்படாத காரணத்தால்‌ அங்ஙனம்‌ வைக்கப்பட்ட உடனேயே உடைந்துவிடும்‌. அடுத்தநாள்‌ தாத்யா வேறு இரண்டு புதுப்பானைகள்‌ கொடுப்பார்‌. இந்நிகழ்ச்சி மூன்று ஆண்டுகள்‌ நடந்தது. சாயிபாபாவின்‌ கடினப்பயிற்சி, உழைப்பு ஆகியவற்றினால்‌ ஒரு பூந்தோட்டம்‌ வளர்ந்தது. இந்த நிலத்தில்‌ தற்போது பாபாவின்‌, “சமாதிமந்திர்‌” என்னும்‌ ஓர்‌ பெரிய மாளிகை இருக்கிறது. இது தற்போது பல பக்தர்களால்‌ அடிக்கடி விஜயம்‌ செய்யப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது.

வேப்பமரத்தடியில்‌ உள்ள பாதூகைகளின்‌ கதை

பாயி கிருஷ்ணாஜி அலிபாகர்‌ என்பவர்‌ அக்கல்கோட்‌ மஹராஜின்‌ அடியவர்‌. அக்கல்கோட்‌ மஹராஜின்‌ உருவப்படத்தை வழிபட்டார்‌. அவர்‌ ஒருமுறை அக்கல்கோட்டிற்கு (ரோலாப்பூர்‌ ஜில்லா) சென்று மஹராஜின்‌ பாதுகைகளைத்‌ தரிசனம்‌ செய்துகொண்டு, தன்னுடைய நேர்மையான வழிபாட்டைச்‌ செலுத்திவர நினைத்தார்‌. அவர்‌ அங்கு செல்வதற்கு முன்‌ கனவில்‌ ஒரு காட்சியைக்‌ கண்டார்‌. அக்காட்சியில்‌ அக்கல்கோட்‌ மஹராஜ்‌ தோன்றி அவரிடம்‌, “இப்போது ஷீர்டியே எனது இருப்பிடம்‌. அங்கு சென்று உனது வழிபாட்டைச்‌ செலுத்து” என்றார்‌. எனவே பாயி தனது திட்டத்தை மாற்றிக்கொண்டு ஷீர்டிக்கு வந்து பாபாவை வழிபட்டு, ஆறுமாதங்கள்‌ அங்கு தங்கி மகிழ்ச்சியடைந்தார்‌.

அவருடைய காட்சி முதலியவற்றின்‌ ஞாபகார்த்தமாக அவர்‌ பாதுகைகளைத்‌ தயாரித்து, அதை சக வருடம்‌ 1834ல்‌ (1912) ஆவணி மாதத்தில்‌ பெளர்ணமி தினத்தன்று தாதா கேல்கர்‌, உபாஸனி முதலியோர்‌ நடத்திய உரிய சடங்கு சம்பிரதாயங்களுடன்‌ வேப்பமரத்தடியில்‌ ப்ரதிஷ்டை செய்தார்‌. அதன்‌ வழிபாட்டுக்கு ஓர்‌ அந்தணர்‌ நியமிக்கப்பட்டார்‌. அதனுடைய நிர்வாகம்‌ சகுண்‌ மேரு நாயக்‌ என்ற அடியவரிடம்‌ ஒப்புவிக்கப்பட்டது.

இக்கதையின்‌ முழுவிவரம்‌

தாணேவைச்‌ சேர்ந்த திரு B.V. தேவ்‌ என்னும்‌ ஓய்வுபெற்ற மம்லதார்‌, சாயிபாபாவின்‌ ஒரு பெரிய பக்தர்‌. இவர்‌ இந்த விஷயத்தைப்‌ பற்றி சகுண்‌ மேரு நாயக்‌, கோவிந்த்‌ கமலாகர்‌ தீக்ஷித்‌ இவர்களிடமிருந்து விசாரித்து பாதுகைகளைக்கொண்ட ஒரு கட்டுரையை சாயிலீலா சஞ்சிகையில்‌ (தொகுப்பு 2, எண்‌. 1 பக்கம்‌ 25) பதிப்பித்துள்ளார்‌.

சக வருடம்‌ 1834ல்‌ (1912) பம்பாயைச்‌ சேர்ந்த டாக்டர்‌ ராமராவ்‌ கோதாரி, ஒருமுறை ஷீர்டிக்கு பாபாவின்‌ தரிசனத்துக்கு வந்தார்‌. அவரது கம்பவுண்டரும்‌, அவரது நண்பர்‌ பாயி கிருஷ்ணாஜி அலிபாகரும்‌ அவருடன்‌ வந்தார்கள்‌. கம்பவுண்டரும்‌, பாயியும்‌, சகுண்‌ மேரு நாயக்‌ உடனும்‌ கோவிந்த்‌ கமலாகர்‌ தீக்ஷித்‌ உடனும்‌ நெருங்கிய நண்பர்களானார்கள்‌. சில விஷயங்களைப்‌ பற்றி இவர்கள்‌ பேசிக்கொண்டிருக்கையில்‌, ஷீர்டிக்கு சாயிபாபா முதல்‌ விஜயம்‌ செய்தது, புனித வேப்ப மரத்தடியில்‌ அமர்ந்திருந்தது, இவ்வுண்மைகளின்‌ ஞாபகார்த்தம்‌ ஒன்று இருக்கவேண்டும்‌ என்று நினைத்தார்கள்‌. பாபாவின்‌ பாதுகைகளைப்‌ ப்ரதிஷ்டை செய்வதற்கு எண்ணி, அவற்றைச்‌ சாதாரணக்‌ கல்லில்‌ செய்வதற்கு இருந்தனர்‌.

அப்போது பாயின்‌ நண்பரான கம்பவுண்டர்‌ தனது எஜமானரான டாக்டர்‌ ராமராவ்‌ கோதாரியிடம்‌ இதைத்‌ தெரிவித்தால்‌, அருமையான பாதுகைகளை அவர்‌ வடிவமைப்பார்‌ என்று யோசனை கூறினார்‌. அனைவரும்‌ இந்த யோசனையை விரும்பினர்‌.

டாக்டர்‌ கோதாரியிடமும்‌ இதைப்பற்றித்‌ தெரிவித்தனர்‌. அவரும்‌ ஷீர்டிக்கு வந்து பாதுகைகளின்‌ திட்டத்தை வரைந்தார்‌. கண்டோபா கோவிலில்‌ உள்ள உபாஸனி மஹராஜிடம்‌ அவர்‌ சென்று தனது திட்டத்தைக்‌ காண்பித்தார்‌. உபாஸனி அதில்‌ பல முன்னேற்றத்‌ திருத்தங்கள்‌ செய்து தாமரைப்‌ புஷ்பங்கள்‌, சங்கு, சக்கரம்‌, மனிதன்‌ முதலியவற்றை வரைந்து, வேப்பமரத்தின்‌ உயர்வைப்‌ பற்றியும்‌, பாபாவின்‌ யோகசக்தியைப்‌ பற்றியும்‌‌‌ உள்ள பின்வரும்‌ ஸ்லோகத்தை அதில்‌ பொறிக்கலாம்‌ என்றும்‌ யோசனை கூறினார்‌.

அந்த ஸ்லோகம்‌ பின்வருமாறு :

ஸதா நிம்பவ்ருக்ஷஸ்ய மூலாதிவாஸாத்‌

ஸுதாஸ்த்ராவிணம்‌ திக்தமப்யப்ரியம்‌ தம்‌

தரும்‌ கல்பவ்ருக்ஷாதிகம்‌ ஸாதயந்தம்‌

நமாமீஷ்வரம்‌ சத்குரும்‌ சாயிநாதம்‌

உபாஸனியின்‌ யோசனைகள்‌ ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன. பாதுகைகள்‌ பம்பாயில்‌ செய்யப்பட்டு ஷீர்டிக்கு கம்பவுண்டர்‌ மூலம்‌ அனுப்பப்பட்டன. பாபா அவற்றை, ஆவணி மாத பெளர்ணமி தினத்தன்று ப்ரதிஷ்டை செய்ய வேண்டும்‌ என்று சொன்னார்‌. அத்தினத்தன்று காலை 11:00 மணிக்கு பாதுகைகளை கண்டோபா கோவிலிலிருந்து த்வாரகாமாயிக்கு (மசூதி) G.K. தீக்ஷீத்‌ ஊர்வலமாகத்‌ தனது தலையில்‌ எடுத்து வந்தார்‌. பாபா அப்பாதுகைகளைத்‌ தொட்டு, இவைகள்‌ பிரபுவின்‌ பாதங்கள்‌ என்றும்‌, அவற்றை வேப்பமரத்தடியில்‌ ப்ரதிஷ்டை செய்யும்படியும்‌ கூறினார்‌.

அதற்கு முதல்நாள்‌ பஸ்தா சேட்‌ என்ற பம்பாயைச்‌ சேர்ந்த பார்சி பக்தர்‌ ரூ.25 மணியார்டர்‌ செய்திருந்தார்‌. பாபா இத்தொகையைப்‌ ப்ரதிஷ்டை செய்யக்‌ கொடுத்துவிட்டார்‌. ப்ரதிஷ்டையின்‌ மொத்தச்‌ செலவு ரூ.100 ஆகியது. அதில்‌ ரூ.75 நன்கொடைகளினால்‌

நான்‌ சாமிநாத்‌ பிரபுவை வணங்குகிறேன்‌. வேப்பமரம்‌ கசப்பாகவும்‌, இனிமையற்றதாகவும்‌ இருப்பினும்‌ அவரது நிரந்தர இருக்கையினால்‌ அமிர்தத்தை கசிகிறது, கல்ப விருக்ஷத்தைவிடச்‌ சிறந்தது (அம்மரத்தின்‌ கசிவு, அமிர்தம்‌ என்று அதன்‌ குணப்படுத்தும்‌ தன்மையால்‌ அழைக்கப்படுகிறது). சேர்க்கப்பட்டது. முதல்‌ ஐந்து ஆண்டுகள்‌, G.K. தீக்ஷித்‌ அவர்களால்‌ பாதுகைகள்‌ வழிபாடு செய்யப்பட்டது. பின்னர்‌ இவ்வழிபாடு ஜக்கடியைச்‌ சேர்ந்த லக்ஷ்மண்‌ காகேஷ்வரால்‌ செய்யப்பட்டது. முதல்‌ ஐந்து ஆண்டுகளில்‌ டாக்டர்‌ கோதாரி விளக்கேற்றுவதற்காக, மாதம்‌ ரூ.2 அனுப்பி வைத்தார்‌. பாதுகைகளைச்‌ சுற்றிப்போட வேலியும்‌ அனுப்பினார்‌. ஸ்டேஷனிலிருந்து அவ்வேலியை ஷீர்டிக்குக்‌ கொண்டுவரும்‌ செலவும்‌ (ரூ.7-8-0) கூரையும்‌ சகுண்‌ மேரு நாயக்கினால்‌ கொடுக்கப்பட்டது. தற்போது ஜாகடி (நாநாபூஜாரி) வழிபாட்டைச்‌ செய்கிறார்‌. சகுண்‌ மேரு நாயக்‌ நைவேத்யம்‌, மாலை விளக்கேற்றுதல்‌ முதலியவைகளைச்‌ செய்கிறார்‌.

பாயி கிருஷ்ணாஜி என்பவர்‌ முதலில்‌ அக்கல்கோட்‌ மஹராஜின்‌ அடியவராவார்‌. சக வருடம்‌ 1834ல்‌ பாதுகைகள்‌ ப்ரதிஷ்டை செய்யப்படும்‌ சமயத்தில்‌ அக்கல்கோட்‌ போகும்‌ வழியில்‌ ஷீர்டிக்கு வந்தார்‌. பாபாவின்‌ தரிசனம்‌ ஆனபிறகு அக்கல்கோட்டுக்கு போக விரும்பி பாபாவின்‌ அனுமதியை இதற்காக வேண்டினார்‌. பாபா அவரிடம்‌, “அக்கல்கோட்டில்‌ என்ன இருக்கிறது, நீ ஏன்‌ அங்கு போகவேண்டும்‌? அக்கல்கோட்‌ மஹராஜ்‌ இங்கேயே (என்னுடன்‌ ஒன்றி) இருக்கிறார்‌!” என்றார்‌. இதைக்கேட்டு பாயி அக்கல்கோட்‌ செல்லவில்லை, பாதுகைகளின்‌ ப்ரதிஷ்டைக்குப்‌ பின்‌ ஷீர்டிக்கு அடிக்கடி வந்தார்‌.

ஹேமத்பந்திற்கு இவ்விபரங்கள்‌ தெரியாதென்று B.V தேவ்‌ முடிக்கிறார்‌. அவர்‌ அங்ஙனம்‌ அறிந்திருப்பாராயின்‌ அதைத்‌ தன்னுடைய சத்சரிதத்தில்‌ சேர்க்கத்‌ தவறியிருக்கமாட்டார்‌.

மொஹிதின்‌ தம்பயோலியுடன்‌ மல்யுத்தப்‌ பயிற்சியும்‌ வாழ்க்கையில்‌ மாற்றமும்‌ பாபாவின்‌ மற்ற கதைகளுக்குத்‌ திரும்புவோம்‌. ஷீர்டியில்‌ மொஹிதின்‌ தம்போலி என்னும்‌ பெயருடைய ஓர்‌ மல்யுத்தச்‌ சண்டைக்காரன்‌ இருந்தான்‌. பாபாவுக்கும்‌, அவனுக்கும்‌ சில விஷயங்களில்‌ உடன்பாடு ஏற்படவில்லை. இருவரும்‌ மல்யுத்தம்‌ செய்யத் தொடங்கினர்‌. இதில்‌ பாபா தோற்கடிக்கப்பட்டார்‌. அதிலிருந்து பாபா தம்முடைய உடையையும்‌, வாழ்க்கைமுறையையும்‌ மாற்றி அமைத்துக்கொண்டார்‌. மேலாடையாக கஃப்னி அணிந்தார்‌. லங்கோடு (இடுப்புப்‌ பட்டை) அணிந்து தன்‌ தலையை ஓர்‌ துண்டுத்‌ துணியால்‌ மூடினார்‌. தம்முடைய ஆசனத்திற்கு ஒரு சாக்குத்‌ துணியையும்‌, படுக்கைக்கு ஒரு சாக்குத்‌ துணியையுமே உபயோகித்தார்‌. கிழிந்த, கசங்கிய கந்தல்‌ உடைகளை அணிவதிலேயே திருப்தியடைந்தார்‌. அவர்‌ எப்போதும்‌ “ஏழ்மை அரசுரிமையைவிட நன்று, இறைமையைவிட மிகமிக நன்று, கடவுள்‌ ஏழைகளின்‌ நிரந்தர நண்பராவார்‌” என்று கூறிக்கொண்டிருந்தார்‌.

கங்காகீரும்‌ மல்யுத்தம்‌ செய்வதில்‌ மிக்க விருப்பமுள்ளவர்‌. அவர்‌ ஒருமுறை மல்யுத்தம்‌ செய்யும்போது ஒரு ஆசையற்ற உணர்ச்சி அவருக்கு ஏற்பட்டது. அப்போது ஓர்‌ குரல்‌ அவரிடம்‌, அவரது உடம்பைத்‌ துறந்து கடவுளுடன்‌ நிரந்தரமாக ஈடுபடும்படி கூறுவது கேட்டது. எனவே, அவரும்‌ சம்சாரத்தைத்‌ துறந்து கடவுளை நோக்கித்‌ திரும்பினார்‌. புண்தாம்பேக்கு அருகிலுள்ள ஓர்‌ ஆற்றின்‌ கரையில்‌ ஒரு மடத்தை ஸ்தாபித்தார்‌.

சாயிபாபா மக்களுடன்‌ கலந்து பேசுவதில்லை. அவரை யாராவது கேள்வி கேட்டபோது மட்டுமே அதற்குப்‌ பதில்‌ கூறினார்‌. பகற்பொழுதில்‌ எப்போதும்‌ வேப்பமரத்தடியிலேயே உட்கார்ந்திருந்தார்‌. சில சமயங்களில்‌ கிராம எல்லையில்‌ வாய்க்காலுக்கு அருகிலுள்ள ஓர்‌ ஆலமரத்தின்‌ நிழலில்‌ அமர்ந்திருந்தார்‌. மாலை நேரங்களில்‌ அவர்‌ குறிக்கோள்‌ இன்றி நடப்பது வழக்கம்‌. சில நேரங்களில்‌ நீம்காவன்‌ போவார்‌. அங்கு த்ரயம்பக்‌ டேங்க்லேயின்‌ வீட்டிற்குப்‌ போவார்‌. பாபா அவரை விரும்பினார்‌. அவரின்‌ (பாபா சாஹேபின்‌) தம்பியான நானா சாஹேபுக்கு இரண்டாவது திருமணம்‌ செய்தும்‌ குழந்தைகள்‌ ஏதும்‌ இல்லை. பாபா சாஹேப்‌, நானா சாஹேபை பாபாவின்‌ தரிசனத்திற்காக அனுப்பினார்‌. சில காலத்திற்குப்‌ பிறகு பாபாவின்‌ அருளால்‌ நானா சாஹேப்‌ ஒரு புதல்வனை பெற்றார்‌. அதிலிருந்து சாயிபாபாவை பார்க்க மக்கள்‌ கூட்டமாகத்‌ திரண்டு வந்தனர்‌. அவருடைய புகழ்‌ பரவி, அஹமத்‌ நகரை எட்டியது. அதிலிருந்து நானா சாஹேப்‌ சாந்தோர்கரும்‌, கேசவ சிதம்பரும்‌ மற்றும்‌ பலரும்‌ ஷீர்டிக்கு வரத்தொடங்கினர்‌.

பாபா பகற்பொழுதில்‌ தமது அடியவர்களால்‌ சூழப்பட்டிருந்தார்‌. இரவில்‌ உதிர்ந்துகொட்டும்‌ ஒரு பழைய மசூதியில்‌ படுத்தார்‌. பாபாவிடம்‌ இந்த நேரத்தில்‌ ஹூக்கா, புகையிலை, ஒரு டம்ளர்‌ (தகர டப்பா), நீண்ட கஃப்னி, தலையைச்‌ சுற்றி ஒரு துண்டுத்துணி, ஒரு சட்கா (குச்சி) முதலிய சிறுசிறு உடைமைகள்‌ இருந்தன. இவைகளை எல்லாம்‌ பாபா எப்போதும்‌ வைத்திருந்தார்‌. தலையிலுள்ள அச்சிறு துணி, நன்கு முறுக்கப்பட்ட முடியைப்போல்‌ இடது காதிலிருந்து முதுகில்‌ தொங்கியது. இது பல வாரங்களாகத்‌ துவைக்கப்படாதது. அவர்‌ எவ்வித பூட்ஸோ, காலணியோ அணியவில்லை.நாட்களின்‌ பெரும்பகுதிக்கு ஓர்‌ சாக்குத்‌ துணியே அவரின்‌ ஆசனமாகும்‌. ஒரு கெளபீனத்தை அவர்‌ அணிந்திருந்தார்‌. குளிரை விரட்ட எப்போதும்‌ துனியின்‌ (புனித நெருப்பின்‌) முன்னால்‌ இடது கையை மரக்கட்டைப்‌ பிடியின்‌ மீது வைத்தவாறு தெற்கு நோக்கி அமர்ந்திருந்தார்‌. அந்தத்‌ துனியில்‌ அஹங்காரம்‌, ஆசைகள்‌, எல்லாவித எண்ணங்கள்‌ ஆகியவற்றைக்‌ காணிக்கையாகப்‌ போட்டார்‌.

எப்போதும்‌, “அல்லா மாலிக்‌” (கடவுளே ஒரே உரிமையாளர்‌) என்று கூறினார்‌. எல்லா பக்தர்களும்‌ வந்து அவரைத்‌ தரிசித்ததும்‌, அவர்‌ அமர்ந்திருந்ததுமான மசூதியானது இரண்டு அறைகளின்‌ அளவே இருக்கும்‌. 1912க்குப்‌ பிறகு ஒரு மாற்றம்‌ நிகழ்ந்தது. பழைய மசூதி பழுதுபார்க்கப்பட்டு ஒரு தாழ்வாரம்‌ எழுப்பப்பட்டது. இம்மசூதிக்கு பாபா தங்கவருவதற்குமுன்‌ தகியா என்ற இடத்தில்‌ (முஸ்லிம்‌ ஞானியரின்‌ இருப்பிடம்‌) வசித்து வந்தார்‌. அங்கேதான்‌ பாபா கால்களில்‌ சலங்கை கட்டி, அழகாக நடனம்‌ செய்துகொண்டு அன்புடன்‌ பாடினார்‌.

தண்ணீரால்‌ விளக்கெரித்தல்‌

சாயிபாபாவுக்கு விளக்குகள்‌ என்றால்‌ அதிக விருப்பம்‌. அவர்‌ கடைக்காரர்களிடமிருந்து எண்ணெய்‌ வாங்கி மசூதியிலும்‌, கோவிலிலும்‌ இரவு முழுவதும்‌ விளக்குகளை எரியவிடுவது வழக்கம்‌. இது சில நாட்கள்‌ நடந்துவந்தது. பின்பு எண்ணெய்‌ இலவசமாக அளித்துவந்த வணிகர்கள்‌ எல்லோரும்‌ ஒன்றுகூடி, இனிமேல்‌ எண்ணெய்‌ கொடுப்பதில்லை என முடிவு செய்தனர்‌. வழக்கம்போல்‌ பாபா அவர்களிடம்‌ எண்ணெய்‌ கேட்கப்போனபோது அவர்கள்‌ எல்லோரும்‌ தீர்மானமாக எண்ணெய்‌ இல்லை எனச்‌ சொல்லிவிட்டார்கள்‌.

இதைக்கேட்டுக்‌ குழப்பமடையாத பாபா, மசூதிக்குத்‌ திரும்பி வந்து காய்ந்த திரிகளை விளக்குகளில்‌ இட்டார்‌. வணிகர்கள்‌ மசூதிக்கு வந்து என்ன நடக்கிறது என்பதை ஆர்வத்துடன்‌ கவனித்துக்கொண்டிருந்தனர்‌. பாபா, மிகக்‌ கொஞ்சம்‌ (சில துளிகள்‌) மட்டுமே எண்ணெய்‌ இருந்த தகரக்‌ குவளையை எடுத்தார்‌. தண்ணீரை அதில்‌ ஊற்றிக்‌ குடித்தார்‌. இவ்விதமாக அதை நிவேதனம்‌ செய்தபிறகு தகர டப்பாவில்‌ தண்ணீரை மறுபடியும்‌ எடுத்து எல்லா விளக்குகளிலும்‌ அதனையே நிரப்பிக்‌ கொளுத்தினார்‌. வணிகர்களுக்கு ஆச்சர்யத்தையும்‌, பயத்தையும்‌ விளைவிக்கும்படியாக விளக்குகள்‌ எரியத்‌ தொடங்கின. இரவு முழுவதும்‌ எரிந்துகொண்டிருந்தன.

வணிகர்கள்‌ தங்கள்‌ செய்கைக்கு மனம்‌ வருந்தி பாபாவிடம்‌ மன்னிப்புக்‌ கேட்டுக்கொண்டனர்‌. பாபா அவர்களை மன்னித்து, எதிர்காலத்தில்‌ அதிக உண்மையுள்ளவர்களாக இருக்கும்படி கேட்டுக்‌ கொண்டார்‌.

போலி குரு ஜன்ஹர்‌ அலி

மேலே குறிப்பிட்ட மல்யுத்தம்‌ நடந்த ஐந்தாண்டுகளுக்குப்‌ பின்னர்‌, ‘ஜவ்ஹர்‌ அலி’ என்னும்‌ பெயருடைய பக்கிரி தன்‌ சீடர்களுடன்‌ அஹமத்நகரிலிருந்து, ராஹாதாவுக்கு வந்து வீரபத்ர ஸ்வாமி கோவிலுக்கு அருகிலுள்ள பக்கலில்‌ (விசாலமான அறை) தங்கினார்‌. இப்பக்கிரி படித்தவர்‌. குரான்‌ முழுவதையும்‌ ஒப்பிக்கும்‌ ஆற்றல்‌ உடையவர்‌. இனிமையான நா உடையவர்‌. கிராமத்தைச்‌ சேர்ந்த பல மதப்பற்றும்‌, பக்தியும்‌ உடைய மக்கள்‌ அவரிடம்‌ வந்து மரியாதை செய்யத்‌ தொடங்கினர்‌. அவர்‌ அந்தக்‌ கிராம மக்கள்‌ உதவியுடன்‌ வீரபத்திரர்‌ கோவிலுக்கு அருகில்‌ ஓர்‌ ஈத்கா (ஈத்‌ தினத்தன்று முஹமதியர்‌ தொழும்‌ இடத்தின்‌ முன்புள்ள சுவர்‌) கட்டத்‌ தொடங்கினார்‌. இவ்விஷயத்தைப்‌ பற்றி சில சர்ச்சைகள்‌ உண்டானதால்‌, ஜவ்ஹர்‌ அலி ராஹாதாவை விட்டுப்‌ புறப்பட வேண்டியதாயிற்று.

பிறகு அவர்‌ ஷீர்டிக்கு வந்து பாபாவுடன்‌ மசூதியில்‌ தங்கினார்‌. அவருடைய இனிமையான வாக்குகளால்‌ மக்களைக்‌ கவர்ந்தார்‌. பாபாவைத்‌ தன்னுடைய சீடர்‌ என்று கூறத்‌ தொடங்கினார்‌. பாபாவும்‌ அதை மறுக்கவில்லை. அவரின்‌ சீடராக இருக்கச்‌ சம்மதித்தார்‌. குரு, சீடர்‌ இருவரும்‌ ராஹாதாவுக்குத்‌ திரும்பி அங்கு வசிக்க முடிவு செய்தனர்‌. குரு, சீடரின்‌ மதிப்பை அறிந்திருக்கவே இல்லை. ஆனால்‌ சீடர்‌, குருவின்‌ குற்றங்களை உணர்ந்திருந்தார்‌. எனினும்‌ அவரை மதிக்காமல்‌ இருந்ததில்லை. பாபா தமது கடமைகளை கவனத்துடன்‌ ஆற்றிக்கொண்டு வந்தார்‌. தமது குருவிற்குப்‌ பல்வேறு விதங்களில்‌ பணிபுரிந்தும்‌ வந்தார்‌. ஷீர்டிக்கு அவர்கள்‌ அடிக்கடி வருவது வழக்கம்‌. ஆனால்‌ அவர்களின்‌ முக்கிய இருப்பிடம்‌ ராஹாதாவாகும்‌.

ஷீர்டியிலுள்ள பாபாவின்‌ அன்புச்‌ சீடர்கள்‌, பாபா அவர்களைவிட்டு ராஹாதாவில்‌ தங்கியிருப்பதை விரும்பவில்லை. எனவே அவர்கள்‌ ஓர்‌ கூட்டமாக ராஹாதாவுக்குச்‌ சென்று, பாபாவை ஈத்காவுக்கு அருகில்‌ சந்தித்து, தாங்கள்‌ வந்த காரணத்தைக்‌ கூறினார்கள்‌. பாபா, அவர்களிடம்‌ “பக்கிரி ஒர்‌ கோபக்கார குணங்கெட்ட மனிதர்‌ என்றும்‌, தான்‌ அவரை விட்டு வரமுடியாது என்றும்‌, எனவே பக்கிரி வருவதற்குள்‌ எல்லோரும்‌ திரும்பி விடுவது நல்லது” என்றும்‌ கூறிக்கொண்டிருந்தார்‌. அப்போது பக்கிரி திரும்பி வந்து, தனது சீடனை அவர்களுடன்‌ அழைத்துச்‌ செல்ல முயன்றதற்காக அவர்களைக்‌ கோபித்தார்‌. சில விவாதங்களும்‌, தகராறுகளும்‌ நிகழ்ந்தன. முடிவில்‌ குரு, சீடர்‌ இருவரும்‌ ஷீர்டிக்குத்‌ திரும்பும்படித்‌ தீர்மானிக்கப்பட்டது. எனவே அவர்கள்‌ ஷீர்டிக்குத்‌ திரும்பி வந்து வசிக்கத்‌ தொடங்கினார்கள்‌.

சில நாட்களுக்குப்‌ பிறகு குரு, தேவிதாசரால்‌ சோதிக்கப்பட்டு முழுமைக்குத்‌ தேவையுள்ளவர்‌ எனக்‌ கண்டுபிடிக்கப்பட்டார்‌. பாபா ஷீர்டிக்குக்‌ கல்யாண கோஷ்டியுடன்‌ வருவதற்குப்‌ பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த தேவிதாசர்‌ பத்து அல்லது பதினொரு வயது பாலகனாக மாருதி கோவிலில்‌ வசித்து வந்தார்‌. தேவிதாசருக்குப்‌ பல சிறப்பான அம்சங்களும்‌, சிறப்பான கண்களும்‌ அமைந்திருந்தன.அவர்‌ அவாவின்மையின்‌ அவதாரமும்‌, ஞானியும்‌ ஆவார்‌.

தாத்யா கோதே, காஷிநாத்‌ போன்ற பலர்‌ அவரைத்‌ தமது குருவாக நினைத்திருந்தனர்‌. அவர்கள்‌ ஜவ்ஹர்‌ அலியை, தேவிதாஸ்‌ முன்னிலையில்‌ கொண்டுவந்தனர்‌. அவர்கள்‌ தொடர்ந்த விவாதத்தில்‌ ஜவ்ஹர்‌ அலி தோற்கடிக்கப்பட்டார்‌. பின்பு ஷீர்டியைவிட்டு ஓடி பீஜப்பூர்‌ சென்று தங்கினார்‌.பல ஆண்டுகளுக்குப்‌ பின்னர்‌ ஷீர்டிக்குத்‌ திரும்பிவந்து சாயிபாபாவின்‌ முன்னர்‌ வீழ்ந்து வணங்கினார்‌. அவர்‌ குரு என்றும்‌, சாயிபாபா சீடர்‌ என்றும்‌ காணப்பட்ட தோற்றம்‌ தெளிவாக்கப்பட்டது. அவர்‌ தன்‌ குற்றத்திற்காக வருத்தப்பட்டிருக்கையில்‌, சாயிபாபா அவரை மரியாதையுடன்‌ நடத்தினார்‌.

இவ்விஷயத்தில்‌ உண்மையான ஒழுக்கத்தால்‌ சாயிபாபா எவ்வாறு அஹங்காரத்தைக்‌ களைந்து சீடனது கடமைகளை ஒழுங்காகச்செய்து, உயர்ந்த பதவியை (தன்னையுணர்தல்‌) அடைவது என்பதைக்‌ காட்டியுள்ளார்‌. இக்கதை மஹல்ஸாபதி (சாயிபாபாவின்‌ ஒரு பெருந்தகை அடியவர்‌) என்னும்‌ சீடரால்‌ கூறப்பட்டுள்ளபடி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்த அத்தியாயத்தில்‌ ராமநவமித்‌ திருவிழா, மசூதியின்‌ முந்தைய நிலை, அதன்‌ பழுதுபார்ப்பு ஆகியவற்றைக்‌ காண்போம்‌.

ஸ்ரீ சாய் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம்.


Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment on gist

Most Popular

Tamil Deepam

started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World.

About Us

TamilDeepam.com was started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World. We identified this online opportunity used to give the awareness in all aspects to the tamil speaking people.

Copyright © 2021 TamilDeepam.com, powered by Wordpress.

To Top