ஆன்மிகம்

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் அத்தியாயம் – 6 (Sri Sai Satcharitam Chapter – 6)

அத்தியாயம் – 6

குருவின்‌ கை தீண்டலினால்‌ ஏற்படும்‌ பயன்‌ – ஸ்ரீ ராமநவமித்‌ திருவிழா – அதன்‌ ஆரம்பம்‌, மாறுதல்கள்‌ முதலியன – மசூதி பழுதுபார்த்தல்‌.

ராாமநவமித்‌ திருவிழாவையும்‌, மசூதி பழுதுபார்த்தலையும்‌ பற்றி விவரிப்பதற்கு முன்னால்‌ சத்குருவைப்‌ பற்றி முன்னோடிக்‌ குறிப்புகள்‌ சிலவற்றை ஆசிரியர்‌ கீழ்கண்டவாறு கூறுகிறார்‌.

குருவின்கை தீண்டலினால்ஏற்படும்விளைவு (பயன்‌)

எங்கே உண்மை அல்லது ‘சத்குரு’ வழிகாட்டியாக இருக்கிறாரோ, அங்கே இவ்வுலகப்‌ பெருங்கடலுக்கு அப்பால்‌ நம்மை பத்திரமாகவும்‌, எளிதாகவும்‌ அவர்‌ நிச்சயம்‌ அழைத்துச்‌ செல்வார்‌. சத்குரு என்னும்‌ சொல்லானது நமது மனத்திற்கு சாயிபாபாவைக்‌ கொணர்கிறது. எனக்கு முன்னால்‌ அவர்‌ நின்றுகொண்டிருப்பது போன்றும்‌, உதி என்னும்‌ திருநீற்றை எனது நெற்றியில்‌ இடுவதைப்‌ போன்றும்‌, அவரது ஆசிகள்‌ நல்கும்‌ கரத்தை என்‌ தலைமீது வைப்பதைப்‌ போன்றும்‌ தோன்றுகிறது. எனது இதயம்‌ மகிழ்ச்சியால்‌ நிரம்புகிறது. அன்பு எனது கண்களில்‌ இருந்து பொங்கி வழிகின்றது.

குருவின்‌ கரம்‌ தீண்டலின்‌ சக்தியானது வியக்கத்தக்கதாகும்‌. உலகை அழிக்கும்‌ நெருப்பால்‌ அழிக்கப்படாத (எண்ணங்களும்‌, ஆசைகளும்‌ உடைய) இந்த நுட்பமான உடம்பு, குரு சாதாரணமாக கரம்‌ தீண்டுவதாலேயே அழிக்கப்படுகிறது. முந்தைய பல பிறவிகளில்‌ உண்டான பல பாவங்களும்‌ சுத்தமாக அடித்துச்‌ செல்லப்படுகின்றன. மதங்கள்‌, கடவுளைப்‌ பற்றிய பேச்சுக்களைக்‌ கேட்டவுடனேயே சஞ்சலப்படுபவர்களின்‌ பேச்சுக்கூட அமைதியடைகிறது. சாயிபாபாவின்‌ சுந்தரரூபத்தைப்‌ பார்த்தாலே மகிழ்ச்சியால்‌ நமது தொண்டை அடைக்கிறது. கண்ணீர்‌ வெள்ளம்‌ பெருக்கெடுக்கிறது. உணர்ச்சிகள்‌ உள்ளத்தை வெல்கின்றன. நானே பிரம்மம்‌ என்னும்‌ உணர்வை அது எழுப்பிவிடுகிறது. தன்னையறிதலின்‌ ஆனந்தத்தை ஸ்தாபிக்கிறது. நான்‌, நீ என்னும்‌ வேறுபாட்டைக்‌ கரைத்து அவ்வப்போதே நம்மை உச்சத்துடன்‌ (ஒரே உண்மையுடன்‌) ஒன்றாக்குகிறது.

புனித நூல்களை யான்‌ பயிலத்‌ தொடங்குந்தோறும்‌ ஒவ்வொர்‌ அடியிலும்‌ எனது சத்குருவால்‌ ஞாபகமூட்டப்படுகிறேன்‌. சாயிபாபாவே ராமனும்‌, கிருஷ்ணனுமாகி என்னை அவரின்‌ கதைகளைக்‌ கேட்கச்‌ செய்கின்றார்‌. உதாரணமாக நான்‌ பாகவதம்‌ கேட்கத்‌ தொடங்கும்‌ முன்பாக, தலையிலிருந்து கால்வரை சாயிபாபா கிருஷ்ணராகிவிடுவார்‌. அவரே பாகவதத்தையோ, உத்தவ கீதையையோ (கிருஷ்ண பரமாத்மா தன்‌ சீடர்‌ உத்தவருக்கு அளித்த உபதேசங்கள்‌) மக்களின்‌ நன்மைக்காகப்‌ பாடுகிறார்‌ என்றும்‌ நினைக்கிறேன்‌.

நான்‌ உரையாடத்‌ துவங்கும்போது, உடனே சாயிபாபாவின்‌ கதைகள்‌, உரிய விளக்கங்கள்‌ தருவதற்கு ஏதுவாக என்‌ நினைவிற்கு வருகின்றன. எதையாவது நான்‌ எழுதத்‌ தொடங்கும்போது சில வார்த்தைகளையோ, சில வாக்கியங்களையோ என்னால்‌ எழுத முடியாது. ஆனால்‌ அவராகவே என்னை எழுதச்செய்யும்போது நான்‌ எழுதுகிறேன்‌, எழுதிக்கொண்டே இருக்கிறேன்‌. அதற்கோர்‌ முடிவில்லை. சீடனின்‌ அஹங்காரம்‌ தலையெடுக்கும்போது, அவர்‌ தமது கரங்களால்‌ அதைக்‌ கீழே அழுத்தி, தமது சக்தியைக்‌ கொடுத்து, அவனது குறிக்கோளை எய்தும்படிச்‌ செய்கிறார்‌. இவ்வாறாகத்‌ திருப்திபடுத்தி ஆசீர்வதிக்கிறார்‌. “சாயியின்‌ முன்னால்‌ எவன்‌ சாஷ்டாங்க சரணம்‌ செய்து, தனது இதயத்தையும்‌ உயிரையும்‌ அவரிடம்‌ சமர்ப்பிக்கிறானோ, அவன்‌ வாழ்க்கையின்‌ நான்கு முக்கிய குறிக்கோள்களாகிய அறம்‌ (தருமம்‌), பொருள்‌ (செல்வம்‌), இன்பம்‌ (ஆசை), வீடு (முக்தி) இவைகளை எளிதில்‌ அடைகிறான்‌”.

கர்மம்‌, ஞானம்‌, யோகம்‌, பக்தி என்ற நான்கு வழிகள்‌ நம்மைத்‌ தனித்தனியே கடவுளிடம்‌ இட்டுச்‌ செல்கின்றன. இவைகளில்‌ பக்திவழி முட்கள்‌, பள்ளங்கள்‌, படுகுழிகள்‌ நிறைந்ததாயும்‌ எனவே கடப்பதற்கு மிகவும்‌ கடினமாயும்‌ இருக்கிறது. ஆனால்‌ நீங்கள்‌ சாயியையே சார்ந்து, குழிகளையும்‌, முட்களையும்‌ விலக்கி நேராக நடப்பீர்களானால்‌, அது உங்களை குறிக்கோளிடத்தில்‌ (கடவுளிடத்தில்‌) அழைத்துச்செல்கிறது. இவ்வாறாக சாயிபாபா நிச்சயம்‌ கூறுகிறார்‌. அந்தர்யாமியாய்‌ இருக்கிற பிரம்மத்தைப்‌ பற்றியும்‌, இவ்வுலகத்தைப்‌ படைத்த அவரின்‌ சக்தியைப்பற்றியும்‌ (மாயை) அவ்வாறு உண்டாக்கப்பட்ட உலகத்தைப்‌ பற்றியும்‌ தத்துவம்‌ பேசி, இவை மூன்றும்‌ முடிவில்‌ ஒன்றே என்றும்‌ எடுத்துரைத்த பின்னர்‌ பக்தர்களின்‌ நலனுக்காக உத்திரவாதம்‌ அளிக்கும்‌ கீழ்கண்ட சாயிபாபாவின்‌ மொழிகளை ஆசிரியர்‌ கூறுகிறார்‌.

“உணவு, உடை இவற்றைப்‌ மொறுத்தமட்டில்‌ வறுமையோ, இல்லாமையோ எனது அடியவர்களின்‌ வீட்டில்‌ இருக்காது. தங்கள்‌ மனதை எப்போதும்‌ என்மீது ஸ்திரப்படுத்தியவர்களாய்‌ என்னையே முழு இதயத்துடன்‌ வழிபாடு செய்யும்‌ அடியவர்களின்‌ நலன்களை எப்போதும்‌ கவனிப்பதே, எனது சிறப்பியல்பு. கீதையிலும்‌ கிருஷ்ண பரமாத்மா இதையேதான்‌ கூறியிருக்கிறார்‌. எனவே உணவுக்காகவும்‌, உடைக்காகவும்‌ கடின முயற்சி எடுக்காதீர்கள்‌. உங்களுக்கு ஏதாவது வேண்டுமானால்‌, கடவுளிடம்‌ இரந்து கேளுங்கள்‌. இவ்வுலக கெளரவத்தை விட்டுவிடுங்கள்‌. கடவுளின்‌ அருளையும்‌, ஆசியையும்‌ பெற முயலுங்கள்‌. அவரின்‌ சந்நிதானத்தில்‌ கெளரவம்‌ அடையுங்கள்‌. உலக கெளரவங்களால்‌ வழி தவறி விடாதீர்கள்‌. இறைவனின்‌ ரூபம்‌ மனதில்‌ ஸ்திரமாகப்‌ பதிக்கப்படவேண்டும்‌. புலன்‌ அனைத்தும்‌, மனமும்‌ எப்போதும்‌ இறைவனது வழிபாட்டிற்கே கரித்தாக்கப்படட்டும்‌. வேறு எவ்விதப்‌ பொருட்களிலும்‌ எவ்விதக்‌ கவர்ச்சியும்‌ வேண்டாம்‌. உடல்‌, செல்வம்‌, வீடு முதலிய வேறு எதைப்பற்றியும்‌ மனது அலைந்து திரியாமல்‌ எப்போதும்‌ என்னை நினைத்துக்கொண்டிருப்பதிலேயே மனதை ஸ்திரப்படுத்துங்கள்‌. அப்போது அது அமைதியாகவும்‌, அடக்கமாகவும்‌, கவலையற்றும்‌ இருக்கும்‌. நல்ல பழக்கங்களில்‌ மனம்‌ ஈடுபட்டிருப்பதற்கு இதுவே அடையாளம்‌. மனம்‌ அலையும்‌ தன்மை உடையதாய்‌ இருந்தால்‌ அது நன்றாக ஒன்றிவிட்டது என்று கூற இயலாது.”

இம்மொழிகளைக்‌ குறிப்பிட்ட பிறகு, ஷீர்டியில்‌ நடக்கும்‌ ராமநவமித்‌ திருவிழாவின்‌ கதையை, ஆசிரியர்‌ குறிப்பிடுகிறார்‌.

ஷீர்டியில்‌ கொண்டாடப்பட்ட திருவிழாக்களில்‌ ராமநவமியே மிகப்‌ பெரியதாகையால்‌, சாயிலீலா சஞ்சிகையில்‌ (வருடம்‌ 1925, பக்கம்‌ 197) பதிப்பான மற்றொரு முழுவிபரமும்‌ இதில்‌ குறிப்பிடப்பட்டு இரண்டு நிகழ்ச்சிகளின்‌ கூட்டுவிபரமும்‌ இங்கே கொடுக்கப்படுகிறது.

தோற்றம்

கோபர்காவனின்‌ நில அளவைத்துறையில்‌ சர்வேயராக இருந்தவர்‌ கோபால்ராவ்‌ குண்ட்‌ ஆவார்‌. அவர்‌ பாபாவின்‌ பெரும்‌ அடியவர்‌. அவருக்கு மூன்று மனைவிகள்‌ இருந்தும்‌ ஒரு குழந்தையும்‌ இல்லை. சாயிபாபாவின்‌ அருளால்‌ அவருக்கு ஓர்‌ ஆண்‌ குழந்தை பிறந்தது. அந்த மகிழ்ச்சியினால்‌ 1897ல்‌ அவருக்கு ஒரு திருவிழா அல்லது உருஸ்‌ (முஸ்லிம்‌ ஞானியரின்‌ நினைவு தினம்‌) கொண்டாடும்‌ எண்ணம்‌ உதித்தது. தாத்யா பாடீல்‌, தாதா கோதே பாடீல்‌, மாதவ்ராவ்‌ தேஷ்பாண்டே போன்ற மற்ற ஷீர்டி அடியவர்களிடம்‌, கோபால்ராவ்‌ தனது எண்ணத்தை வெளியிட்டார்‌. அவர்கள்‌ எல்லோரும்‌ இந்த யோசனைக்கு உடன்பட்டு, சாயிபாபாவின்‌ அனுமதியையும்‌, ஆசியையும்‌ பெற்றனர்‌. இவ்விழாவைக்‌ கொண்டாடுவதற்கு கலெக்டரின்‌ அனுமதி பெறுவதற்கு விண்ணப்பம்‌ செய்யப்பட்டது. ஆனால்‌ கிராம குல்கர்ணி (அதிகாரி) திருவிழா நடத்துவதற்கு எதிரிடையாகத்‌ தகவல்‌ கொடுத்ததால்‌ அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால்‌ சாயிபாபா அதை ஆசீர்வதித்திருப்பதால்‌, அவர்கள்‌ மறுபடியும்‌ முயன்று, முடிவாக வெற்றிபெற்றனர்‌.

சாயிபாபாவிடம்‌ கலந்தாலோசித்த பிறகு உருஸ்‌ தினம்‌ ராமநவமியன்று இருக்கலாம்‌ என்று தீர்மானிக்கப்பட்டது. பாபா தமது நோக்கத்தில்‌ ஏதோ ஒரு முடிவு வைத்திருந்ததாகத்‌ தோன்றுகிறது. அதாவது ராமநவமி, உருஸ்‌ என்ற இரு திருவிழாக்கள்‌ அல்லது பண்டிகைகளை ஒன்றாக இணைப்பதென்பது ஹிந்து, முஸ்லிம்‌ ஆகிய இரு சமூகத்தினரையும்‌ ஒற்றுமைப்படுத்துவதற்காக ஆகும்‌. இக்குறிக்கோளை அடைந்ததைப்‌ பிற்கால நிகழ்ச்சிகள்‌ காட்டுகின்றன.

திருவிழாவுக்கு அனுமதி கிடைத்தது. ஆனால்‌ மற்ற கஷ்டங்கள்‌ முளைத்தன. ஷீர்டி ஒரு கிராமம்‌. அங்குத்‌ தண்ணீர்ப்‌ பஞ்சம்‌ இருந்தது. ஷீர்டியில்‌ இரண்டு கிணறுகள்‌ இருந்தன. உபயோகப்படுத்திய ஒரு கிணற்றில்‌ நீர்‌ வற்றிவிட்டது. மற்றொன்று உப்புத்‌ தண்ணீர்‌. இந்த உப்புத்‌ தண்ணீரானது சாயிபாபா மலர்களை வீசியதின்மூலம்‌ இனிமை பொருந்தியதாக மாற்றப்பட்டது. இக்கிணற்றுத்‌ தண்ணீர்‌ போதாமையால்‌ நெடுந்தூரத்திலிருந்து தோல்‌ சாக்குகளில்‌ கிணற்றிலிருந்து தண்ணீர்‌ கொண்டுவருவதற்குத்‌ தாத்யா பாடீல்‌ ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று. தற்காலிகக்‌ கடைகள்‌ கட்டப்பட்டு மல்யுத்தச்‌ சண்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கோபால்ராவ்‌ குண்டிற்கு அஹமத்நகரைச்‌ சேர்ந்த தாமு அண்ணா காஸார்‌ என்ற ஒரு நண்பர்‌ இருந்தார்‌. அவர்‌ இரண்டு மனைவிகளைத்‌ திருமணம்‌ செய்தும்‌, பிள்ளையில்லாக்‌ குறையில்‌ அம்மாதிரியே மகிழ்ச்சியற்றவராய்‌ இருந்தார்‌. அவரும்‌ சாயிபாபாவினால்‌ ஆசீர்வதிக்கப்பட்டு புதல்வர்களை அடைந்தார்‌. திருவிழாவின்‌ ஊர்வலத்திற்காக ஒரு சாதாரணக்‌ கொடி தயாரித்துக்‌ கொடுக்கும்படி இவரை குண்ட்‌ தூண்டினார்‌. நானா சாஹேப்‌ நிமோண்கரை மற்றொரு எம்ப்ராய்டரி வேலை செய்யப்பட்ட கொடி தயாரித்துக்‌ கொடுக்கும்படித்‌ தூண்டி, அதில்‌ வெற்றியும்‌ பெற்றார்‌. கிராமத்தில்‌ திருவிழாவில்‌ இரண்டு கொடிகளும்‌ ஊர்வலமாக எடுத்துச்‌ செல்லப்பட்டு த்வாரகாமாயி என்று சாயிபாபாவினால்‌ அழைக்கப்பட்ட மசூதியின்‌ இரண்டு மூலைகளிலும்‌ ஊன்றப்பட்டன. இது இன்றளவும்‌ நடைபெற்று வருகிறது.

சந்தனக்கூடு ஊர்வலம்

இத்திருவிழாவில்‌ மற்றொரு ஊர்வலமும்‌ துவக்கப்பட்டது. கொரலாவின்‌ முஹமதிய பக்தரான அமீர்‌ ஷக்கர்‌ தலால்‌ அவர்களால்‌ இச்சந்தன ஊர்வலத்தின்‌ எண்ணம்‌ உருவானது. பெரும்‌ முஹமதிய ஞானியரைக்‌ கெளரவிக்கும்‌ முகமாக இவ்வூர்வலம்‌ நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில்‌ சந்தனக்‌ குழம்பும்‌, சந்தனப்‌ பொடியும்‌ ‘தாலி’ என்னும்‌ தட்டுக்களில்‌ இடப்பட்டு, பேண்டு வாத்தியம்‌ மற்றும்‌ இசை முழங்கிவர நறுமணப்‌ பொருட்கள்‌ முன்னால்‌ புகைந்துகொண்டு செல்ல கிராமத்தின்‌ வழியாக எடுத்துச்‌ செல்லப்பட்டது. மசூதிக்குத்‌ திரும்பிய பின்னர்‌ தட்டுக்களில்‌ உள்ளவை நிம்பார்‌ என்னும்‌ தொழுகைமாடத்தில்‌ தெளிக்கப்பட்டு மசூதியின்‌ சுவரில்‌ கைகளால்‌ பூசப்பெற்றது. முதல்‌ மூன்று ஆண்டுகளில்‌ அமீர்‌ ஷக்கர்‌ அவர்களால்‌ இவ்வேலை மேற்பார்வையிடப்பட்டது. பின்னர்‌ அவரது மனைவியால்‌ பார்க்கப்பட்டது. எனவே ஒரே நாளில்‌ முஹமதியரால்‌ சந்தனக்கூடும்‌, ஹிந்துக்களால்‌ கொடிகளும்‌ அருகருகில்‌ சென்றன. இப்போதும்‌ எவ்வித இடையூறுமின்றி அங்ஙனமே நடந்துகொண்டிருக்கிறது.

ஏற்பாடு

சாயிபாபாவின்‌ அடியவர்களுக்கு இந்த நாள்‌ புனிதமானதும்‌ மிகவும்‌ பிரியமானதும்‌ ஆகும்‌. பெரும்பாலான அடியவர்கள்‌ கூடி விழாவை நிர்வகிப்பதில்‌ பங்கு வகித்தனர்‌. எல்லா வெளி ஏற்பாடுகளையும்‌ தாத்யா கோதே பாடீல்‌ பார்த்துக்கொண்டார்‌. உள்நிர்வாகம்‌ முழுவதும்‌ சாயிபாபாவின்‌ பக்தையான ராதாகிருஷ்ணமாயிடமே ஒப்புவிக்கப்பட்டது. அவ்விழாவின்போது அவளது இருப்பிடம்‌ விருந்தாளிகளால்‌ நிறைந்து இருந்தது. அவர்களது தேவைகளையும்‌, விழாவிற்குத்‌ தேவையான பொருட்களின்‌ ஏற்பாட்டையும்‌ அவள்‌ கவனித்தாக வேண்டும்‌. மசூதி முழுவதும்‌ அதன்‌ சுவர்‌, தரை முதலியவைகளைக்‌ கழுவி சுத்தம்‌ செய்து, சாயிபாபாவின்‌ அணையா விளக்கான துனியினால்‌ கரிபிடித்து கறுத்து போயிருக்கும்‌ மசூதிச்‌ சுவர்களை எல்லாம்‌ வெள்ளையடிப்பதும்‌ அவள்‌ விருப்பமுடன்‌ செய்த மற்றொரு வேலை ஆகும்‌. இவ்வேலையை ஒருநாள்‌ விட்டு ஒருநாள்‌ சாயிபாபா சாவடிக்குத்‌ தூங்கப்போயிருக்கும்‌ முந்தைய இரவில்‌ செய்வாள்‌. துனி (அணையா நெருப்பு) உட்பட எல்லாப்‌ பொருட்களையும்‌ எடுத்துக்‌ கசடறக்‌ கழுவி மசூதிச்‌ சுவரை வெள்ளையடித்த பின்னர்‌ முன்போல்‌ திருப்பி வைத்துவிட வேண்டும்‌. இத்திருவிழாவில்‌ சாயிபாபாவுக்கு மிகவும்‌ பிடித்த அம்சமான ஏழைகளுக்கு அன்னதானம்‌ வழங்குதலும்‌ ஒரு பெரும்‌ நிகழ்ச்சியாகும்‌. ராதாகிருஷ்ணமாயின்‌ இருப்பிடத்தில்‌ பெருமளவில்‌ சமையலும்‌, பல்வேறு வகையான உணவுப்‌ பொருட்களும்‌, இனிப்புப்‌ பதார்த்தங்களும்‌ தயாரிக்கப்பட்டன. பல்வேறு செல்வந்தர்களான பக்தர்கள்‌ இந்நிகழ்ச்சிகளில்‌ பெரும்‌ பங்கு வகித்தனர்‌.

உருஸ்‌’ஸை ராமநவமித்திருவிழாவாக மாற்றுதல்

இவ்வாறாக விஷயங்கள்‌ எல்லாம்‌ நடந்துகொண்டு இருந்தன. 1912ஆம்‌ ஆண்டுவரை இவ்விழா படிப்படியாக முக்கியத்துவம்‌ அடைந்துவந்து பிறகு ஒரு மாறுதல்‌ நிகழ்ந்தது. அந்த ஆண்டு கிருஷ்ணராவ்‌ ஜாகேஷ்வர்‌ பீஷ்மா (சாயி சகுணோபாசனா என்ற சிறு புத்தகத்தின்‌ ஆசிரியர்‌), அமராவதியைச்‌ சேர்ந்த தாதா சாஹேப்‌ கபர்டேயுடன்‌ திருவிழாவிற்கு வந்து முந்தைய தினம்‌ தீக்ஷித்‌ வாதாவில்‌ தங்கியிருந்தார்‌. அவர்‌ தாழ்வாரத்தில்‌ படுத்துக்கொண்டிருந்தபோது லக்ஷ்மண்ராவ்‌ என்ற காகா மஹாஜனி, மசூதிக்குப்‌ பூஜை சாமான்களுடன்‌ போய்க்கொண்டு இருந்தார்‌. அப்போது பீஷ்மாவுக்கு ஒரு புது எண்ணம்‌ தோன்றியது. அவர்‌ காகாவை நோக்கிப்‌ பின்வருமாறு கூறினார்‌.

“ஷீர்டியில்‌ ‘உருஸ்‌’ அல்லது ‘சந்தனத்‌ திருவிழா’, ராமநவமியன்று கொண்டாடப்படும்‌ உண்மைக்கு ஏதோ ஒரு தெய்வ ஏற்பாடு இருக்கிறது. ஹிந்துக்களுக்கு ராமநவமி தினம்‌ மிகவும்‌ பிரியமானது. பின்னர்‌ ஏன்‌ இந்த நாளில்‌ ராமநவமிக்‌ கொண்டாட்டத்தை ஆரம்பிக்கக்கூடாது?” காகா மஹாஜனி இக்கருத்தை விரும்பினார்‌. பாபாவின்‌ அனுமதியை இவ்விஷயத்தில்‌ பெறுவது என முடிவு செய்யப்பட்டது. அத்திருவிழாவில்‌ கீர்த்தனை செய்யும்‌ (கடவுளின்‌ புகழைப்‌ பாடும்‌) ஹரிதாஸை (பாடகர்‌) எங்ஙனம்‌ அடைவது என்பது முக்கியமான விஷயமாகும்‌. ராமர்‌ பிறந்ததைப்பற்றி தன்னுடைய பாடல்களான “ராம அக்யன்‌: தயாராய்‌ இருப்பதாகவும்‌, தானே இக்கீர்த்தனைகளைப்‌ பாடுவதாகவும்‌ கூறி, பீஷ்மா இப்பிரச்சினைக்குத்‌ தீர்வு கண்டார்‌. காகா மஹாஜனி, அப்போது ஹார்மோனியம்‌ வாசிக்க வேண்டும்‌. ராதாகிருஷ்ணமாயியால்‌ தயாரிக்கப்பட்ட சுண்ட்வடா (சர்க்கரை கலந்த இஞ்சிப்‌ பொடி) பிரசாதமாகப்‌ பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பின்பு அவர்கள்‌ பாபாவின்‌ அனுமதியைப்‌ பெறுவதற்குச்‌ சென்றனர்‌. அங்கு நடந்துகொண்டிருந்த எல்லாவற்றையும்‌ அறிந்திருந்த பாபா, “வாதாவில்‌ என்ன நடந்துகொண்டிருந்தது” என்று மஹாஜனியிடம்‌ வினவினார்‌. குழப்பமடைந்த மஹாஜனி கேள்வியின்‌ அர்த்தத்தை அறியமுடியாமல்‌ அமைதியாக இருந்தார்‌. பின்னர்‌ பாபா, பீஷ்மாவை அவர்‌ என்ன சொல்கிறார்‌ என்று கேட்டார்‌.

ராமநவமித்‌ திருவிழா கொண்டாடுவதன்‌ கருத்தை அவர்‌ தெரிவித்துப்‌ பாபாவின்‌ அனுமதியைக்‌ கோரினார்‌. பாபாவும்‌ உடனே அனுமதி கொடுத்தார்‌. எல்லோரும்‌ மகிழ்ச்சியுற்று ஜெயந்தி விழாவிற்கு ஏற்பாடுகள்‌ செய்யத்‌ தொடங்கினர்‌. மறுநாள்‌, மசூதி துணி ஜோடனையால்‌ அலங்கரிக்கப்பட்டது. ராதாகிருஷ்ணமாயியால்‌ ஒரு தொட்டில்‌ கொடுக்கப்பட்டது. பாபாவின்‌ ஆசனத்தின்‌ முன்னர்‌ அது வைக்கப்பட்டு நிகழ்ச்சிகள்‌ ஆரம்பமாயின. பீஷ்மா கீர்த்தனைக்காக முன்னால்‌ எழுந்து நின்றார்‌. மஹாஜனி ஹார்மோனியம்‌ வாசித்தார்‌. மஹாஜனியைக்‌ கூப்பிடும்படி சாயிபாபா ஒரு ஆளை அனுப்பினார்‌.

பாபா நிகழ்ச்சிகளைத்‌ தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதிப்பாரா என ஐயம்கொண்டு அவர்‌ (மஹாஜனி) போகத்‌ தயங்கிக்கொண்டிருந்தார்‌. ஆனால்‌ அவர்‌ போனபின்பு பாபா அவரை என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றும்‌, தொட்டில்‌ ஏன்‌ அங்கு வைக்கப்பட்டிருக்கிறது என்றும்‌ கேட்டார்‌. அவர்‌ (மஹாஜனி) ராமநவமித்‌ திருவிழா துவங்கப்பட்டிருக்கிறது என்றும்‌, தொட்டில்‌ அதற்காக வைக்கப்பட்டிருக்கிறது என்றும்‌ கூறினார்‌. அப்போது பாபா நிம்பாரிலிருந்து ஒரு மாலையை எடுத்து அதை அவர்‌ கழுத்திலிட்டு, பீஷ்மாவுக்கு மற்றொரு மாலையை அனுப்பினார்‌. கீர்த்தனை துவங்கியது. அது முடிவடைந்ததும்‌ ‘ஸ்ரீ ராமருக்கு ஜெயம்‌’ என்ற கோஷம்‌ வானைப்‌ பிளந்தது. குலால்‌ என்ற சிகப்புப்‌ பொடி வாத்திய கோஷத்திடையே சுற்றிலும்‌ தூவப்பட்டது.

எல்லோரும்‌ பெருமகிழ்ச்சியுற்றிருக்கையில்‌ ஒரு கர்ஜனை கேட்டது. கண்டபடி தூவப்பட்ட சிகப்புப்‌ பொடியானது பாபாவின்‌ கண்களுக்குள்‌ சென்றுவிட்டது. பாபா கோபாவேசம்‌ அடைந்து, பெருங்குரலில்‌ திட்டவும்‌, கடிந்துகொள்ளவும்‌ ஆரம்பித்தார்‌. இக்காட்சியால்‌ மக்கள்‌ பீதியடைந்து ஓட ஆரம்பித்தார்கள்‌. பாபாவை நன்கு அறிந்த அவருடைய நெருங்கிய பக்தர்கள்‌ பாபாவின்‌ கடிந்துரைகளையும்‌, திட்டல்களையும்‌ வேஷமிடப்பட்ட ஆசீர்வாதங்கள்‌ என்று எடுத்துக்கொண்டனர்‌.

ராமர்‌ அவதரித்ததும்‌, இராவணனையும்‌ – அஹங்காரம்‌, கெட்ட எண்ணங்கள்‌ முதலிய அவனுடைய அரக்கர்களையும்‌ கொல்வதற்காக, பாபா கடுமையான கோபாவேசம்‌ அடைந்ததும்‌ முறையே என அவர்கள்‌ நினைத்தனர்‌. மேலும்‌ ஷீர்டியில்‌ ஏதாவது ஒரு புதிய வேலை ஆரம்பிக்கப்படுமானால்‌, பாபா கடுமையாக கோபம்கொள்வது வழக்கம்‌. எனவே அவர்கள்‌ அமைதியாய்‌ இருந்தார்கள்‌. பாபா, தமது தொட்டிலை உடைத்து விடுவார்‌ என்று ராதாகிருஷ்ணமாயி பயந்துபோய்‌ மஹாஜனியிடம்‌ தொட்டிலை எடுத்துவந்துவிடும்படி கூறினாள்‌. அவர்‌ சென்று தொட்டிலைத்‌ தளர்த்தி கழற்றப்போன சமயம்‌, பாபா அவரிடம்‌ சென்று தொட்டிலை அகற்றவேண்டாம்‌ என்று கூறிவிட்டார்‌. பின்னர்‌ சற்று நேரத்தில்‌ பாபா சாந்தமடைந்தார்‌. பின்பு மஹாபூஜை, ஆரத்தி உள்ளிட்ட அந்நாளைய நிகழ்ச்சிகள்‌ எல்லாம்‌ நிறைவேறின. பிறகு மஹாஜனி, பாபாவிடம்‌ தொட்டிலை அப்புறப்படுத்த அனுமதி கேட்டார்‌. இன்னும்‌ விழா முடியவில்லை எனக்கூறி பாபா மறுத்துவிட்டார்‌. அடுத்த நாள்‌ கீர்த்தனையும்‌, கோபால்காலா விழாவும்‌ நடைபெற்றன. (கீர்த்தனைக்குப்‌ பிறகு தயிரும்‌, பொரி அரிசியும்‌ கலந்த ஓர்‌ மண்பானை உடைப்பதற்காகத்‌ தொங்கவிடப்பட்டிருக்கும்‌, கிருஷ்ண பரமாத்மா தன்‌ நண்பர்களான கோபாலர்களுக்குச்‌ செய்ததையொப்ப, அதனுள்‌ இருப்பவை எல்லோருக்கும்‌ பகிர்ந்து அளிக்கப்படும்‌). அதன்‌ பின்னரே பாபா, தொட்டிலை அப்புறப்படுத்த அனுமதித்தார்‌.

இவ்வாறாக ராமநவமித்‌ திருவிழா நடைபெற்றுக்‌ கொண்டிருக்கையில்‌, பகலில்‌ இரண்டுகொடி ஊர்வலமும்‌, இரவில்‌ சந்தனக்கூடு ஊர்வலமும்‌ வழக்கமான கோலாகலத்துடனும்‌, அனைவரின்‌ ஆராவாரத்துடனும்‌ நல்லமுறையில்‌ நடைபெற்றன. இத்தருணத்திலிருந்து பாபாவின்‌ உருஸ்‌ விழாவானது, ராமநவமித்‌ திருவிழாவாக மாற்றப்பட்டது.

அடுத்த ஆண்டிலிருந்து (1913) ராமநவமியின்‌ நிகழ்ச்சிகள்‌ அதிகரிக்க ஆரம்பித்தன. ராதாகிருஷ்ணமாயி சித்திரை முதல்‌ தேதியிலிருந்து நாம சப்தாஹம்‌ செய்ய (இறைவனது புகழைத்‌ தொடர்ந்து ஏழுநாட்களுக்குப்‌ பாடிக்கொண்டிருப்பது) ஆரம்பித்தாள்‌. எல்லோரும்‌ முறைவைத்துப்‌ பங்கெடுத்துக்கொண்டனர்‌. அவளும்‌ சில நாட்கள்‌ அதிகாலையில்‌ கலந்துகொண்டாள்‌. நாட்டின்‌ எல்லாப்‌ பகுதிகளிலும்‌ ராமநவமி கொண்டாடப்படுவதால்‌‌ ஹரிதாஸை (பாடகர்‌) பெறும்‌ கஷ்டமானது மீண்டும்‌ உணரப்பட்டது. ஆனால்‌ விழாவிற்கு ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குமுன்‌ நவீன துகாராம்‌ என்றறியப்பட்ட பாலபுவாமாலியைத்‌ தற்செயலாக மஹாஜனி சந்தித்தார்‌. அவரை அவ்வாண்டு கீர்த்தனை புரியச்செய்தார்‌. அடுத்த ஆண்டு (1914) சாதாரா ஜில்லா, பிர்ஹாட்ஸித்த கவடே நகரைச்‌ சேர்ந்த பாலபுவா சாதார்கர்‌ என்பவர்‌ தமது நகரில்‌ பிளேக்‌ பரவியிருந்த காரணத்தால்‌ அங்கு ஹரிதாஸாக (பாடகர்‌) இயங்க முடியவில்லை. எனவே, ஷீர்டிக்கு வந்து, காகா சாஹேப்‌ மூலம்‌ பெற்ற அனுமதியுடன்‌ கீர்த்தனை செய்தார்‌. அவரது முயற்சிக்குப்‌ போதுமான அளவு சன்மானம்‌ கொடுக்கப்பட்டது. முடிவாக ஒவ்வோர்‌ ஆண்டும்‌ புதிய “ஹரிதாஸ்‌” ஒருவர்‌ கிடைக்கப்பெறும்‌ சிரமத்தை 1914லிருந்து தாஸ்கணு மஹராஜை இப்பணியில்‌ சாயிபாபா நிரந்தரமாக நியமித்ததன்‌ மூலம்‌ தீர்த்தார்‌. அந்நாளிலிருந்து தற்போது வரைக்கும்‌ அவ்வேலையைத்‌ தாஸ்கணு வெவற்றிகரமாயும்‌, சிறப்பானமுறையிலும்‌ நிறைவேற்றி வருகிறார்‌.

1912ஆம்‌ ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும்‌ திருவிழா படிப்படியாக வளரத்‌ தொடங்கியது. சித்திரை 8ஆம்‌ தேதியிலிருந்து 12ஆம்‌ தேதிவரை ஷீர்டி, தேன்‌ கூட்டைப்‌ போல்‌ மக்கள்‌ திரளாகக்‌ காட்சியளித்தது. கடைகள்‌ அதிகரிக்கத்‌ தொடங்கின. மல்யுத்தப்‌ போட்டிகளில்‌ புகழ்பெற்ற மல்யுத்த வீரர்கள்‌ பங்கு எடுத்துக்கொண்டனர்‌. முன்னைவிடப்‌ பெரிய அளவில்‌ ஏழைகளுக்கு உணவு அளிக்கப்பட்டது.

ராதாகிருஷ்ணமாயின்‌ பேருழைப்பு, ஷீர்டியை ஒரு சமஸ்தானமாக்கியது. அதற்குத்‌ தேவையான பொருட்கள்‌ சேர்க்கப்பட்டன. ஓர்‌ அழகான குதிரை, பல்லக்கு, ரதம்‌, வெள்ளிப்‌ பொருட்கள்‌, பாத்திரங்கள்‌, பானைகள்‌, வாளிகள்‌, படங்கள்‌, முகம்‌ பார்க்கும்‌ கண்ணாடிகள்‌ முதலியவை அன்பளிப்பாக சமர்ப்பிக்கப்பட்டன. இங்ஙனம்‌ தமக்காக உள்ள பொருட்கள்‌ எல்லாம்‌ ஏராளமாக அதிகரித்த போதிலும்‌ சாயிபாபா அவைகளை எல்லரம்‌ மதிக்காது, தமது எளிமையை முன்போலவே பாதுகாத்து வந்தார்‌. இரண்டு ஊர்வலங்களிலும்‌ ஹிந்துக்களும்‌, முஹமதியர்களும்‌ ஒன்றாக வேலை செய்துவந்தும்‌ அவர்களிடையே இதுவரை எவ்விதச்‌ சச்சரவோ, இடையூறோ இருந்ததேயில்லை. ஆரம்பத்தில்‌ ஐயாயிரம்‌ முதல்‌ ஏழாயிரம்‌ மக்கள்‌ வரை கூடுவது வழக்கமாக இருந்தது. ஆனால்‌ அவ்வெண்ணிக்கை சில ஆண்டுகளில்‌ எழுபத்தைந்தாயிரமாக அதிகரித்தது. எனினும்‌ குறிப்பிட்டுச்‌ சொல்லத்தக்க விதத்தில்‌ எவ்விதத்‌ தொத்து வியாதியோ, கலகமோ கடந்த பல ஆண்டுகளாக ஏற்பட்டதேயில்லை.

மசூதி பழுதுபார்த்தல்

கோபால்‌ ராவ்‌ குண்டிற்கு மற்றொரு முக்கிய எண்ணமும்‌ உதித்தது. உருஸ்‌ அல்லது சந்தனக்கூடு விழாவை அவர்‌ தொடங்கியதைப்‌ போன்றே, மசூதியைத்‌ தாம்‌ ஒழுங்குபடுத்த வேண்டும்‌ என எண்ணினார்‌. எனவே பழுதுபார்க்கக்‌ கற்களைச்‌ சேகரித்து அதன்‌ பக்கங்களைச்‌ சமப்படுத்தவும்‌ செய்தார்‌. ஆனால்‌ இப்பணி அவருக்கு அளிக்கப்பட்டதல்ல. இது நானா சாஹேப்‌ சாந்தோர்கருக்கும்‌, தாழ்வாரத்தின்‌ வேலை காகா சாஹேப்‌ தீக்ஷித்திற்கும்‌ ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால்‌ முதலில்‌ பாபா, இவ்வேலைகளைச்‌ செய்ய அவர்களுக்கு அனுமதியளிக்க மனமில்லாதவராய்‌ இருந்தார்‌. ஆனால்‌ மஹல்ஸாபதி என்ற உள்ளூர்‌ அடியவரின்‌ குறுக்கீட்டினால்‌ அவர்களுக்கு அனுமதி கிடைத்தது.

மசூதியில்‌ ஒரே இரவில்‌ தாழ்வாரப்பணி முடிவடைந்ததும்‌, பாபா தமது வழக்கமான ஆசனமான சாக்குத்‌ துண்டை விட்டொழித்து தாம்‌ அமர்வதற்கென ஒரு சிறு ஆசனம்‌ அமைத்துக்கொண்டார்‌. 1911ல்‌ சபா மண்டபம்‌ பெரும்‌ உழைப்புடனும்‌, கடின முயற்சியுடனும்‌ ஒழுங்குபடுத்தப்பட்டது. மசூதிக்கு முன்னால்‌ இருந்த திறந்தவெளியானது சிறியதாகவும்‌, அசெளகரியமுள்ளதாகவும்‌ இருந்தது. காகா சாஹேப்‌ தீக்ஷித்‌ அதை விசாலப்படுத்தி அதற்கு மேற்கூரைபோட விரும்பினார்‌. பெருஞ்செலவில்‌ இரும்புத்‌ தூண்கள்‌, கம்பங்கள்‌, துணிகள்‌ முதலியவற்றை வரவழைத்து வேலையை ஆரம்பித்தார்‌. இரவில்‌ எல்லா அடியவர்களும்‌ கடினமாக உழைத்து, கம்பங்களை ஊன்றினார்கள்‌. ஆனால்‌ மறுநாள்‌ காலை சாயிபாபா சாவடியிலிருந்து திரும்பிவந்தபோது எல்லாவற்றையும்‌ வேருடன்‌ பிடுங்கி வெளியே எறிந்தார்‌. ஒருமுறை இவ்வாறு நிகழ்ந்தது. அவர்‌ மிகவும்‌ உணர்ச்சி வசப்பட்டு ஒரு கம்பத்தை ஒரு கையில்‌ பிடித்துக்கொண்டு அதை அசைத்து வெளியே எடுக்க ஆரம்பித்து, மற்றொரு கையால்‌ தாத்யா பாடீலின்‌ கழுத்தைப்‌ பற்றினார்‌. தாத்யாவின்‌ முண்டாசை வலிந்து பற்றியிழுத்து ஒரு நெருப்புக்‌ குச்சியைக்‌ கொளுத்தி அதைப்‌ பற்றவைத்துக்‌ குழியில்‌ தூக்கி எறிந்தார்‌. அச்சமயத்தில்‌ பாபாவின்‌ கண்கள்‌ எரியும்‌ நெருப்புத்‌ துண்டம்‌ போலிருந்தன. ஒருவருக்கும்‌ அவரைப்‌ பார்க்கத்‌ தைரியமில்லை. எல்லோரும்‌ பயங்கரமாக அஞ்சினார்கள்‌.

பாபா, தமது பையிலிருந்து ஒரு ரூபாயை எடுத்து, அதை ஒரு புனித நிகழ்ச்சியின்‌ நிவேதனம்போல்‌ அங்கே விட்டெறிந்தார்‌. தாத்யாவும்‌ மிகவும்‌ பயந்துபோனார்‌. யாருக்கும்‌ தாத்யாவுக்கு என்ன நிகழப்போகிறது என்பது தெரியவில்லை. ஒருவருக்கும்‌ தலையிடத்‌ தைரியம்‌ இல்லை. பாபாவின்‌ குஷ்டரோகி அடியவனான பாகோஜி ஷிண்டே என்பவன்‌ கொஞ்சம்‌ முன்னேறத்‌ துணிந்தான்‌. ஆனால்‌ அவன்‌ பாபாவால்‌ தள்ளப்பட்டான்‌. மாதவ்ராவுக்கும்‌ அதைப்போன்ற மரியாதையே கிடைத்தது. அவர்‌ கற்களால்‌ அடிக்கப்பட்டார்‌. ஆனால்‌ சிறிது நேரத்திற்குப்‌ பின்‌ பாபாவின்‌ கோபம்‌ தணிந்து குளிர்ந்தது. கடைக்காரனிடம்‌ ஆள்‌ அனுப்பி பூவேலை செய்த ஒரு முண்டாசு வாங்கி வரச்செய்து, தாத்யாவுக்கு ஒரு சிறப்பான கெளரவம்‌ செய்வதைப்போல்‌ தாமே அவர்‌ தலையில்‌ கட்டிவிட்டார்‌. பாபாவின்‌ இவ்வினோத குணத்தைக்‌ கண்டு எல்லோரும்‌ ஆச்சர்யத்தால்‌ தாக்கப்பட்டனர்‌. அவ்வளவு வேகமாகப்‌ பாபாவைக்‌ கோபமடையச்‌ செய்தது எது? தாத்யா பாடீலுக்கு உதை கொடுக்கும்படி செய்தது எது? அவரது கோபம்‌ அடுத்த வினாடியே தணிந்தது எப்படி? என்பதை அவர்கள்‌ எல்லோரும்‌ அறிந்துகொள்ள இயலவில்லை. சில வேளைகளில்‌ பாபா மிகவும்‌ அமைதியாகவும்‌, மெளனமாகவும்‌ இருந்தார்‌. இனிமையான விஷயங்களை அன்புடன்‌ பேசினார்‌. பின்னர்‌ உடனே சின்னப்‌ பொய்க்காரணம்‌ இருந்தோ, இல்லாமலோ கோபாவேசம்‌ அடைந்தார்‌. அத்தகைய பல சம்பவங்களை இங்கே கூறலாம்‌. ஆனால்‌ எனக்கு எதைச்சொல்வது, எதைவிடுவது என்று தெரியவில்லை. எனவே அவைகளை எனக்கு தோன்றியபோது கூறுகிறேன்‌.

அடுத்த அத்தியாயத்தில்‌, பாபா ஒரு முஹமதியரா, ஹிந்துவா என்னும்‌ வினா எடுத்துக்கொள்ளப்படும்‌. அவரின்‌ யோகப்பயிற்சி, சக்தி மற்றும்‌ பல விஷயங்களும்‌ விவரிக்கப்படும்‌.

ஸ்ரீ சாய் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம்.


Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment on gist

Most Popular

Tamil Deepam

started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World.

About Us

TamilDeepam.com was started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World. We identified this online opportunity used to give the awareness in all aspects to the tamil speaking people.

Copyright © 2021 TamilDeepam.com, powered by Wordpress.

To Top