வீரமங்கை ! கவிஞர் இரா .இரவி !
வீரமங்கை என்று வாசித்ததும் நினைவிற்கு வந்தது
வேலு நாச்சியார் என்ற வீரப்பெண் அரசியின் ஆளுமை !
முதல்பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனையானார்
முத்திரைப் பதித்து வரலாற்றில் சிறப்பிடம் பெற்றார் !
செல்லமுத்து சேதுபதி முத்தாத்தாள் நாச்சியாரின்
செல்ல மகளாகப் பிறந்து வளர்ந்தார் வேலு நாச்சியார் !
வீரவாள் சுழற்றி வளரும்போதே பயின்றார்
விவேகமாக பல மொழிகளும் கற்றுச் சிறந்தார் !
சிவகங்கைச் சீமையின் அரசர் முத்து வடுகநாதரை
சீரோடும் சிறப்புடனும் திருமணம் முடித்தார் !
ஆட்சி அதிகாரம் வெறிப்பிடித்த வெள்ளையர்
ஆண்ட மன்னன் முத்து வடுகநாதரைக் கொன்றனர்
உருது மொழி பேசி ஹைதர் அலியிடம் உதவிகள் பெற்றவர்
உறுதியாக இறுதி வரை நின்று போராடி வென்றவர் !
கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்யும் பார்ஜோரையும்
கணக்கை முடித்து மண்ணிற்கு இரையாக்கியவர் !
ஆணாதிக்கம் நிறைந்திட்ட அந்தக் காலத்திலேயே
ஆண்களை விஞ்சும் வண்ணம் போராடி வென்றவர் !
சிவகங்கைச் சீமையின் சிம்ம சொப்பனமானவர்
சிறிப்பாய்ந்து சிரம் வீழ்த்தி வாகை சூடியவர் !
மாறுவேடத்தில் சென்று வீரக்குயிலி ஆயுதக்கிடங்கில்
முழுவதும் எரிந்து முதல் தற்கொலைப் படையானாள் !
பெரிய மருது சின்ன மருது என்ற மருது சகோதரர்கள்
பேருதவியாக இருந்து பெரும்படை திரட்டினார்கள் !
திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்ட வீரப்படை
திண்டாட வைத்து தோல்வி தந்தது வெள்ளையனுக்கு !
உயிர்க்குப் பயந்து காட்டிக் கொடுக்காமல்
உயிரை விட்ட வீரனுக்கு நடுகல் நட்டு வணங்கினார் !
உன்னத வீரமங்கையாகி வெள்ளையரை வென்றவர்
உலகம் உள்ளவரை வேலு நாச்சியார் புகழ் நிலைக்கும் !
நன்றி கவிஞர் இரா .இரவி