துப்பாக்கியால் சிதைக்க முடியாது
விடுதலை வீரனின் விடுதலை தாகத்தை
வெளிவரும் துப்பாக்கிக் குண்டுகளால் சிதைக்க முடியாது!
ஆயுதத்திற்கு பயந்தவன் அல்ல இலட்சியவாதி
அன்பிற்கு அடிமையானவன் அதிகாரத்தை எதிர்ப்பான்!
அடக்கி ஆள நினைத்தால் அகற்றிடுவான்
ஆணவத்தை அகற்றி மனிதம் கற்பிப்பான்!
தில்லையாடி வள்ளியம்மை காந்தியடிகளுக்காக அன்றே
தில்லாக துப்பாக்கி முன்னே நின்று கர்ஜித்தாள் !
உயிருக்குப் பயந்தால் இலட்சியம் நிறைவேறாது
உயிரைத் தந்தேனும் விடுதலை பெற்றுத் தருவான்!
கொட்டக் கொட்டக் குனிந்திடும் கோழையன்று
கொட்டும் கரம் முறிக்கும் வீரன் தான்!
பறவைக்கு உள்ள விடுதலை மனிதருக்கும் வேண்டும்
பரந்த உள்ளத்துடன் அனைவரையும் மதித்திட வேண்டும்!
உலகில் பிறந்த யாவரும் சமம் என்பதை
ஒவ்வொருவரும் உள்ளத்தில் கொள்ள் வேண்டும்!
ஆதிக்க உணர்வினை அகற்றிட வேண்டும்
அனைவரையும் சம்மாக மதித்திட வேண்டும்!
உயர்ந்தவர் தாழ்ந்தவர் மனிதரில் இல்லை
உயர்வு தாழ்வு கற்பித்தல் மடமையாகும்!
நிறத்தால் உயர்வு தாழ்வு இல்லவே இல்லை
அறத்தால் அன்பாக வாழும் வாழ்வே வாழ்வு!
குணத்தால் உயர்வு தாழ்வு என்பது இல்லை
எண்ணத்தால் சம்மாக மதித்து வாழ்வதே வாழ்வு!
நன்றி கவிஞர் இரா.இரவி




























