கவிதைகள்வாழ்வியல்

விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்த வீரர்! வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா.இரவி

ஆறுமுகத்தம்மாள் திக்குவிஜய கட்டபொம்மு இணையரின் மகன்
அகிலம் போற்றும் 47வது மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் !

குமாரசாமி என்ற ஊமைத்துரை துரைச்சிங்கம் சகோதரர்கள்
ஈசுவர வடிவு துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகள் உண்டு !

பாஞ்சாலங்குறிச்சியில் ஆணடவர் வீரபாண்டிய கட்டப்பொம்மன்
பார் போற்றும் மன்னனாக வலம் வந்தவன் கட்டப்பொம்மன் !

வரி கேட்டு வந்த ஆலன்துரையை விரட்டி அடித்தவன்
வரி கட்ட முடியாது என்று ஆங்கிலேயருக்கு சவால் விட்டவன் !

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவன் ஜாக்சன் துரைக்கு
நெஞ்சு பதறும் வண்ணம் வீர வசனம் பேசியவன் !

ஆங்கிலேயனுக்கு அடிபணிய மறுத்து எதிர்த்திட்ட வீரன்
அவன் புகழ் என்றும் நிலைத்திடக் காரணம் வீரம் !

பீரங்கி கண்டு அஞ்சாதவன் வீரபாண்டிய கட்டபொம்மன்
பீறிட்டு எழுந்த கோபத்தால் போர்கள் பல புரிந்தவன் !

எட்டப்பன் என்ற துரோகியின் துரோகத்தால்
எட்ட முடிந்தது வீரபாண்டிய கட்டபொம்மனை !

மன்னிக்க வேண்டினால் மன்னித்து விடுவதாக சொன்னார்கள்
மன்னிப்பா வெள்ளையனிடமா முடியாது என்றான் !

தூக்குக்கயிறைப் பரிசாகத் தருவோம் என்ற போதும்
துச்சமென உயிரை நினைத்து வீரமரணம் அடைந்தவன் !

வீரபாண்டிய கட்டபொம்மனை பார்த்தது இல்லை

வீரனை கண்முன் நிறுத்தியவர் நடிகர் திலகம்!

சிறுகுழந்தையும் வீரவசனம் பேசும்

சிறுமி முதல் பெரியோர் வரை மனப்பாடம் ஆனது!

அஞ்சாத சிங்கம் வீரபாண்டிய கட்டபொம்மன்
அடக்குமுறை எதிர்த்தவன் கட்டபொம்மன்!

ஆங்கிலேயர் அதிர்ந்தனர் வீரம் கண்டு
அத்துமீறியவன் கப்பம் கட்ட மறுத்தவன்!

வானம் பொழிகிறது பூமி விளைகிறது
வரி எதற்கடா கட்ட வேண்டுமென எதிர்த்தவன்!

அடிமையாக அடங்கிய மனிதர்களுக்கு அன்றே
அடிமை விலங்கை அடித்து உடைத்த வீரன்!

தூக்குக்கயிறை காட்டிய போதும் உயிரை
துச்சமென நினைத்து உரிமைக்குரல் எழுப்பியவன்!

ஆளும் வர்க்கத்தின் ஆணவத்தை அடக்கியவன்
ஆதிக்க உணர்வை அடித்து நொறுக்கியவன்!

சிம்ம சொப்பனமாக என்றும் திகழ்ந்தவன்
சித்திரவதைகளுக்கு அஞ்சாமல் நின்று எதிர்த்தவன்!

கூனிக்குறுகி கும்பிட்ட அடிமை மக்களின்
கூனை நிமிர்த்தி வீரம் கற்பித்தவன்!

வணிகம் செய்திட வந்திட்ட ஆங்கிலேயன்
வரி கேட்பதா? தர மாட்டாமென மறுத்தவன்!

எங்களை ஆள்வதற்கு நீ யாரடா ? என்று
எட்டி உதைத்து தட்டிக்கேட்ட சூரன்!

காட்டிக் கொடுத்த கயவன் எட்டப்பன் என்பது
கணினி யுகத்திலும் நினைவில் உள்ள துரோகப்பெயர் !

அன்று முதல் இன்று வரை தமிழர்களின் தோல்விக்கு
அன்றைய எட்டப்பன் வழி வந்தவர்களே காரணமாகின்றனர் !

உயிர் கொடுத்து விடுதலை வாங்கித் தந்தார்கள்
ஒருவருக்கும் விடுதலையின் அருமை புரியவில்லை!

அன்று வரி கட்டமாட்டேன் என்று போராடினாய்
இன்று வரி கட்ட முடியாமல் போராடுகிறோம் !

உடலால் உலகை விட்டு மறைந்திட்டபோதும் நமது
உள்ளங்களில் என்றும் வாழ்கிறான் கட்டப்பொம்மன் !  

நன்றி
கவிஞர் இரா.இரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *