செய்திகள்நம்மஊர்

தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைய ஒன்றிணைய வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல் | Anbumani Talks on Kamaraj Govt.

மதுரை: தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைய ஒன்றிணைய வேண்டும் என்று நாடார் மகாஜன சங்க மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை நாகமலை புதுக்கோட்டையிலுள்ள எஸ்விஎன் கல்லூரி வளாகத்தில் அகில இந்திய நாடார் மகாஜன சங்க 72வது மாநாடு நேற்று தொடங்கியது. சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை வகித்தார். 2வது நாளான இன்று நடந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசியது: ”இந்த மாநாட்டில் பங்கேற்றது வாக்கு அரசியலுக்காக அல்ல. தமிழகத்தில் பெரியார், காமராஜர் ஆகிய 2 தலைவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். காமராஜரை சமுதாயத் தலைவராக பார்க்கக்கூடாது. அவர் தேசியத் தலைவர். தமிழக கல்விப் புரட்சிக்கு பாடுபட்டவர். 28 ஆயிரம் பள்ளிகளை உருவாக்கியவர். அவர் இல்லை எனில் தமிழகம் பின்னோக்கி சென்றிருக்கும். திருச்சி பெல், ஆவடி தொழிற்சாலை, சேலம் இரும்பு தொழிற்சாலை உள்ளிட்டவற்றை அன்றைக்கே கொண்டு வந்து தொழில் புரட்சி செய்தார்.

நாடார் சமூகத்தினருக்கு கோயிலுக்குள் அனுமதி கிடையாது என்ற நிலை மாறி, தற்போது அந்த சமூகத்தினரே கோயிலை நிர்வாகிக்கும் நிலை வந்துவிட்டது. நாம் ஒன்று சேர்ந்தால் நமது ஆட்சியை அமைக்கலாம். முதல்வர், துணை முதல்வர் போன்ற பதவிகளை நாம் கையாள முடியும். காமராஜரின் ஆட்சி மீண்டும் அமைக்கவேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்துகிறோம். ராமதாஸ் காமராஜரின் ஆட்சியில்தான் மருத்துவராக ஆனார். மருத்துவ சீட்டிற்கு ராமதாசிடம் ரூ.500 லஞ்சம் கேட்கப்பட்டது. ஆனால், அன்று அவரிடம் ரூ.50 கூட, இன்றி தனக்கு மருத்துவச் சீட்டு கிடைக்காது என, இருந்த நிலையில், காமராசருக்கு இது தெரிந்து லஞ்சம் கேட்டவரை நீக்கி, பிறகு அவருக்கு மருத்துவ சீட் கிடைக்க செய்தது என, பல வரலாறு உள்ளது.

ஜாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று அவசியம். 92 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் நடத்திய கணக்கெடுப்பு தற்போது தேவை இல்லை. அடிப்படை வசதி, தொழில் போன்ற 19 குறியீடுகள் மூலம் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும். ஷாப்பிங் மால்கள் அதிகரிக்கின்றன. நமது பகுதியில் கடை வைத்து மாத இறுதியில் கடன் கொடுக்கக்கூடிய நம்ம அண்ணாச்சி தான் நமக்கு தேவை. தமிழகத்தை நாம் ஆளக்கூடிய நேரம் வந்துவிட்டது. அனைவரும் ஒன்றிணையவேண்டும்” இவ்வாறு கூறினார். மாநாட்டில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள், நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பேசினார். மாநாட்டில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *