பள்ளங்களால் முடங்கிப் போன மதுரை – தேனி முடக்குச் சாலை: வாகன ஓட்டிகள் அவதி | Madurai – Theni Highway crippled by potholes
மதுரை; மதுரை – தேனி முடக்குச் சாலையில் ரூ.53 கோடியில் நடக்கும் உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணியால் மேடு, பள்ளங்களாகவும், சேறும் சகதியுமாக காணப்படும் சாலையில் வாகன ஓட்டிகள் பயணிக்க அச்சமடைந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் உருகுலைந்து காணப்படும் இந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் எதிா்பார்க்கின்றனர்.
மதுரை-தேனி ரோடு முடக்குச் சாலை முதல் நாகமலை புதுக்கோட்டை செல்லும் சாலையில் விராட்டிப்பத்து எச்.எம்.எஸ்.காலனி வரை தேசிய நெடுஞ்சாலைத் துறை 1,190 மீட்டருக்கு ரூ.53.95 கோடியில் மேம்பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலத்தை தாங்கி பிடிக்கும் வகையில் 33 பிரமாண்ட தூண்கள் அமைக்கப்படுகின்றன. தற்போது இந்த சாலையில் முடக்குச் சாலையில் இருந்து கோச்சடை டிவிஎஸ் ரப்பர் கம்பெனி வரை மட்டும் பாலம் கட்டும்பணி நடக்கிறது. மற்ற இடங்களில் விராட்டிப்பத்து வரை தூண்கள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது.
அதனால், பாலம் கட்டுமானப்பணி நடக்கும் முடக்குச் சாலையில் இருந்து டிவிஎஸ் ரப்பர் கம்பெனி வரையுள்ள சாலையை மட்டும் தேசிய நெடுஞ்சாலைத் துறை தற்காலிகமாக மூடியுள்ளது. அதனால், கோச்சடை வழியாக வரக்கூடிய வாகனங்களை டோக் நகர் வழியாக திருப்பி விட்டுக் கொண்டிருக்கின்றனர். நோக் நகர் வழியாக வரும் வாகனங்கள், முடக்கு சாலை வழியாக காளவாசல் வந்து செல்கின்றன.
பாலம் பணியால் தேனி சாலையில் முடக்குச் சாலையில் இருபுறமும் சாலை முழுவதுமாக பழுதடைந்துள்ளது. தற்போது வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ள டோக் நகர் சாலையும் பள்ளங்களாக காணப்படுகிறது. முடக்கு சாலையில் பாலம் போடும் இடத்தில் சாலை சேறும், சகதியுமாக மேடும், பள்ளமுமாக காணப்படுகிறது. டோக்நகர் சாலையில் பள்ளங்களில் வாகனங்கள் ஏறி இறங்குவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர்.
முடக்குச் சாலையில் ஓரத்திலும், நடுவிலும் பள்ளங்கள் உள்ளதால் வாகன ஓட்டிகள் உருகலைந்த இந்த சாலையை கடக்க மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். மழை பெய்யும்போது முடக்குச் சாலை மற்றும் டோக் நகர் சாலையில் காணப்படும் பள்ளங்களில் தண்ணீர் நிரம்பி நிற்தால் எது பள்ளம், சாலை என தெரியாமல் வாகனங ஓட்டிகள் சாலையில் பயணிக்க அச்சமடைந்துள்ளனர். பலர் மழைநேரத்தில் பள்ளத்தில் வாகனங்களை விட்டு கீழே விழுந்து படுகாயம் அடைந்து செல்கின்றனர்.
தேனி மெயின்ரோட்டில் முடக்குச் சாலையில் ஒரு பிட்டு பாலம் கட்டியதோடு பாதியில் நிற்கிறது. முடக்கு சாலையில் டிவிஎஸ் ரப்பர் கம்பெனி வரையுள்ள சாலையில் மட்டுமே பாலம் பணி நடக்கிறது. மற்ற இடங்களில் தூண்கள் மட்டுமே எழுப்பி பணிகள் பாதியிலே நிற்கிறது. அதனால், பாலம் கட்டுமானப்பணி நடக்காத இடங்களில் பழுதடைந்த சாலைகளை உடனடியாக பராமரித்து விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
வாகன ஓட்டிகள் கூறிம்போது, “நாகமலை புதுக்கோட்டையில் இருந்து நகரப்பகுதியில் வருவதற்கு அச்சம்பட்டி, விராட்டிப்பத்து, டிவிஎஸ் வழியாக செல்வோம். தற்போது அந்த இடத்தில் பாலம் கட்டுவதால் வாகனங்கள் டோக் நகர் வழியாக காளவாசலுக்கு திருப்பிவிட்டுள்ளனர். அதுபோல், காளவாசலில் இருந்து வரும் வாகனங்கள் டோக் நகரை தாண்டி தேனியில் சென்று நாகமலைப்புதுக்கோட்டை செல்கின்றன. முன்பு அந்த சாலை ஒரளவு பரவாயில்லாமல் இருந்தது. அனைத்து வாகனங்களும் இந்த வழியாக சென்று வருவதால் தற்போது சாலை முழுவதும் சேதமடைந்துள்ளது.
டோக் நகர் பகுதியில் கோச்சடை சாலை மெயின் ரோடு ரோட்டில் தொடும் வரையும் முடக்கு சாலையில் இருந்து பாலம் கட்டும் வரையும் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் சென்று பள்ளங்கள் அதிகமாகியுள்ளது. இந்த ப்பள்ளங்களில் ஏற்றி இறக்கி வாகனங்களில் செல்ல முடியவில்லை. பார்த்து செல்லாவிட்டால் தடுமாறி கீழே விழ வேண்டிய உள்ளது. மழைக்காலத்தில் வாகனப்போக்குவரத்து ஸத்ம்பிக்கிறது. இந்த சாலையை கடப்பதற்கே வாகன ஓட்டிகளுக்கு பெரும் போராட்டமாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை இந்த சாலையை போர்கால அடிப்படையில் சீரமைத்து உதவ வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பழுதடைந்த சாலைப் பகுதியில் மின்வாரியத்தின் உயர் மின் அழுத்த வயர் செல்கிறது. மேலும், அதே பகுதியில் டிரான்பார்மர் ஒன்றும் உள்ளது. இதனை இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். மிக விரைவாக இந்த சாலை சீரமைக்கப்படும்’’ என்றார்.