கவிதைகள்வாழ்வியல்

மனிதம் விதைப்போம்! – கவிஞர் இரா. இரவி.

சாதிமத வெறி மனதிலிருந்து மாய்ப்போம்
சகோதர உணர்வினை மனதில் வளர்ப்போம்!

ஆணவக் கொலைகளுக்கு முடிவு கட்டுவோம்
அன்பால் அகிலம் சிறக்க வழி காண்போம்!

சாதி என்பது பாதியில் வந்தது உணர்வோம்
சாதிக்க நினைத்து சாதியை மறப்போம்!

வெட்டுக்குத்து வன்முறைக்கு முடிவு கட்டுவோம்
விவேகமாகச் சிந்தித்து செயல்படுவோம்!

உலகில் பிறந்த மனிதர் யாவரும் சமம்
ஒற்றுமையுடன் வாழ்ந்து மனிதம் விதைப்போம்!

உயர்ந்தவன் தாழ்ந்தவன் உண்மை இல்லை
உடன்பிறப்பாக மதித்து கூடி வாழ்ந்திடுவோம்!

மனிதனைப் பண்படுத்த படைக்கப்பட்ட மதங்கள்
மனிதனைப் புண்படுத்த பயன்படுத்தி வருகின்றனர்!

எந்த மதமும் வன்முறையைப் போதிக்கவில்லை
என்பதை எல்லோரும் மூளையில் ஏற்றிடுங்கள்!

ஆயுதம் ஏந்துவது அறிவுக்கு அழகன்று
அன்பால் அகிலம் சிறக்க வாழ்வது நன்று!

மாட்டுக்காக மனிதனைக் கொல்வது மடமை
மனித மூளையை சிந்திக்கப் பயன்படுத்துவது கடமை!

சாதியின் பெயரால் சண்டைகள் எதற்கு?
சாதி என்பது சதி என்பதை அறிந்திடுங்கள்!

சாதிக்கான கதையில் உண்மை இல்லை
சாதியை நம்புவது மூட நம்பிக்கை ஆகும்!

குருதியின் நிறம் அனைவருக்கும் சிவப்பு
குத்துவெட்டு விடுத்து சிந்திப்பது சிறப்பு!!

உயிரின்ங்களில் உயர்ந்த இனம் மனித இனம்
ஒரு கணம் சிந்தித்து செயலாற்றுங்கள்!

கோடிப்பணம் கொட்டிக் கொடுத்து வேண்டினாலும்
கொன்ற உயிர் என்றும் திரும்பி வராது!

மனித நேயம் மனிதருக்கு அழகு தரும்
மனிதம் காப்போம் மனிதம் விதைப்போம்!  


நன்றி..
கவிஞர் இரா .இரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *