திருக்குறள் ! கவிஞர் இரா .இரவி !
திருக்குறள்
ஓலைச்சுவடி முதல் கணினி வரை நிலைத்தது ஒப்பற்ற இலக்கியமான நமது திருக்குறள் !
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதியது
இன்னும் இன்றும் என்றும் நிலைத்து நிற்கும் !
எக்காலமும் முக்காலமும் பொருந்துவது
எல்லா நாட்டவருக்கும் பொருந்துவது !
எல்லா மதத்தவர்க்கும் பொருந்துவது
எல்லா இனத்தவருக்கும் பொருந்துவது !
வாழ்வியல் நெறி கற்பிக்கும் திருக்குறள்
வாழ்வின் பொருள் கூறும் திருக்குறள் !
மனிதனை மனிதனாக வாழவைக்கும்
மனதின் வன்மம் அழிக்கும் திருக்குறள் !
நேர்மை வாய்மை உண்மை உணர்த்தும்
நேர்மையாளர்கள் கடைப்பிடிக்கும் திருக்குறள் !
சினம் அடக்கி வாழ்வில் சிறக்க வைக்கும்
சிந்திக்க வைத்து ஒளி ஏற்றும் திருக்குறள் !
நன்றி மறக்காதிருக்க அறிவுறுத்தும் திருக்குறள்
நல்வாழ்வு வாழ்ந்திட வழி கூறும் திருக்குறள் !
பகைவனுக்கும் மன்னிப்பு வழங்கிடும் திருக்குறள்
பண்பை படிப்போருக்குப் புகட்டிடும் திருக்குறள் !
இரண்டே அடிகளில் உலகம் அளந்த திருக்குறள்
இனிவரும் தலைமுறையும் படிக்கும் திருக்குறள் !
உலகஅறிஞர்கள் உணர்ந்து போற்றும் திருக்குறள்
உலகம் முழுவதும் அறியப்பட்ட திருக்குறள் !
இரசியாவின் பாதுகாப்பு அறையில் திருக்குறள்
ரசிகர்களை உலக அளவில் பெற்றுள்ள திருக்குறள் !
ஆங்கிலேயர் எல்லீசர் பாராட்டிய திருக்குறள்
அனைவரும் ஏற்கும் அற்புதம் திருக்குறள் !
தாயிற்கும் மேலானது அறமென்றது திருக்குறள்
தன்னலம் விட பொதுநலம் மேலென்பது திருக்குறள் !
மது அருந்தாதே என்று அறிவுறுத்தும் திருக்குறள்
மதியை இழப்பாய் என எடுத்துரைக்கும் திருக்குறள் !
ஆள்வோருக்கு அறிவுரை நல்கும் திருக்குறள்
அறிவுரைப்படி நடந்தால் சிறக்க வைக்கும் திருக்குறள் !
ஈடு இணையற்ற உயர்ந்த இலக்கியம் திருக்குறள்
ஈடு கொடுத்து நிலைத்து நிற்கும் திருக்குறள் !
வருங்காலத்திலும் நிலைத்து நிற்கும் திருக்குறள்
வளமான கருத்துக்களின் கருவூலம் திருக்குறள் !
தமிழை அறியாதோரும் அறிந்துள்ள திருக்குறள்
தமிழுக்கு வான்புகழ் வழங்கிய திருக்குறள் !
பாரதியார் பாட்டில் பாராட்டிய திருக்குறள்
பாரதிதாசன் பாட்டில் புகழ்ந்த திருக்குறள் !
ஓலைச்சுவடி முதல் அலைபேசித் திரை வரை
ஓங்கி உரைக்கும் ஒலிக்கும் ஒப்பற்ற திருக்குறள் !
நன்றி கவிஞர் இரா.இரவி