புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு சிலை: அரசு துணைச் செயலாளர் ஆய்வு | muthulaksmi statue
புதுக்கோட்டை: நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டிக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சிலை அமைப்பது குறித்து அரசு துணைச் செயலாளர் இன்று (மார்ச் 2) ஆய்வு செய்தார்.
முத்துலட்சுமி ரெட்டிக்கு அவரது சொந்த ஊரான புதுக்கோட்டையில் சிலை அமைக்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இது தொடர்பாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநரும், அரசு துணை செயலாளருமான வீ.ப.ஜெயசீலன் ஆய்வு செய்தார். அப்போது, அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தின் நுழைவாயில் அருகே சிலை அமைப்பதென முடிவெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அரசின் நிதி ஒதுக்கீடு பெற்று, சிலை அமைப்பு பணி தொடங்கும் என அலுவலர்களிடம் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் புதுக்கோட்டை ஆவண காப்பகத்தில் உள்ள 1801 முதல் 1946 வரையிலான தர்பார் கால ஆவணங்கள், பழைய திவான் அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள், மாவட்ட அரசிதழ்கள், ஓலைச்சுவடிகள் போன்றவற்றையும் ஆய்வு செய்தார். இவை விரைவில் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தகவல் தொழில்நுட்பத் துறை இணை இயக்குநர் கோமகன், உதவி இயக்குநர் காமாட்சி, செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் ரெ.மதியழகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.