ஸ்ரீ சாய் சத்சரித்திரம் அத்தியாயம் – 3 (Sri Sai Satcharitam Chapter – 3)
ஸ்ரீ சாய் சத்சரித்திரம் அத்தியாயம் – 3 (Sri Sai Satcharitam Chapter – 3)
அத்தியாயம் – 3
சாயிபாபாவின் அனுமதியும் வாக்குறுதியும் – அடியார்க்கு இடப்பட்ட திருப்பணிகள் – பாபாவின் நிகழ்ச்சிகள் வழிகாட்டும் விளக்குகள் – அவரின் தாயன்பு – ரோஹிலாவின் கதை – பாபாவின் சுவையும் அமுதமுமான மொழிகள்.

முந்தைய அத்தியாயத்தில் விளக்கப்பட்டபடி சாயிபாபா தமது பூரண சம்மதத்தைத் தெரிவித்துக் கூறியதாவது, சத்சரிதம் எழுதுவதைப் பற்றி நான் உம்முடன் முழுமையாகச் சம்மதிக்கிறேன். நீர் உமது கடமையைச் செய்யும். சிறிதளவும் அஞ்சாதீர். என் மொழிகளில் நம்பிக்கை வையும். என்னுடைய லீலைகள் எழுதப்படுமானால் அறியாமை அகலும். அவைகள் கவனத்துடனும், பக்தியுடனும் கேட்கப்படுமானால் இவ்வுலக வாழ்க்கையின் உணர்வு தணிந்து, பக்தி – அன்பு ஆகியவற்றின் வலிமையான அலைகள் மேலெழும்பும். என்னுடைய லீலைகளின் ஆழத்தில் ஒருவன் முழுகுவானானால் அவன் ஞானமென்னும் விலை மதிப்பில்லாத முத்துக்களை எடுப்பான்.
இதைக்கேட்டு இந்நூல் ஆசிரியர் மிக்க மகிழ்ச்சியடைந்தார். உடனே தன்னம்பிக்கை உடையவராயும், பயமற்றவராயும் ஆனார். இப்பணி வெற்றிகரமாக நிறைவேறியே தீரவேண்டும் என்றும் எண்ணினார். பிறகு ஷாமாவிடம் (மாதவ்ராவ் தேஷ்பாண்டே) திரும்பி பாபா கூறியதாவது, “ஒருவன் என் நாமத்தை அன்புடன் உச்சரிப்பானாகில் நான் அவனுடைய ஆசைகளைப் மூர்த்தி செய்து அவனுடைய பக்தியை அதிகப்படுத்துவேன். என் வாழ்க்கையையும் செயல்களையும் ஊக்கமுடன் இசையாகப் பாடுவானாயின் அவனுக்கு முன்னும் பின்னும் எல்லாத் திக்குகளிலும் சூழ்ந்திருப்பேன். என்னிடம் உள்ளத்தையும் உயிரையும் ஒப்புவித்த அடியார்கள் இந்நிகழ்ச்சிகளைக் கேட்டதும் இயற்கையிலேயே மகிழ்வெய்துவர். நம்பிக்கையுடன் என் லீலைகளை எவனாவது இசைப்பானாயின் அவனுக்கு எல்லையற்ற பேரின்பத்தை நல்கி என்றும் நிலைத்திருக்கும் திருப்தியை அளிப்பேன்.
எவன் என்னிடம் பூரண சரணாகதி அடைகிறானோ, எவன் என்னை விசுவாசத்துடன் வணங்குகிறானோ, எவன் என்னை நினைவில் இருத்தி நிரந்தரமாகத் தியானம் யுரிகிறரனோ அவனை விடுவிப்பது எனது சிறப்பியல்பாகும். என் நாமத்தை உச்சரிப்பவர், என்னை வணங்குபவர், எனது வாழ்க்கை நிகழ்ச்சிகளை பற்றி எண்ணி இவ்வாறாக என்னை நினைவில் இருத்தி இருப்பவர்கள் எங்ஙனம் உலகப் பொருட்கள், உணர்ச்சிகள் இவைகளில் கவனமுள்ளவர்களாக இருக்கமுடியும்? சாவின் வாயினின்று எனது அடியவர்களை நான் வெளியே இழுத்து விடுவேன்.
எனது கதைகள் கேட்கப்பட்டால் எல்லா நோய்களும் விலகும். எனது கதைகளை மரியாதையுடன் கேட்டு அவற்றை எண்ணித் தியானம் செய்து கிரகித்துக்கொள்ளுங்கள். இதுவே மகிழ்ச்சிக்கும், திருப்திக்குமான மார்க்கமாகும். என் அடியவர்களின் பெருமையும், அகம்பாவமும் அற்றுவிடும். கேட்பவரின் மனம் அமைதிப்படுத்தப்படும். அன்றியும் அது இதயபூர்வமும் முழுமையுமான பக்தியாயிருப்பின் மனம் உச்ச உணர்ச்சியுடன் ஒன்றாகி விடும். ‘சாயி சாயி’ என்று சாதாரணமாக ஞாபகமூட்டிக்கொள்வதே பேசுவதில், கேட்பதில் உள்ள பாவங்களைத் தீர்க்கும்
அடியவர்களுக்கு அளிக்கப்பட்ட பலதரப்பட்ட பணிகள்
ஆண்டவர் வெவ்வேறு பணிகளை, வெவ்வேறு அடியவர்களிடம் ஒப்புவிக்கிறார். சிலர் கோவில், மடம் ஆகியவற்றை கட்டுவதற்கும் சிலர் புண்ணிய தீர்த்தங்களுக்குப் படிக்கட்டுகள் அமைப்பதற்கும் நியமிக்கப்படுகிறார்கள். சிலர் ஆண்டவன் புகழைப் பாட நியமிக்கப்படுகிறார்கள். சிலர் க்ஷேத்ராடன யாத்திரைக்கு அனுப்பப்படுகிறார்கள். ஆனாலும் எனக்கு சத்சரிதம் எழுதும் வேலை ஒப்படைக்கப்பட்டது. எல்லாம் சிறிது தெரிந்து ஒன்றும் முழுமையாகத் தெரியாதவனைப் போன்ற நான் இப்பணிக்குக் கொஞ்சமும் தகுதியுடையவன் அல்லன். பின்னர் ஏன் அத்தகைய கடினமான வேலையை மேற்கொள்ள வேண்டும். எவரே சாயிபாபாவின் உண்மை வரலாற்றை எடுத்தியம்ப முடியும்? சாயிபாபாவின் அருள் ஒன்று மட்டுமே இக்கடின வேலையை நிறைவேற்ற ஊக்கம் அளிக்க முடியும். எனவே நான் எனது பேனாவைக் கையில் எடுத்தபோது சாயிபாபா எனது அஹங்காரத்தை அகற்றிவிட்டு அவரே தமது நிகழ்ச்சிகளையெல்லாம் வரையலானார். ஆதலின் இந்நிகழ்ச்சி ளையெல்லாம் விவரிப்பதன் பெருமை அவரையே அடைகிறது. என்னையல்ல!

பிறப்பில் மறையவனாக இருப்பினும் ஸ்ருதி, ஸ்ம்ருதி என்ற இரண்டு கண்கள் (பார்வை அல்லது காட்சிகள்) தேவையுள்ளவனாக இருந்தேன். எனவே சத்சரிதத்தை எழுதவே இயலாத நிலையில் இருந்தேன். ஆனாலும் ஆண்டவன் அருள், ஊமையைப் பேசவைக்கிறது. முடவனை மலையைக் கடக்கச் செய்கிறது. அவரின் விருப்பப்படி காரியங்களைச் செயற்படுத்தும் தந்திரத்தை அவர் ஒருவரே அறிவார். புல்லாங்குழலோ, ஹார்மோனியமோ எங்ஙனம் ஒலி எழுப்புகிறது என்பதை அறியா. இது அவற்றை வாசிப்பவனையே சார்ந்தது. சந்திரகாந்தக்கல் கசிவதும், கடல் பொங்கியெழுவதும் சந்திரோதயம் காரணமாகவே, அவ்வவற்றின் தன்மையால் அல்ல
கலங்கரை விளக்கமாக பாபாவின் கதைகள்
படகுக்காரர்கள் – பாறைகள், அபாயங்கள் ஆகியவற்றிலிருந்து விலகி பத்திரமாக பயணம் செய்வதற்காக, கடலின் பல்வேறு இடங்களில் கலங்கரை விளக்கம் கட்டப்படுகிறது. சம்சாரம் என்னும் சாகரத்தில் சாயிபாபாவின் கதைகள் அத்தகைய பயனை நல்குகின்றன. அவைகள் அமிர்தத்துக்குச் சுவையூட்டுகின்றன. நமது உலகப்பாதையை மிருதுவாகவும், கடப்பதற்கு எளியதாகவும் ஆக்குகின்றன. ஞானிகளின் கதைகள் ஆசீர்வதிக்கப்பட்டவைகள். நமது செவிகளின் வழியாக உள்ளத்தினுள் புகும்போது சரீராபிமானம் அல்லது அஹங்காரம், த்வைத உணர்ச்சி ஆகியவை மறைகின்றன. நம் உள்ளத்தில் அவைகள் தேக்கப்படுமானால் சந்தேகம் பறந்தோடும், சரீரத்தின் பெருமை உணர்ச்சி கீழே இறங்கும். ஏராளமாக விவேகம் சேகரிக்கப்படும். பாபாவின் தூய புகழை விவரிப்பதும், அதையே அன்புடன் கேட்பதும் அடியாரின் பாபங்களை அழிக்கும். க்ருதயுகத்தின் ஆன்மிகப் பயிற்சியானது சமதமா (உள்ளம், உடல் இவற்றின் தனித்தன்மை), த்ரேதாயுகத்திற்கு தியாகம், த்வாபரயுகத்திற்கு வழிபாடு, கலியுகத்திற்கு இறைவனின் புகழையும், நாமத்தையும் இசையாகப் பாடுவதுமாகும். கடைசிப் பயிற்சியானது நான்கு வர்ணத்தைச் சேர்ந்த எல்லார்க்கும் உரியதாகும். மற்றைய பயிற்சிகளான யோகம், தியாகம், தியானம், தாரணை (ஒரு முகப்படுத்துதல்) ஆகியவை பழகுவதற்கு மிகவும் கடினமானவை. இறைவனது (சாயிபாபா) புகழைச் செவிமடுப்பது மிகவும் எளியதாகும். நாம் நமது கவனத்தை அவைகள் மீது திருப்ப மாத்திரமே வேண்டும். கதைகளைக் கேட்பதும், கீர்த்தனையாகப் பாடுவதும் புலனுணர்வுப் பொருட்கள் மீதுள்ள உறவை நீக்கி, அடியவர்களைப் பற்றறுத்தவர்களாக்கி முடிவில் ஆன்ம உணர்வுக்கு வழிநடத்திச் செல்லும். இக்குறிக்கோளையே கருத்திற்கொண்டு சாயிபாபா ‘சத்சரிதாம்ருதா’ என்னும் அவரது கதைகளை எழுதச்செய்தார், அல்லது உதவி செய்தார். அடியவர்கள் இப்போது இக்கதைகளை எளிதாகப்” படிக்கவோ, கேட்கவோ செய்யலாம். அங்ஙனம் செய்யும்போது அவரைத் தியானம் செய்க.
சாயிபாபாவின் தாயன்பு
தன் இளங்கன்றை பசு எங்ஙனம் நேசிக்கிறது என்பதை யாவரும் அறிவர். அதன் மடி எப்போதும் நிறைந்திருக்கிறது. கன்று பால் வேண்டி மடியை முட்டும்போது தடையின்றி பால் பெருக்கெடுக்கின்றது. அங்ஙனமே தாயாரும் தக்க தருணத்தில் தன் குழந்தையின் பசியறிந்து முலையமுது தந்து ஊட்டுகிறாள். அதற்கு ஆடை அழகுற அணிவிப்பதிலும், சிறப்புறச் சிங்காரிப்பதிலும் முக்கிய கவனம் செலுத்துகிறாள். குழந்தை எதைப்பற்றியும் அறிவதுமில்லை, கவலையுறுவதுமில்லை. ஆயின் தன் குழந்தை நன்றாக உடை உடுத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் கண்ணுறும் தாயின் மகிழ்ச்சிக்கு ஓர் எல்லையில்லை. தாயன்பு விசித்திரமானது, அசாதாரணமானது, பற்றில்லாதது, இணையில்லாதது. தமது அடியவர்களிடம் சத்குருவும் இத்தகைய தாயன்பு காண்பிக்கிறார்கள். இத்தகைய அன்பே சாயிபாபா என்னிடம் கொண்டிருந்தது. அதைப்பற்றிய நிகழ்ச்சி கீழ்வருமாறு .
நான் அரசாங்க வேலையிலிருந்து 1916ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றேன். கெளரவமாக என் குடும்பத்தை நடத்துவதற்கு எனக்குத் தீர்மானித்துத் தரப்பட்ட பென்ஷன் போதவில்லை. குருபூர்ணிமா அன்று நான் ஷீர்டிக்குச் சென்றிருந்தேன். அங்கு அண்ணா சிஞ்சணீகர் அவராகவே பாபாவிடம் எனக்காகக் கீழ்வருமாறு வேண்டினார். “தயவு செய்து அவரை அன்புடன் நோக்குங்கள். அவர் பெறும் பென்ஷன் அறவே போதாது. அவரது குடும்பமோ வளர்ந்து வருகிறது. அவருக்கு வேறு வேலை ஏதும் கொடுங்கள். அவரது சிந்தா குலந்தனைத் தீர்த்து அவரை மகிழச்செய்யுங்கள். ”
பாபா பதில் அளித்தார், “அவர் வேறு ஏதாவது வேலை பெறுவார். ஆயின், இப்போது எனக்குப் பணி செய்து மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும். அவரது உணவு ஏப்போதும் நிறைந்திருக்கும். ஒருபோதும் காலியாய் இராது. அவர் தனது கவனம் அனைத்தையும் என்பால் திருப்பி நரத்திகர்கள், மதப்பற்று அற்றவர்கள், கொடுமையாளர்கள் இவர்களின் கூட்டுறவைத் தவிர்த்து, எல்லோரிடமும் பணிவாகவும், அடக்கமாகவும் இருந்து உள்ளத்தாலும், உயிராலும் என்னை வணங்க வேண்டும். இதைச் செய்வாராகில் அவர் எல்லையற்ற பேரின்பத்தை அடைவார்.”
எவருடைய வழிபாடு உபதேசிக்கப்பட்டு இருக்கிறதோ, அந்த நான் என்பது யார் என்னும் வினாவுக்கு சாயிபாபா என்பது யார் என்னும் குறிப்பில் முன்னமே இந்நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.
ரோஹிலாவின் கதை
எல்லோரையும் அரவணைக்கும் சாயிபாபாவின் அன்பை ரோஹிலாவின் கதை நமக்குக் காட்டுகிறது. உயரமாகவும், வாட்டசாட்டமாகவும், காளையைப் போன்ற வலிமை உடையவனாகவுமுள்ள ரோஹிலா என்பவன் ஷீர்டிக்கு வந்தான். நீண்ட கஃப்னி என்னும் உடை அணிந்திருந்தான். பாபாவிடமுள்ள அன்பினால் அங்கு தங்கியிருந்தான். இரவும், பகலும் கலிமாவை (திருக்குரானின் பாடல்கள்) சப்தமாகவும், குரூரமாகவும் ஒப்பித்து “அல்லாஹு அக்பர்” (கடவுள் பெரியவர்) என்று கத்துவான். ஷீர்டியின் பெரும்பாலான மக்கள் பகலெல்லாம் தங்கள் வயலில் வேலை செய்துவிட்டு, இரவு வீட்டிற்குத் திரும்பும்போது ரோஹிலாவின் குரூர இரைச்சல்களாலும், கத்தல்களாலும் வரவேற்கப்படுவார்கள். அவர்கள் தூங்கமுடியாமல் மிகுந்த தொல்லையும், அசெளகர்யமும் அடைந்தனர். மெளனமாக இத்தொந்தரவைச் சில நாட்கள் பொறுத்திருந்து, அவர்களால் இனிமேல் இத்துயரம் படமுடியாது என்னும் நிலை வந்தவுடன், பாபாவை அணுகி இதைக் கவனித்து ரோஹிலாவின் தொந்தரவை நிறுத்தும்படி வேண்டிக்கொண்டனர்.
பாபா அவர்களின் வேண்டுதல்களைக் கவனிக்கவில்லை. மாறாக அவர்களைக் கடிந்தார். அவர்களைத் தங்கள் வேலைகளைக் கவனிக்கும்படியும், ரோஹிலாவைக் கவனிக்கவேண்டாம் என்றும் கூறினார். அவர் மேலும், ரோஹிலாவுக்கு மிகவும் கெடுதலான மனைவி ஒருத்தி இருக்கிறாள் என்றும் அவள் உள்ளே வரமுயன்று ரோஹிலாவையும், தம்மையும் தொந்தரவு செய்வதாயும் ஆனால் ரோஹிலாவின் பிரார்த்தனைகளைக் கேட்டவுடன் அவள் உள்ளே நுழையத் துணியவில்லையென்றும் ஆதலால் அவர்கள் மன அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள் என்றும் கூறினார். உண்மையில் ரோஹிலாவுக்கு ஒரு மனைவியும் கிடையாது. அவனுக்கு மனைவியாக பாபா குறிப்பிட்டது துர்புத்தி அதாவது கெட்ட எண்ணங்களாகும். ஏனெனில் வேறெதைக் காட்டிலும் கடவுளிடம் வேண்டிக்கொள்வதிலும், முறையிட்டுப் பேரிரைச்சல்கள் செய்வதையும் பாபா விரும்பினார். அவர் ரோஹிலாவின் பக்கம் இருந்து ரோஹிலாவின் இரைச்சல்களையும், கூக்குரல்களையும் பொறுத்துக்கொள்ளுமாறும் அவை சீக்கிரம் மறைந்துவிடும் என்றும் கூறினார்.
பாபாவின் இனியதூம் அமிர்தத்தினையொத்த வார்த்தைகளும்ஒருநாள் மத்தியானம் ஆரத்தி முடிந்தபிறகு அடியார்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது பாபா கீழ்க்கண்ட அழகான அறிவுரையை விடுத்தார்.
“நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் இதை நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்வது அனைத்தும் எனக்குத் தெரியும். நானே அனைவருடைய அந்தரங்க ஆட்சியானனாக இதயத்தில் அமர்ந்து இருக்கிறேன். இந்த உலகின்கண் அசையும் – அசையா சர்வஜீவராசிகளையும் அரவணைக்கிறேன். இப்பிரபஞ்சமன்னும் தோற்றத்தை நானே கட்டுப்படுத்துபவன், ஆட்டுவிப்பவன், எல்லா வர்க்கங்களின் மூலமாதா நானே. முக்குணங்களின் கூட்டுறவும் நானே.
நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன், படைப்பவன், காப்பவன், அழிப்பவனுமாம். என்பால் கவனத்தைத் திருப்புபவளனை எதுவும் துன்பம் விளைவிக்காது. ஆனால் மாயை, என்னை மறந்தவனை ஆட்டி உலுக்கும். எல்லாப் பூச்சிகள், எறும்புகள், கண்ணுக்குத் தென்படுபவை, அசையக்கூடிய, அசையமுடியாத உலகம் எல்லாம் என்னுடைய உடம்பு அல்லது உருவம் ஆகும்.”
இத்தகைய அழகான, விலைமதிப்பற்ற மொழிகளைக் கேட்டு, இனிமேல் என் குருவைத் தவிர வேறு யாருக்கும் நான் பணிவிடை செய்யப்போவதில்லை என்று என் மனதில் நான் தீர்மானித்தேன். அண்ணா சிஞ்சணீகரிடம் பாபா விடுத்த பதில் (உண்மையில் அது எனக்கானதாகும்) அதாவது நான் ஒரு வேலை பெறுவேன் என்னும் எண்ணம் என் மனதில் சுழன்றது. நான் அங்ஙனம் நிகழுமா என்று எண்ணிக்கொண்டிருந்தேன். எதிர்கால நிகழ்ச்சிகளைக் கண்ணுறும் போது பாபாவின் வார்த்தைகள் உண்மையாயின. நான் ஓர் அரசாங்க உத்தியோகத்தைப் பெற்றேன். ஆனால் அது குறுகியகால அளவுடையது. பிறகு நான் சுதந்திரம் அடைந்தேன். என் குரு சாயிபாபாவினுடைய சேவைக்கு என்னைப் பூரணமாகச் சமர்ப்பித்தேன்.
இவ்வத்தியாயத்தை முடிக்கும் முன்பாக பல்வேறு இடைஞ்சல்களான தூக்கம், சோம்பல், மனது அலைதல், உணர்வுகளுடன் உறவு இவற்றை விட்டொழித்துவிட்டுத் தங்களுடைய முழுமையும், சிதைவுமற்ற கவனத்தை சாயிபாபாவின் கதைகளுக்கு அளிக்கும்படி இந்நூலைப் பயில்வோரிடம் நான் வேண்டிக்கொள்கிறேன். அவர்களது அன்பு இயற்கையானதாக இருக்கட்டும். பக்தியின் ரகசியத்தை அவர்கள் அறியட்டும். மற்ற பல சாதனைகள் புரிந்து களைப்படைய வேண்டாம். ஒர் எளிய மருந்தை அவர்கள் பற்றட்டும். அதாவது சாயிபாபாவின் கதைகளைக் கேட்பது. இது அவர்களின் அறியாமையை அழித்து அவர்களுக்கு முக்தி நல்கும். ஓர் உலோபி பல்வேறு இடங்களில் தங்கினாலும், தன்னுடைய புதைக்கப்பட்ட செல்வத்திலேயே சதா சிந்தனை உள்ளவனாக இருப்பதைப்போல், சாயிபாபா நம் அனைவரின் உள்ளமெனும் அரியாசனத்தில் வீற்றிருக்கட்டும்.
அடுத்த அத்தியாயத்தில் சாயிபாபாவின் ஷீர்டி விஜயத்தைப் பற்றிக் கூறுகிறேன்.
ஸ்ரீ சாய் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம்.