ஆன்மிகம்

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் அத்தியாயம் – 4 (Sri Sai Satcharitam Chapter – 4)

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் அத்தியாயம் – 4 (Sri Sai Satcharitam Chapter – 4)

அத்தியாயம் – 4

ஷீர்டிக்கு சாயிபாபாவின்‌ முதல்‌ விஜயம்‌ – ஞானிகளின்‌ வருகை – ஷீர்டி ஒரு புண்ணிய தீர்த்தம்‌ – சாயிபாபாவின்‌ தோற்றம்‌ – கெளலிபுவாவின்‌ கருத்து – விட்டலின்‌ பிரசன்னம்‌ – க்ஷீர்சாகரின்‌ கதை – பிரயாகையில்‌ தாஸ்கணுவின்‌ குளியல்‌ – சாயிபாபாவின்‌ அயோனி ஜன்மமும்‌ அவரின்‌ முதல்‌ ஷீர்டி விஜயமும்‌ – மூன்று சத்திரங்கள்‌.

முந்தைய அத்தியாயத்தில்‌, சாயி சத்சரிதத்தை எழுதத்‌ தூண்டிய சூழ்நிலைகளை விவரித்தேன்‌. இப்போது ஷீர்டிக்கு சாயி பாபாவின்‌ முதல்‌ விஜயம்‌ பற்றிக்‌ கூறுகிறேன்‌.

ஞானிகளின்‌ வருகை

கீதையில்‌ கண்ணபிரான்‌ கூறுகிறார்‌ (அத்‌.4 : ஸ்லோகம்‌ 7,8) “தர்மம்‌ அழிந்து அதர்மம்‌ தலையெடுக்கும்‌ போதெல்லாம்‌ என்னை நானே அவதரித்துக்கொள்கிறேன்‌. நல்லோரைக்‌ காத்துத்‌ தீயோரை அழிக்க யுகந்தோறும்‌ அவதரிக்கின்றேன்‌”.

இதுவே பகவானின்‌ அவதார நோக்கம்‌. பகவானின்‌ சார்பாக ரிஷிகளும்‌, ஞானிகளும்‌, இப்பூவுலகில்‌ தக்கதருணத்தில்‌ தோன்றி, அவதார நோக்கம்‌ நிறைவேறுமுகமாகத்‌ தமக்கே உரித்தானமுறையில்‌ உதவி செய்கிறார்கள்‌.

உதாரணமாக இருமுறை பிறப்பவர்‌ அதாவது பிராமணர்கள்‌, க்ஷத்ரியர்கள்‌, வைசியர்கள்‌ தங்கள்‌ கடமைகளைப்‌ புறக்கணிக்கும்போதும்‌, மேற்குலத்தவரின்‌ உரிமைகளைத்‌ தவறான முறையில்‌ பறிக்கச்‌ சூத்திரர்கள்‌ முயலும்போதும்‌, ஆன்மஞான போதகர்கள்‌ மதிக்கப்படாமல்‌ அவமதிக்கப்படும்போதும்‌ தன்னைத்‌ தான்‌ (ஒவ்வொருவனும்‌) மெத்தப்படித்தவன்‌ என்று எண்ணும்போதும்‌, தடுக்கப்பட்ட ஆகாராதிகளையும்‌, போதை தரும்‌ குடிபொருளையும்‌ ஜனங்கள்‌ உட்கொள்ளும்போதும்‌, மதமென்னும்‌ போர்வையில்‌ மக்கள்‌ தகாத காரியங்களைச்‌ செய்யும்போதும்‌, பல்வேறு இனத்து மக்கள்‌ தங்களுக்குள்‌ சண்டையிட்டுக்கொள்ளும்போதும்‌, மறையவர்‌ சந்தியாவந்தனம்‌ மற்றும்‌ தங்கள்‌ மதப்‌ பழக்கவழக்கங்களைச்‌ செய்யத்‌ தவறும்போதும்‌, யோகிகள்‌ தியானத்தைப்‌ புறக்கணிக்கும்போதும்‌, மனைவி மற்றும்‌ மக்கட்செல்வமே தங்கள்‌ கருத்துக்குரிய ஒன்றே ஒன்று என்று மக்கள்‌ கருதத்‌ தலைப்பட்டு முக்தி என்னும்‌ உண்மை நெறியினின்று வழிதவறிப்போகும்போதும்‌, ஞானிகள்‌ தோன்றவே செய்கிறார்கள்‌. தங்கள்‌ மொழி, செயல்வழிகளால்‌ காரியங்களை நெறிப்படுத்துகிறார்கள்‌.

அவர்கள்‌ கலங்கரை விளக்கையொப்ப சேவை செய்து நமக்கு மெய்நெறியைக்‌ காண்பிக்கிறார்கள்‌. இவ்வாறாகப்‌ பல ஞானிகள்‌ நிவ்ருத்தி, ஞானதேவ்‌, முக்தாபாய்‌, நாமதேவ்‌, கோரா, கோனாயி, ஏக்நாத்‌, துகாராம்‌, நரஹரி, நர்சிபாயி, சஜன்கஸாயி, சவதா, ராம்தாஸ்‌ மற்றும்‌ பலர்‌ பற்பல காலங்களில்‌ மக்களுக்கு மெய்நெறியைக்‌ காண்பிக்கத்‌ தோன்றவே செய்தனர்‌. இவ்வகையில்‌ இறுதியாக ஷீர்டி சாயிபாபாவும்‌ விஜயம்‌ செய்தார்‌.

ஷீர்டி ஒரு புண்ணிய தீர்த்தம்‌

அஹமத்நகர்‌ ஜில்லாவில்‌ உள்ள கோதாவரி ஆற்றங்கரை மிகவும்‌ அதிர்ஷ்டம்‌ படைத்ததாகும்‌. ஏனெனில்‌ அது அனேக ஞானிகளை என்றும்‌, புரந்தும்‌, அடைக்கலம்‌ கொடுத்தும்‌ இருக்கிறது. அவர்களுள்‌ முக்கியமானவர்‌ ஞானேஷ்வர்‌. ஷீர்டியும்‌ அஹமத்நகர்‌ ஜில்லாவில்‌ உள்ள கோபர்காவன்‌ தாலுக்காவில்தான்‌ இருக்கிறது. கோபர்காவனில்‌ உள்ள கோதாவரி ஆற்றைக்‌ கடந்தவுடன்‌ நீங்கள்‌ ஷீர்டிக்குள்ள வழியை அடைகிறீர்கள்‌. ஒன்பது மைல்கள்‌ சென்றதும்‌ நீம்காவன்‌ அடைகிறீர்கள்‌. அவ்விடத்தினின்று ஷீர்டி தெரிகிறது.

கிருஷ்ணா ஆற்றங்கரையிலுள்ள கனகாபூர்‌, நரசிம்ஹவாடி, ஓளதும்பர்‌ போன்ற மற்ற புனித க்ஷேத்திரங்களைப்‌ போன்று ஷீர்டியும்‌ அறிமுகமானதும்‌, புகழ்‌ பெற்றதும்‌ ஆகும்‌. தாமாஜி செழித்து விளங்கியதும்‌, ஆசீர்வதித்ததுமான பண்டரீபுரத்துக்கு அருகில்‌ உள்ள மங்கள்வேடாவைப்‌ போன்றும்‌, சமர்த்த ராம்தாஸ்‌ சஜ்ஜன்கட்டில்‌ விளங்கியதைப்‌ போன்றும்‌ நரசிம்ஹ சரஸ்வதி நரோபாச்சிவாடியில்‌ விளங்கியதைப்‌ போன்றும்‌, சாயிநாத்‌ ஷீர்டியில்‌ செழித்து விளங்கி அஃதை வாழ்த்தினார்‌.

சாயிபாபாவின்‌ சத்வ குணருபம்‌

சாயிபாபாவினால்‌ ஷீர்டி முக்கியத்துவம்‌ பெற்றது. சாயிபாபா எத்தகைய பண்புள்ளவர்‌ என்பதைக்‌ காண்போம்‌. கடப்பதற்கு மிகவும்‌ கடினமான இகவாழ்வை அவர்‌ வென்றார்‌. சாந்தி அல்லது மன அமைதியே அவரின்‌ அணிகலன்‌. விவேகத்தின்‌ பெட்டகம்‌. அவர்‌ வைணவ அடியார்களின்‌ தாயகமாவார்‌. அவர்‌ கர்ணனையொப்ப வள்ளல்களுள்‌ எல்லாம்‌ தலைசிறந்த வள்ளலாக விளங்கினார்‌. சாராம்சம்‌ அனைத்தினின்றும்‌ பெற்ற சாராம்சமாகவும்‌ இருந்தார்‌. அவருக்கு அழியும்‌ பொருட்கள்‌ மீது ஆசை இல்லை. அவருடைய ஒரே ஈடுபாடான ஆன்ம உணர்விலேயே எப்போதும்‌ கவரப்பட்டார்‌. இவ்வுலகப்‌ பொருட்களிலோ அல்லது இவ்வுலகத்தைக்‌ கடந்தவற்றிலோ அவர்‌ மகிழ்ச்சியடையவில்லை. அவரின்‌ அந்தரங்கம்‌ (உள்ளம்‌) ஒரு கண்ணாடி போன்று தூய்மையானது. அவரின்‌ மொழிகள்‌ எப்போதும்‌ அமுதத்தைப்‌ பெய்தன.

பணக்காரர்‌, ஏழை யாவரும்‌ அவருக்கு ஒன்றே. புகழ்ச்சி, இகழ்ச்சி இவற்றை அவர்‌ அறிந்திருக்கவில்லை அல்லது மதிக்கவில்லை. அவரே எல்லா உயிர்கட்கும்‌ இறைவன்‌ ஆவார்‌. அவர்‌ சரளமாகப்‌ பேசி அனைவருடனும்‌ பழகினார்‌. நடிப்பையே தொழிலாகக்கொண்ட குமரிகளின்‌ நடிப்பையும்‌, நாட்டியத்தையும்‌ கண்டார்‌. கஜல்‌ (தெம்மாங்கு) பாடல்களைக்‌ கேட்டார்‌. ஆயினும்‌ இம்மியளவும்‌ சமாதி நிலையிலிருந்து அவர்‌ விலகவில்லை.

அல்லாவின்‌ நாமம்‌ எப்போதும்‌ அவர்‌ நாவில்‌ இருந்தது. இவ்வுலகம்‌ விழித்திருக்கும்போது அவர்‌ தூங்கினார்‌. இவ்வுலகம்‌ தூங்கும்போது அவர்‌ சுறுசுறுப்பாய்‌ இருந்தார்‌. ஆழ்ந்த கடலையொப்ப அவர்‌ மனம்‌ அமைதியாய்‌ இருந்தது. அவரது இருப்பிடம்‌ தீர்மானிக்க இயலாததாய்‌ இருந்தது. மற்றும்‌ அவர்‌ செய்கைகள்‌ நிச்சயமாகப்‌ புரிந்துகொள்ள இயலாததாய்‌ இருந்தது. அவர்‌ ஓரிடத்தில்‌ வாழ்ந்தார்‌ எனினும்‌ இவ்வுலகின்‌ நடவடிக்கைகள்‌ அனைத்தையும்‌ அவர்‌ அறிவார்‌. அவரின்‌ தர்பார்‌ கவர்ச்சிகரமானது.

தினந்தோறும்‌ நூற்றுக்கணக்கான கதைகளைத்‌ திருவாய்‌ மலர்ந்தார்‌. ஆனாலும்‌ மெளன விரதத்திலிருந்து இம்மியளவும்‌ பிறழவில்லை. மசூதியில்‌ உள்ள சுவரின்‌ மீது எப்போதும்‌ சாய்ந்துகொண்டிருந்தார்‌ அல்லது காலை, மதியம்‌, மாலை இவ்வேளைகளில்‌ லெண்டி (பூந்தோட்டம்‌), சாவடி (சயன அறை) ஆகியவற்றை நோக்கி நடந்துகொண்டிருந்தார்‌. எப்போதும்‌ ஆன்ம உணர்வில்‌ கருத்துள்ளவராகவே இருந்தார்‌. சித்தராயினும்‌ சாதகரைப்‌ போன்று நடித்தார்‌. அவர்‌ எளிமையாகவும்‌, தாழ்மையாகவும்‌, அஹங்காரமற்றும்‌ இருந்து எல்லோரையும்‌ மகிழ்வித்தார்‌. இவரே நமது சாயிபாபா, ஷீர்டி மண்‌ சாயிபாபாவின்‌ திருவடிகளால்‌ மிதிபட்டதால்‌ அசாதாரண முக்கியத்துவம்‌ பெற்றது. ஆலந்தியை ஞானேஷ்வரும்‌, பைடணை ஏக்நாத்தும்‌ உயர்த்தியதையொப்ப ஷீர்டியை சாயி உயர்த்தினார்‌.

ஷீர்டியின்‌ புல்லின்‌ அரும்புகளும்‌, கற்களும்‌ ஆசீர்‌வதிக்கப்பட்டவைகள்‌. ஏனெனில்‌, அவைகள்‌ எளிதாக சாயியின்‌ திருவடிகளை முத்தமிட முடியும்‌. திருவடித்துளிகளை தமது தலையில்‌ ஏற்றுக்கொள்ள முடியும்‌. நமது அடியவர்களுக்கு ஷீர்டி மற்றுமொரு பண்டரீபுரம்‌, ஜகந்நாதம்‌, த்வாரகை, காசி, ராமேஸ்வரம்‌, பத்ரி, கேதாரம்‌, நாசிக்‌, த்ரயம்பகேஸ்வரம்‌, உஜ்ஜயினி மஹாகாளேஷ்வர்‌ அல்லது மஹாபலேஷ்வர கோகர்ணம்‌ போன்று ஆகியது. ஷீர்டியில்‌ சாயிபாபாவுடன்‌ தொடர்புகொள்வதே நமது வேதமும்‌, தந்திரமும்‌. அஃது இவ்வுலக உணர்வைத்‌ தணித்து, தன்னுணர்வை எளிதில்‌ வழங்குகிறது.

சாயிபாபாவின்‌ தரிசனமே நமது யோகசாதனம்‌. அவருடன்‌ பேசுவது நமது பாவங்களைக்‌ கழித்துறச்‌ செய்யும்‌. அவரின்‌ திருவடிகளுக்கு நறுமண எண்ணெய்‌ தேய்ப்பதே நமது திரிவேணிப்‌ பிரயாகை நீராடல்‌, அவரின்‌ திருவடித்‌ தீர்த்தத்தை அருந்துவதனால்‌ நமது ஆசைகள்‌ அற்றுவிடும்‌. அவரின்‌ ஆணையே வேதம்‌. அவர்‌ உதியையும்‌ (திருநீற்றுச்சாம்பல்‌), பிரசாதத்தையும்‌ உண்ணலே எல்லாவற்றையும்‌ தூய்மை ஆக்கும்‌. நமக்கு ஆறுதல்‌ அளித்த அவரே நமது கிருஷ்ணர்‌, ராமர்‌, அவரே நமது பரப்பிரம்மம்‌ (பரிபூரணத்துவம்‌). அவர்‌ தாமே மாறுபட்ட இருவினைகளுக்கு அப்பாற்பட்டவராய்‌ தாழ்த்தப்படாமலும்‌, உயர்த்தப்படாமலும்‌ இருந்தார்‌. எப்போதும்‌ ஆன்மாவில்‌ சத்து – சித்து – ஆனந்தமாகக்‌ கவரப்பட்டார்‌. அவரின்‌ இருப்பிடம்‌ ஷீர்டியானாலும்‌, அவரின்‌ செயல்‌ இலக்குகள்‌ பரந்து பஞ்சாப்‌, கல்கத்தா, வட இந்தியா, குஜராத்‌, தக்காணம்‌, கன்னடம்‌ ஆகியவரைக்கும்‌ விரிந்திருந்தது.

இவ்வாறாகத்‌ திக்கெட்டும்‌ நெடுந்தூரம்‌ சாயியின்‌ புகழ்‌ பரவி எல்லாப்‌ பகுதிகளிலிருந்தும்‌ அடியவர்‌ திருக்கூட்டம்‌ அவரின்‌ தரிசனத்தையும்‌, ஆசீர்வாதத்தையும்‌ பெறுவதற்காக வந்தது. அவருடைய தரிசனம்‌ ஒன்றினாலேயே மக்களின்‌ மனம்‌ சுத்தமாக இருப்பினும்‌, இல்லாவிட்டாலும்‌ கணத்தில்‌ அமைதியடையும்‌. பண்டரீபுர விட்டல்‌ ரகுமாயியை சேவித்த அதே ஈடு இணையற்ற மகிழ்ச்சியை அவர்கள்‌ பெற்றார்கள்‌ என்றால்‌ அது மிகையாகாது. இது போன்ற ஓர்‌ அடியவர்‌ சொல்வதை கேளுங்கள்‌.

கெளலியுவாவின்‌ பிரகடனம்‌

ஏறக்குறைய தொண்ணூற்றைந்து வயதுடைய கெளலிபுவா என்னும்‌ ஒரு பக்தர்‌ பண்டரீபுரத்துக்கு‌ வருடந்தோறும்‌ சென்று வருபவர்‌. அவர்‌ பண்டரீ புரத்தில்‌ எட்டு மாதங்கள்‌ தங்கினார்‌. கங்கைக்கரையில்‌ ஆடி மாதத்திலிருந்து கார்த்திகை வரை நான்கு மாதங்கள்‌ தங்கினார்‌. மூட்டைகளைச்‌ சுமப்பதற்காக ஒரு கழுதையைத்‌ தன்னுடனும்‌, ஒரு சீடனைத்‌ துணைவனாகவும்‌ வைத்திருந்தார்‌. ஒவ்வோர்‌ ஆண்டும்‌ தனது பண்டரீபுர விஜயத்தைச்‌ செய்துவிட்டு, ஷீர்டிக்கு தான்‌ மிகவும்‌ அன்பு செலுத்திய சாயிபாபாவைப்‌ பார்க்க வருவார்‌. அவர்‌ பாபாவை உற்றுநோக்கி இவ்வாறாகக்‌ கூறுவது வழக்கம்‌, “இவரே ஏழைகளிடத்தும்‌, தீனர்களிடத்தும்‌ கருணை காட்டும்‌ கடவுளான பண்டரிநாத விட்டலின்‌ அவதாரமாவார்‌.’” கெளலிபுவா, விட்டலின்‌ முதிய அடியவர்‌. பண்டரிக்கு அநேகமுறை விஜயம்‌ செய்தார்‌. சாயிபாபா பண்டரிநாதரே என்பதைப்‌ பிரகடனம்‌ செய்தார்‌.விட்டல்‌ தாமே தோன்றினார்‌

இறைவனது நாமத்தை நினைத்துக்‌ கொண்டிருத்தலிலும்‌, பாடுதலிலும்‌ சாயிபாபா மிகவும்‌ விருப்பமுள்ளவர்‌. அவர்‌ எப்போதும்‌ “அல்லா மாலிக்‌” (இறைவனே எஜமானன்‌) என்றார்‌. தமது முன்னிலையில்‌ மற்றவர்களை கடவுளது நாமத்தை இரவும்‌, பகலும்‌ தொடர்ந்து ஏழுநாட்கள்‌ பாடும்படிச்‌ செய்தார்‌. இதற்கு நாம சப்தாஹம்‌ என்று பெயர்‌. ஒருமுறை அவர்‌ தாஸ்கணு மஹராஜை நாம சப்தாஹம்‌ செய்யும்படிச்‌ சொன்னார்‌. ஏழாவது நாளின்‌ முடிவில்‌ விட்டல்‌ பிரசன்னமாவதற்கு உறுதியளித்தால்‌ தான்‌ அதைச்‌ செய்வதாக அவர்‌ கூறினார்‌. அதற்கு பாபா தமது நெஞ்சின்மேல்‌ கைவைத்து நிச்சயம்‌ விட்டல்‌ பிரசன்னம்‌ ஆவார்‌ என உறுதியளித்து, “ஆனால்‌ அந்த பக்தன்‌ ஊக்கமுடையவனாகவும்‌,

பக்தியுடையவனாகவும்‌ இருக்கவேண்டும்‌” என்று கூறினார்‌. டாகூர்நாத்தின்‌ டங்கபுரி (தகூர்‌), விட்டலின்‌ பண்டரி, ரஞ்சோடின்‌ (கிருஷ்ணனின்‌) த்வாரகை எல்லாம்‌ இங்கே (ஷீர்டியில்‌) இருக்கின்றன. த்வாரகையைப்‌ பார்க்க எவரும்‌ வெகுதூரம்‌ செல்லவேண்டியதில்லை. இவ்வாறாக அன்பாலும்‌, பக்தியாலும்‌ பக்தன்‌ பொங்கிக்‌‌ கொண்டிருக்கும்போதுதான்‌ விட்டல்‌ தாமே இங்கு (ஷீர்டியில்‌) பிரசன்னமாவார்‌.

சப்தாஹம்‌ பூர்த்தியானதும்‌ விட்டல்‌ கீழ்கண்ட விதமாகப்‌ பிரசன்னமாகவே செய்தார்‌. வழக்கம்‌ போல குளித்து முடித்தபின்‌ காகா சாஹேப்‌ தீக்ஷித்‌ தியானத்தில்‌ அமர்ந்திருந்தார்‌. அவர்‌ ஒரு காட்சியில்‌ விட்டலைக்‌ கண்டார்‌. மத்தியானம்‌ பாபாவின்‌ தரிசனத்துக்காகச்‌ சென்றபோது பாபா ஐயமற அவரை நோக்கி,விட்டல்‌ பாடீல்‌ வந்தாரா? நீர்‌ அவரைக்‌ கண்டீரா? அவர்‌ விளையாட்டுப்‌ பிள்ளை போன்றவர்‌. அவரை உறுதியாகப்‌ பற்றிக்கொள்ளும்‌. இல்லாவிடில்‌ நீர்‌ சிறிதே கவனக்‌ குறைவாக இருப்பினும்‌ தப்பித்துவிடுவார்‌’” எனக்கூறினார்‌. இது காலையில்‌ நிகழ்ந்தது. மத்தியானம்‌ மற்றொரு விட்டல்‌ தரிசனம்‌. வெளியிலிருந்து ஒரு ஹாக்கர்‌ (பொருட்களை கையில்‌ எடுத்துச்சென்று வீதியில்‌ விற்பவன்‌) 25 அல்லது 30 விட்டோபா படங்களை விற்றுக்கொண்டு வந்தான்‌

தாணேவின்‌ ஓய்வுபெற்ற மம்லதார்‌ B.V.தேவ்‌, தனது ஆராய்ச்சிகளின்‌ மூலம்‌ நிரூபித்திருப்பது, “ஷீர்டி பண்டரீபுர எல்லைக்குள்‌ இருக்கிறது, பண்டரீபுரமோ த்வாரகையின்‌ தென்னக மையம்‌, ஆதலால்‌ ஷீர்டியே த்வாரகை என்பதாகும்‌”, (சாயிலீலா சஞ்சிகை தொகுப்பு 14, எண்‌. 1,2&3). மேலும்‌ த்வாரகையைப்‌ பற்றிய ஸ்கந்த புராணத்தில்‌ உள்ள மற்றொரு குறிப்பு K. நாராயணன்‌ ஐயர்‌ எழுதிய “பாரதவர்ஷத்தின்‌ நிரந்தர சரித்திரம்‌” என்ற நூலிலிருந்துஎந்த இடத்தின்‌ கதவுகள்‌ நான்கு வர்ணத்தார்க்கும்‌ (பிராமணர்‌, க்ஷத்ரியர்‌, வைஸ்யர்‌, சூத்திரர்‌), நான்கு புருஷார்த்தங்களை (தர்மம்‌, அர்த்தம்‌, காமம்‌, மோக்ஷம்‌) நிறைவேற்றிக்கொள்ள திறக்கப்பட்டிருக்கிறதோ, அதுவே த்வாரகை என்று தத்துவ ஞானிகளால்‌ அழைக்கப்படுகிறது என்பதாகும்‌.

ஷீர்டியில்‌ பாபாவின்‌ மசூதியோ நான்கு வர்ணத்தார்க்கு மட்டுமின்றி, நசுக்கப்பட்டோருக்கும்‌, தீண்டத்தகாதவருக்கும்‌, குஷ்டர்களுக்கும்‌ திறக்கப்பட்டிருந்தது. ஆகவே அது த்வாரகை என்று, மிகப்பொருத்தமாகவே பெயரிடப்பட்டுள்ளது. அப்படம்‌ காகா சாஹேபின்‌ காட்சியில்‌ தோன்றிய உருவத்துடன்‌ ஒத்து இருந்தது. இதைக்‌ கண்டும்‌, பாபாவின்‌ மொழிகளை நினைவுகூர்ந்தும்‌, காகா சாஹேப்‌ தீக்ஷித்‌ ஆச்சரியப்பட்டு மகிழ்ச்சியுற்றார்‌. ஒரு படத்தை வாங்கித்‌ தனது பூஜை அறையில்‌ வழிபாட்டுக்காக வைத்தார்‌

பகவந்த்ராவ்‌ க்ஷீர்சாகரின்‌ கதை

பகவந்த்ராவ்‌ க்ஷீர்சாகரின்‌ கதை, பாபா விட்டல்‌ வழிபாட்டில்‌ எவ்வளவு ஆர்வமுள்ளவராக இருந்தார்‌ என்பதை எடுத்துக்‌ காட்டுகிறது. பகவந்த்ராவின்‌ தந்தையார்‌ விட்டோபாவின்‌ பக்தர்‌. பண்டரீபுரத்துக்கு வருடாந்திரப்‌ பயணம்‌ செய்யும்‌ பழக்கமுடையவர்‌. தமது வீட்டிலும்‌ விட்டோபாவின்‌ உருவம்‌ வைத்து அவர்‌ வழிபட்டார்‌. அவர்‌ இறந்தபின்‌ அவரது மகன்‌ வருடாந்திரப்‌ பயணம்‌, வழிபாடு, ஸ்ரார்த்தம்‌ முதலியவை அனைத்தையும்‌ நிறுத்திவிட்டார்‌. பகவந்த்ராவ்‌ ஷீர்டிக்கு வந்தபோது, பாபா அவரது தந்தையை நினைவு கூர்ந்து கூறியதாவது “அவரது தந்‌தை எனது சினேகிதன்‌. எனவே நான்‌ அவரை இங்கு இழுத்தேன்‌. அவர்‌ நைவேத்யம்‌ படைக்காது விட்டலையும்‌, என்னையும்‌ பட்டினி போட்டார்‌. எனவே அவரை நான்‌ இங்கு கொணர்ந்தேன்‌. அவருடன்‌ வாதாடி வழிபாடு செய்ய வைப்பேன்‌

தாஸ்கணுவின்‌ பிரயாகைக்‌ குளியல்‌

கங்கையும்‌, யமுனையும்‌ சந்திக்கும்‌ இடத்திலுள்ள பிரயாகை என்னும்‌ புண்ணிய நதியில்‌ ஸ்நானம்‌ செய்வது மிகவும்‌ பாக்கியமானது என்று ஹிந்துக்கள்‌ நினைக்கிறார்கள்‌. ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள்‌ குறிப்பிட்ட காலங்களில்‌ புண்ணிய ஸ்நானத்திற்காக அவ்விடம்‌ செல்கிறார்கள்‌. ஒருமுறை தாஸ்கணு, தான்‌ ஸ்நானம்‌ செய்வதற்காக பிரயாகை போகவேண்டுமென்று நினைத்தார்‌. பாபாவிடம்‌ அங்ஙனமே செய்வதற்கு அனுமதி வேண்டிவந்தார்‌. பாபா அவருக்கு சொல்லிய பதில்‌, “அவ்வளவு தூரம்‌ போகவேண்டிய அவசியமில்லை. நமது பிரயாகை இங்கேயே இருக்கிறது. என்னை நம்பு” என்றார்‌. அப்போது ஆச்சர்யத்திலும்‌ ஆச்சர்யம்‌! தாஸ்கணு தனது தலையை பாபாவின்‌ அடிகளில்‌ வைத்ததும்‌ கங்கை, யமுனை ஆறுகளின்‌ புனிதநீர்‌ பாபாவின்‌ இரண்டு காற்கட்டை விரல்களிலிருந்து சீராக வெளிப்பட்டது.

இவ்வாச்சரியத்தைக்‌ கண்ணுற்ற தாஸ்கணு அன்பு ஆழ்ந்த மரியாதை உணர்ச்சியால்‌ பெரிதும்‌ கவரப்பட்டார்‌. அவர்‌ கண்கள்‌ நீரால்‌ நிறைந்தன. அந்தரங்கத்தில்‌ அவர்‌ உணர்ச்சியால்‌ உந்தப்பட்டார்‌. அவருடைய பேச்சு, பாபாவின்‌ புகழையும்‌ அவரின்‌ லீலைகளையும்‌ குறிப்பிடும்‌ கவிதையாகப்‌ பொங்கி வெளிப்பட்டது

சாயிபாபாவின்‌ அயோணி ஜன்மமும்‌ அவரின்‌ முதல்‌ ஷீர்டி விஜயமும்‌

சாயிபாபாவின்‌ பெற்றோர்‌, பிறந்த இடம்‌ இவற்றைப்பற்றி ஒருவருக்கும்‌ தெரியாது. பல விசாரணைகள்‌ செய்யப்பட்டன. பாபாவிடமும்‌, மற்றவர்களிடமும்‌ பல கேள்விகள்‌ கேட்கப்பட்டன. ஆனால்‌ திருப்தியான பதிலோ செய்திகளோ இதுவரை கிடைக்கவில்லை. வழக்கத்தில்‌ இவைகளைப்‌ பற்றி நமக்கு ஒன்றும்‌ தெரியாது. சாதாரண மனிதர்களையொப்ப நாமதேவர்‌, கபீர்‌ முதலியோர்‌ பிறக்கவில்லை. அவர்கள்‌ சிசுக்களாக, முத்துக்களின்‌ தாயினிடத்தில்‌ (ஆற்றில்‌) காணப்பட்டார்கள்‌. நாமதேவ்‌, கோணாயியால்‌ பிம்ராதி ஆற்றிலும்‌ – கபீர்‌, தமால்‌ என்பவரால்‌ பாகீரதி ஆற்றிலும்‌ கண்டெடுக்கப்பட்டார்கள்‌. சாயிபாபாவின்‌ விஷயமும்‌ அதையொத்ததாகும்‌. பக்தர்களுக்காக ஒரு வேப்பமரத்தடியில்‌ 16 வயது இளைஞனாகத்‌ தாமே முதலில்‌ தோன்றினார்‌. அப்போதே பிரம்மஞானத்தால்‌ நிரம்பியவராகக்‌ காணப்பட்டார்‌. கனவிலும்‌ இவ்வுலகப்‌ பொருட்களின்‌ ஆசை அவருக்கு இல்லை. மாயையை அவர்‌ உதைத்துத்‌ தள்ளினார்‌. முக்தி அவர்தம்‌ காலடியில்‌ பணி செய்தது, ஷீர்டியைச்‌ சேர்ந்தவரும்‌ நாநாசோப்தாரின்‌ தாயாருமாகிய ஒரு பாட்டி அவரைக்‌ கீழ்கண்டவிதமாக வர்ணிக்கிறார்‌.

அழகும்‌, சுறுசுறுப்பும்‌, மிகுந்த சுந்தரமும்‌ உடைய இவ்விளைஞன்‌ முதலில்‌ வேப்பமரத்தின்‌ அடியில்‌ ஆசனத்தில்‌ அமர்ந்திருந்தவாறு காணப்பட்டான்‌ அக்கிராமத்து மக்கள்‌, இத்தகைய இளம்‌ வயது உடையவன்‌ வெப்பத்தையோ, குளிரையோ பொருட்படுத்தாது அத்தகைய கடினப்‌ பயிற்சி பழகுவதைக்‌ கண்ணுற்று ஆச்சரியத்தால்‌ தாக்கப்பட்டனர்‌. பகலில்‌ ஒருவருடனும்‌ பழகுவதில்லை. இரவில்‌ ஒருவருக்கும்‌ அஞ்சுவதில்லை. இவ்விளைஞன்‌ எங்கிருந்து வந்தான்‌ என்று மக்கள்‌ ஆச்சர்யப்பட்டுக்‌ கேட்டுக்கொண்டனர்‌. ஒரு சாதாரண கவனிப்பே, அவன்மீது எல்லோரும்‌ அன்பு கொள்ளும்‌ அளவிற்கு அவனுடைய உருவாம்சங்களெல்லாம்‌ அத்தகைய சுந்தரம்‌ பொருந்தியதாக இருந்தது. அவன்‌ ஒருவர்‌ வீட்டிற்கும்‌ செல்வதில்லை. எப்போதும்‌ வேப்பமரத்தடியிலேயே உட்கார்ந்திருந்தான்‌. வெளித்தோற்றத்திற்கு இளைஞனாகக்‌ காணப்பட்டான்‌. ஆயினும்‌ அவன்‌ செய்கைகள்‌ உண்மையிலேயே அவன்‌ ஒரு பரமாத்மா என்பதை வெளியிட்டன. அவன்‌ வேண்டுதல்‌ – வேண்டாமையின்‌ பருப்பொருளாகவும்‌ அனைவருக்கும்‌ ஓர்‌ மர்மமாகவும்‌ இருந்தான்‌. ஒருநாள்‌ கண்டோபா கடவுள்‌ ஒரு அடியவனிடம்‌ “சாமி: பிடித்தது. ஜனங்கள்‌ அவரை, “தெய்வமே இவ்விளைஞனின்‌ தந்‌தை யார்‌? அவன்‌ எப்போது வந்தான்‌ என்பதை நீர்‌ தயவுசெய்து விசாரியும்‌” எனக்‌ கேட்கத்‌ துவங்கினர்‌.

கண்டோபா அவர்களை ஒரு மண்வெட்டி கொணரச்‌ சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்தை தோண்டச்‌ சொன்னார்‌. அங்ஙனமே தோண்டப்பட்டபோது செங்கற்கள்‌ காணப்பட்டன. அதற்கடியில்‌ சமதளகல்‌ ஒன்றும்‌ இருந்தது. இந்தக்கல்‌ அப்புறப்படுத்தப்பட்டதும்‌ ஒரு நிலைக்கதவு தெரிந்தது. அதில்‌ நான்கு சமயி (ஐந்துமுக விளக்குகள்‌) எரிந்துகொண்டிருந்தன. அது ஒரு நிலவறைக்கு அழைத்துச்‌ சென்றது. அதில்‌ ஜபமாலைகள்‌, அவற்றை வைத்து ஜபம்‌ செய்யும்‌ பசுமுக உருவப்‌ பைகள்‌, மரப்பலகைகள்‌ முதலியவை காணப்பட்டன. கண்டோபா கடவுள்‌ கூறியதாவது, “இவ்விளைஞன்‌ இங்கு 12 ஆண்டுகளாகப்‌ பயிற்சி செய்தான்‌”. பிறகு ஜனங்கள்‌ அவ்விளைஞனிடம்‌ இதைப்பற்றிக்‌ கேட்கத்‌ துவங்கினர்‌. அவன்‌ அவர்களை திசைதிருப்பி, அது தன்னுடைய குருவின்‌ இடம்‌ (குருஸ்தான்‌) என்றும்‌ அவருடைய புனிதமான ‘வாதன்‌’ என்றும்‌ அதை நன்றாகப்‌ பாதுகாக்கும்படியும்‌ வேண்டிக்கொண்டான்‌. ஜனங்கள்‌ அப்போது கதவை முன்பிருந்தபடியே மூடிவிட்டனர்‌. அரசமரமும்‌, அத்திமரமும்‌ புனிதமாய்‌ இருப்பதுபோல்‌ பாபா வேப்பமரத்தையும்‌ அதே அளவில்‌ புனிதமாகக்‌ கருதி, அதையே பெரிதும்‌ விரும்பினார்‌. மஹல்ஸாபதியும்‌ மற்ற அடியவர்களும்‌ இவ்விடத்தை பாபாவின்‌ குருநாதர்‌ சமாதியடைந்த இடமாகக்‌ கருதி சாஷ்டாங்க சரணம்‌ செய்தனர்‌.

மூன்று வாதாக்கள்‌

(1) வேப்பமரம்‌ இருக்குமிடமும்‌, அதைச்‌ சுற்றியுள்ள இடமும்‌ ஹரிவிநாயக்‌ சாதே அவர்களால்‌ வாங்கப்பட்டு சாதேயின்‌ வாதா என்ற பெயரில்‌ ஒரு பெரிய கட்டிடம்‌ எழுப்பப்பட்டது. அங்கு திரண்ட புனித யாத்ரீகர்களுக்கு அது ஒன்றே தங்கும்‌ இடமாய்‌ இருந்தது. ஒரு பார்‌” (மேடை) வேப்பமரத்தைச்‌ சுற்றிக்‌ கட்டப்பட்டது. தங்கும்‌ இடமும்‌ படிக்கட்டுகளுடன்‌ அமைக்கப்பட்டது. படிக்கட்டுகளின்‌ அடியில்‌ ஒரு இருப்பிடம்‌ இருக்கிறது. பக்தர்கள்‌ அம்மேடையில்‌ வடக்கு நோக்கி அமர்கிறார்கள்‌.

வியாழன்‌, வெள்ளிக்கிழமைகளில்‌ மாலைநேரங்களில்‌ அங்கு வாசனைப்‌ பொருட்களை எரிப்பவர்கள்‌ கடவுள்‌ கிருபையால்‌ மகிழ்ச்சியுடன்‌ இருப்பர்‌. இந்த வாதா பழமையானது. உதிர்ந்துகொட்டும்‌ தன்மை உடையதாகவும்‌, பழுதுபார்க்க வேண்டியதாகவும்‌ இருந்தது. அதற்கு தேவையாயிருந்த பழுதுபார்க்க வேண்டியவை, சேர்க்க வேண்டியவை, மாறுபாடுகள்‌ எல்லாம்‌ சமஸ்தானத்தால்‌ செய்யப்பட்டன.

(2) சில ஆண்டுகளுக்குப்பின்‌ தீக்ஷித்‌ என்ற பம்பாய்‌ வக்கீல்‌ இங்கிலாந்து சென்றிருந்தார்‌. அங்கு நேரிட்ட ஒரு விபத்தில்‌ தனது காலை முறித்துக்கொண்டார்‌. இக்காயம்‌ எந்த விதத்திலும்‌ குணப்படும்‌ வழியைக்‌ காணவில்லை. நானா சாஹேப்‌ சாந்தோர்கர்‌, சாயிபாபாவிடம்‌ முயற்சிக்கும்படி அறிவுறுத்தினார்‌. எனவே அவர்‌ 1909ல்‌ சாயிபாபாவைக்‌ கண்டு தனது கால்‌ ஊனத்தைவிட, தனது மன ஊனத்தை குணமாக்கும்படி வேண்டிக்கொண்டார்‌. சாயிபாபாவின்‌ தரிசனத்தால்‌ மகிழ்ச்சியுற்று ஷீர்டியிலேயே தங்கிவிட முடிவு செய்தார்‌. எனவே தனக்காகவும்‌, அடியவர்களுக்காகவும்‌ ஒரு வாதாவை எழுப்பினார்‌. 10.2.1910 அன்று அக்கட்டிடத்திற்கு அஸ்திவாரம்‌ இடப்பட்டது.

இந்த நாளில்‌ மற்ற இரு முக்கிய சம்பவங்கள்‌ நிகழ்ந்தன.

(i) தாதா சாஹேப்‌ கபர்டே தனது வீடு திரும்புவதற்கு அனுமதி அளிக்கப்பட்டார்‌.

(ii) சாவடியில்‌ இரவு ஆரத்தி தொடங்கியது. இந்த வாதா கட்டி முடிக்கப்பட்டு 1911ல்‌ ராமநவமி தினத்தில்‌ உரிய மரியாதைகளுடனும்‌, சம்பிரதாயங்களுடனும்‌ பிரவேசம்‌ செய்யப்பட்டது.

(3) நாக்பூரைச்‌ சேர்ந்த புகழ்பெற்ற லட்சாதிபதியான பூட்டி அவர்களால்‌ மற்றொரு வாதா அல்லது அரண்மனை மாளிகையும்‌ எழுப்பப்பட்டது. ஏராளமாக பணம்‌ இக்கட்டிடத்திற்கு செலவிடப்பட்டது. ஏனெனில்‌, சாயிபாபாவின்‌ உடல்‌ இவ்விடத்தில்தான்‌ அடக்கம்‌ செய்யப்பட்டு இருக்கிறது. இது தற்போது சமாதி கோவில்‌ (சமாதிமந்திர்‌) என வழங்கப்படுகிறது. இவ்விடத்தில்‌ பாபா தண்ணீர்விட்டு கவனித்து வந்த ஓர்‌ பூந்தோட்டம்‌ இருந்தது. முன்னர்‌ ஒன்றுமே இல்லாத இடத்தில்‌ மூன்று வாதாக்கள்‌ எழும்பின. இவை எல்லாவற்றிலும்‌ ஆரம்பகாலத்தில்‌ அனைவருக்கும்‌ சாதேவின்‌ வாதாவே நிரம்பப்‌ பயன்பட்டது. வாமன்‌ தாத்யாவின்‌ உதவியுடன்‌ சாயிபாபா கவனித்த தோட்டத்தின்‌ கதை, சாயிபாபா ஷீர்டியில்‌ தற்காலிகமாக இல்லாதிருந்து சாந்த்பாடீலின்‌ கல்யாண ஊர்வலத்துடன்‌ மீண்டும்‌ வருகை. தேவிதாஸ்‌, ஜானகிதாஸ்‌, கங்காகீர்‌ இவர்களின்‌ பழக்கம்‌. மொஹிதின்‌ தம்போலியுடன்‌ பாபாவின்‌ மல்யுத்தப்‌ போட்டி. மசூதியில்‌ இருப்பிடம்‌. டேங்க்லே மற்ற அடியவர்களின்‌ அன்பு, மற்ற பிற விஷயங்கள்‌ அடுத்த அத்தியாயத்தில்‌ விவரிக்கப்படும்‌.

ஸ்ரீ சாய் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம்.


Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment on gist

Most Popular

Tamil Deepam

started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World.

About Us

TamilDeepam.com was started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World. We identified this online opportunity used to give the awareness in all aspects to the tamil speaking people.

Copyright © 2021 TamilDeepam.com, powered by Wordpress.

To Top