இன்பநிதி பாசறை தொடங்கிய திமுக நிர்வாகிகள் 2 பேர் சஸ்பெண்ட் | 2 DMK officials suspended for controversial poster in Pudukkottai
புதுக்கோட்டை: தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகனான இன்பநிதி பெயரில் பாசறை தொடங்கி, அதை போஸ்டராக அடித்து ஒட்டிய திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் 2 பேரை கட்சியின் தலைமை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் துணை அமைப்பாளர் க.செ.மணிமாறன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மு.க.திருமுருகன் ஆகியோர் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி பெயரில் ‘இன்பநிதி பாசறை’ தொடங்கி, புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர் அடித்து ஒட்டினர்.
‘எதிர்காலமே, விண்ணை பிளக்காமல் விதைகள் முளைப்பதில்லை, போராட்ட களமின்றி வெற்றிகள் கிடைப்பதில்லை’ ஆகிய வாசகங்களோடு முதல்வர், உதயநிதி, இன்பநிதி ஆகியோரது படங்களுடன் போஸ்ட் அடித்து ஒட்டப்பட்டது. அதோடு மட்டுமின்றி, பாசறையின் மாநில செயலாளர் திருமுருகன் என்றும், பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் என்றும் பதவி குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வரும் 24-ம் தேதி இன்பநிதி பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்க இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டரானது புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசியல் கட்சியினரிடையே விமர்சனத்துக்கு உள்ளானது. மேலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. இதையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக திருமுருகன், மணிமாறன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.