புதுக்கோட்டையில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு: கருப்புக் கொடி காட்ட முயன்ற 100-க்கும் மேற்பட்டோர் கைது | Protest against Governor’s visit in Pudukottai – More than 100 people arrested
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இன்று (ஜன.29) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்ட முயன்ற பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஏராளமானோரை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சி செல்லும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இடையில் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தை இன்று பிற்பகல் பார்வையிட உள்ளார். இந்நிலையில், புதுக்கோட்டைக்கு வருகை தரும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி, காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கட்டியாவயல் முக்கத்தில் ஏராளமானோர் கருப்புக்கொடி காட்டத் திரண்டனர்.
அப்போது, ஆளுநரை திரும்பிப் போக வேண்டும் என வலியுறுத்தி சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட , கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி அரசியல்வாதி போன்று செயல்படுகிறார். இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களை அவதூறாக பேசி வருகிறார். சித்தனவாசல் சுற்றுலாத் தலத்தை பார்வையிடுவதாகக் கூறி, கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறார். ஆகையால், இண்டியா கூட்டணி சார்பில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்” என்றார்.
இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.