உலகம்கவிதைகள்சமூகம்செய்திகள்வாழ்வியல்

தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !

யானைக்கு தும்பிக்கை, மனிதனுக்கு தன்னம்பிக்கை. என்னால் முடியும் என்றே முயன்றால் எதையும் சாதிக்கலாம். மூன்றாவது கை தன்னம்பிக்கை. உருவம் இல்லாத உறுப்பு . உள்ளத்தில் இருப்பதே சிறப்பு. எதை இழந்தாலும், பெற்று விடலாம் தன்னம்பிக்கை மட்டும் இருந்தால்.

“உன்னால் முடியும் தம்பி” என்றார் தன்னம்பிக்கை எழுத்தாளர் M.S. உதயமூர்த்தி. “உன்னை பலமானவன் என்று நினைத்தால் பலமானவன். உன்னை நீ பலவீனமானவன் என்று நினைத்தால் பலவீனமாவாய். என்னவாக நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்” என்றார் விவேகானந்தர்.

உன்னால் முடியும் வரை முயல்வது அல்ல, நீ நினைத்த செயல் முடியும் வரை முயல வேண்டும் என்றார் மாமனிதர் அப்துல் கலாம். “இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும், விதைத்துக்கொண்டே செல்ல வேண்டும்” என்பார் முதுமுனைவர் வெ. இறைஅன்பு. இ.ஆ.ப.

இப்படி எல்லோரும் சொல்லும் தன்னம்பிக்கை கருத்துக்களுக்கு ஆணி வேர் நம் தமிழ் இலக்கியங்கள் . தன்னம்பிக்கை சிந்தனையின் சுரங்கமாக இருப்பது தமிழ் இலக்கியம்.

அன்றே ஔவை பாடிய அற்புதமான ஆத்திச்சூடியில் உள்ள அனைத்து கருத்துக்களும், தன்னம்பிக்கை விதைக்கும் கருத்துக்கள் மனிதனை, பண்பாளனாக, நல்ல மனிதனாக ஒழுக்கமுள்ளவனாக நேர்மறை சிந்தனையாளனாக மனிதநேயம் மிக்கவனாக வெற்றியாளனாக மாற்றிட உதவுவது ஆத்திசூடி.

சங்க காலத்தில் பல பெண்பாற்புலவர்கள் இருந்தாலும் ஔவையார் அவர்களுக்கு சிறப்பிடம் என்றும் உண்டு. ஔவையார் என்ற பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இருந்த போதும் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் வாழ்ந்த ஔவையார் அவர்களால் பாடப்பட்டது ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை , நல்வழி ஆகிய நான்கும் இவரால் பாடப்பட்டது.

மிக சுருக்கமான சொற்களால் நீதி சொன்ன ஒப்பற்ற இலக்கியம் ஆத்திசூடி. ஆத்திசூடி படிக்க மிக எளிமையாகவும் , இனிமையாகவும் இருக்கின்ற காரணத்தினால் குழந்தைகளுக்கு இளம் வயதிலேய கற்பிக்கும் வண்ணம் பாடத்தில் உள்ளது .

புலம்பெயர்ந்து அயல்நாடுகளில் வசிக்கும் உலக தமிழர்கள் யாவரும் தங்கள் குழந்தைகளுக்கு ஆத்திசூடியை மறக்காமல் கற்பிக்கின்றனர். காரணம் ஆத்திசூடியில் “தன்னம்பிக்கை” விதைக்கும் கருத்துக்கள் இருப்பதால் தான்.

ஆத்திசூடி முழுவதுமே தன்னம்பிக்கை விதைப்பது. நேர்மறை சிந்தனையில் நேர்மையாளனாக, வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவனாக, சிறந்த மனிதனாக வாழ உதவும் ஒப்பற்ற நூல் அவ்வையின் ஆத்திசூடி.

ஆத்திசூடி முழுவதும் தன்னம்பிக்கை என்ற போதும் அதில் மிகவும் முக்கியமாக தன்னம்பிக்கை உணர்த்தும் வைர வரிகளை மட்டும் இங்கே மேற்கோள் காட்டி உள்ளேன்.

அறம் செய விரும்பு :

நல்லது நினை என்பது போல அறம் செய்ய விரும்பு என்கின்றார். விரும்பினால் தான் அந்த விருப்பம் செயலாக மாறும். எந்த செயலாக இருந்தாலும் அறம் சார்ந்ததாக நல்ல செயலாக இருக்க வேண்டும். தமிழர்களின் வாழ்வியல் முறையில் ஒன்று அறவழி நடத்தல் அதனால் அறம் செய்ய விரும்பு என்கிறார் ஔவையார்.

நேர்மையான வழியில் நடந்து அடுத்தவருக்கு உதவிடும் உள்ளம் உடையவர்கள் தன்னம்பிக்கையோடு வாழ்வார்கள். தானும் சிறப்பாக வாழ்ந்து தன்னை சார்ந்து வாழ்பவர்களையும் சிறப்பாக வாழ்விப்பார்கள். அறம் செய்ய விரும்பி விட்டால் சிந்தனை, செயல், சொல் யாவும் அறம் சார்ந்தே அமையும். அறமற்ற சிந்தனை, செயல், சொல் அற்றுப்போகும் . மனிதனை நெறிப்படுத்தி பண்பாடு பயிற்றுவிக்கும் விதமாக ஔவை நீதி நூல் எழுதி உள்ளார்கள் ..

ஆறுவது சினம் :

“ஒருவன் கோபத்தோடு எழுந்தால் நட்டத்தோடு அமர்வான் ” என்று பொன்மொழி உண்டு. சினத்தை அடக்க மட்டும் கற்று கொண்டால் வாழ்வில் சிறக்கலாம். ஒரு முறை புத்தரை ஒருவர் கண்டபடி ஏசி, திட்டி இருக்கிறார். திட்டி முடிக்கும் வரை எதுவும் பேசாதிருந்த புத்தர், நீங்கள் என்னிடம் ஒன்றை தருகிறீர்கள், அதனை நான் பெறவில்லை என்றால் அது உங்களிடமே இருந்து விடும். அது போல தான் நீங்கள் திட்டிய எதையும் நான் பெற்று கொள்ளவில்லை என்றார். திட்டியவர் தலை குனிந்தார். இப்படிதான் கோபத்தில் ஒருவர் நம்மை திட்டும் பொது நாமும் பதிலுக்கு திட்டினால் சண்டை வரும். வன்முறை வரும். பேசாமல் அமைதி காத்திட்டால் சண்டைக்கு வாய்ப்பு இல்லை. “பொறுத்தார் பூமி ஆள்வார்” என்ற பழமொழி உண்டு. பொறுமையாக இருந்து கோபம் தவிர்ப்பதும் ஒரு தன்னம்பிக்கையாளரின் கடமை ஆகும் .

இயல்வது கரவேல் :

கொடுக்க முடிந்த பொருளை ஒளிக்காமல் கொடு. நம்மால் முடிந்ததை பிறருக்கு கொடுத்து உதவிடல் வேண்டும் என்கிறார் ஔவை.

ஊக்கமது கைவிடேல் :

மனவலிமையை கை விடாதே . தன்னம்பிக்கை விதைக்கும் வைர வரிகள் இவை. மனவலிமை தான் தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை உள்ளவனுக்கு எல்லா கதவுகளும் திறந்து வரவேற்பு அளிக்கும். தன்னம்பிக்கை உள்ளவர் எங்கும் முத்திரை பதிக்க முடியும்.

எண்ணெழுத் திகழேல் :

கணக்கையும் இலக்கணத்தையும் இகழாமல் நன்றாக கற்றுக் கொள். கணக்கு, இலக்கணம் எனக்கு வராது என்று சொல்பவர்களும் உண்டு. அவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் விதமாக சொன்ன கருத்து இது.

ஓதுவது ஒழியேல் :

எக்காலத்தும் படித்து கொண்டே இரு. ஒரு தன்னம்பிக்கையாளர் எப்போதும் நல்ல நூல்களை வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும். படிக்க படிக்க அறிவு வளரும், ஆற்றல் பெருகும்.

நயம்பட உரை :

யாரிடமும் இனிமையாக பேசு. சாதனையாளர், வெற்றியாளர் இவர்களின் ரகசியம் என்னவென்று பார்த்தால் எல்லோருடனும் இனிமையாக பேசும் பண்பு உள்ளவர்களாக இருப்பார்கள். ஒற்றை வரியில் ஒளவை சுருங்க சொல்லி விளங்க வைக்கும் விதமாக உயர்ந்த கருத்துக்களை மிக எளிமையாகவும், இனிமையாகவும் ஆத்திசூடியில் பாடி உள்ளார் .

இணக்கமறிந் திணங்கு :

நல்ல குணம் உள்ளவரோடு நட்பு செய். உன் நண்பன் யார் என்று சொல் ‘நீ யார் என்று சொல்கிறேன்’! என்பார்கள். அது போல நல்ல நண்பர்களுடன் பழகினால் நன்மைகள் கிட்டும். வாழ்க்கை சிறக்கும். வளங்கள் பெருகும்.

உலகப்பொதுமறை படைத்த திருவள்ளுவர் ஒன்றே முக்கால் அடிகளில் சொன்ன கருத்துக்களை ஒட்டி பல கருத்துக்கள் ஒரே அடியில் ஔவை சொன்ன ஆத்திசூடியில் காண்கிறோம். ஆணும் பெண்ணும் சமம் என்று இன்று சொல்கிறோம். ஆனால் அன்றே திருவள்ளுவர் என்ற ஆணுக்கு நிகராக ஒளவை என்ற பெண்ணும் பாடல்கள் எழுதி உள்ளார் என்பதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. பெண் இனத்தின் இமயமாக ஒளவை விளங்குகின்றார் .

தந்தை தாய் பேண் :

தாய் தந்தையரை மதித்துக் காப்பாற்று. இயந்திரமயமான உலகில் மனிதனும் இயந்திரமாக மாறி பெற்றோரை பேணாத காரணத்தால் தான் முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றன. அவ்வை சொன்ன வழி நடந்து பெற்றோரை பேணினால் தான் முதியோர் இல்லங்கள் தேவைப்படாது .

நன்றி மறவேல் :

பிறர் செய்த உதவிகளை மறக்காதே. இதையே தான் வள்ளுவர் ஒன்றே முக்கால் அடியிலும் சொல்லி உள்ளார். இன்றைய ஹைக்கூ வடிவத்தின் முன்னோடி யார் என்றால் திருவள்ளுவரையும் அவ்வையாரையும் கூற முடியும். சுருங்க சொல்லி விளங்க வைத்தல் என்ற சூத்திரத்தை உணர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அதனால்தான் இன்றும் நிலைத்து நிற்கின்றனர். நூற்றாண்டுகள் கடந்தும் அவர்கள் படைப்புகள் வாழ்கின்றது.

பருவத்தே பயிர் செய் :

‘எந்த செயலையும் உரிய காலத்தில் செய்’. இந்த ஒற்றை வரியில் ஓராயிரம் தன்னம்பிக்கை கருத்துக்கள் உள்ளன. எந்த ஒரு செயலையும் நாளை, நாளை என்று நாளை கடத்தாமல் உடன் உரிய நேரத்தில் செயலை செய்து முடித்தால் வெற்றிகள் குவியும், சாதனைகள் நிகழும், புகழ் மாலைகள் தோளில் விழும். “உழுகும் போது ஊர் வழியே சென்று விட்டு அறுக்கும் பொது அரிவாளோடு வந்தானாம்” என்று கிராமிய பழமொழி உண்டு. இன்றைக்கு பலரும் உரிய காலத்தில், உரிய செயல் உடன் செய்யாத காரணத்தினால் தான் வாழ்வில் தோல்வி அடைந்து விரக்தியில் வாடுகின்றனர்.

இயல்பலாதன செயேல் :

நல்லொழுக்கத்திற்கு மாறாக நடக்காதே. இதையே தான் வள்ளுவரும் வலியுறுத்தி உள்ளார். ஒருவனுக்கு ஒருத்தி என்பது நமது தமிழர் பண்பாடு. ஒழுக்கமுடன் வாழ்ந்தால் எய்ட்ஸ் என்னும் உயிர்க்கொல்லி நோயே வராது. ஒழுக்கம் நமது பண்பாடு சார்ந்தது. ஒழுக்கமானவர்களுக்கு சமுதாயத்தில் நன்மதிப்பும் மரியாதையும் என்றும் உண்டு. சென்ற இடமெல்லாம் சிறப்பும் உண்டு. பிறர் மதிக்கும்படி வாழ்வதும் தன்னம்பிக்கையே.

வஞ்சகம் பேசேல் :

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதே. உள்ளத்தில் உள்ளதை அப்படியே பேச வேண்டும். நல்லது நினைக்க வேண்டும். நல்லது பேச வேண்டும். எண்ணம், பேச்சு, செயல் யாவும் நல்லனவாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கை வளர்க்க உதவுவது இது போன்ற பண்பு.

அனந்த லாடேல் :

காலையில் அதிக நேரம் தூங்காதே. இதைத்தான் பாட்டுக் கோட்டையான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், “தூங்காதே தம்பி தூங்காதே” என்று பாடினார். பெரிய மனிதர்களை சந்திக்க வேண்டுமென்றால் காலையில் சென்றால்தான் சந்திக்க முடியும். அதற்கு நாம் அதிகாலையில் எழ வேண்டும். அதிகாலை தூக்கம் என்பது சோம்பேறிகளின் பழக்கம். சுறுசுறுப்பானவர்கள், சாதிக்க வேண்டும் என்ற வெறி உள்ளவர்கள், வெற்றியாளர்கள் அனைவருமே அதிகாலையில் எழும் பழக்கம் உள்ளவர்கள். தன்னம்பிக்கையாளர்களின் முதல் தகுதி அதிகாலை எழுவது. இதைத்தான் அவ்வை வலியுறுத்தி உள்ளார்.

குணமது கை விடேல் :

உயர்குணத்தை எந்த நிலையிலும் கைவிடாதே. நல்ல குணத்துடன் என்றும் நடப்பவர்களுக்கு சமுதாயத்தில் நன்மதிப்பும், மரியாதையும் என்றும் உண்டு . மேன்மக்கள் மேன்மக்களே என்ற கூற்றுக்கு ஏற்ப உயர்ந்த குணத்தை எந்த சூழ்நிலையிலும் கைவிடாமல் தன்னம்பிக்கையோடு வாழ ஔவை கற்று தருகிறார் .

கேள்வி முயல் :

நல்ல கருத்துக்களை விரும்பி கேட்க முயற்சி செய். நல்ல கருத்துக்களை கேட்கும் போது நமது குணம் செயல் யாவும் நல்லவையாகவே இருக்கும்.

செவிகளை நல்லது கேட்க மட்டும் பயன்படுத்துவது நல்லது, கெட்டவை கேட்காமல் இருப்பது சிறப்பு.

சான்றோரினத் திரு

கல்வி , அறிவு, ஒழுக்கம் நிறைந்தவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *