கவிதைகள்

திருக்குறளை தேசிய நூலாக்குக ! கவிஞர் இரா .இரவி !

thirukurail 4

திருக்குறளை தேசிய நூலாக்குக ! கவிஞர் இரா .இரவி !

பாடாத பொருளில்லை சொல்லாத விளக்கமில்லை !
பண்பைப் பயிற்றுவிக்கும் பகுத்தறிவைப் போதிக்கும் !

மனிதன் மனிதனாக வாழ்ந்திட கற்பிக்கும் நூல் !
மனிதனின் மகத்துவம் மனிதனுக்கு உணர்த்தும் நூல் !

வாழ்வின் அர்த்தம் விளக்கிடும் அற்புத நூல் !
வசந்தம் அடையும் ரகசியம் கூறும் நூல் !

தாய் பசித்திருந்தாலும் தவறு செய்யாதே எனும் நூல் !
தரணிக்கு அறநெறி விளக்கிய அறிவு விளக்கு நூல் !.

தமிழென்ற சொல்லின்றி பெருமை சேர்த்த நூல் !
தீங்கிழைத்த தீயவருக்கும் நன்மைசெய் எனும் நூல் !

நன்றி மறக்காமல் நன்றியோடு வாழ்க எனும் நூல் !
நெறி பிறழாமல் நேர்மையோடு வாழ்க எனும் நூல் !

ஆள்வோரின் கடமையை அறிவுறுத்திடும் அற்புதநூல் !
ஆணவத்தை அகற்றி அன்பைப் புகட்டிடும் அழகியநூல் !

பயனற்ற சொல் என்றும் சொல்லாதே எனும் நூல் !
பயனுற வாழ்க்கை வாழ்ந்திட வழி சொல்லும் நூல் !

வானிலிருந்து வரும் மழை அமிர்தம் எனும் நூல் !
வானம் பொய்த்தால் வாழ்க்கைப் பொய்க்கும் எனும் நூல் !

இனிய முகத்துடன் வரவேற்க வேண்டும் எனும் நூல் !
இனிய சொல்லிருக்க வன்சொல் வேண்டாம் எனும் நூல் !

கடவுளால் முடியாதது முயற்சியால் முடியும் எனும் நூல் !
கற்ற கல்வியின் படி வாழ்வில் நடந்திடுக எனும் நூல் !

முப்பால் வடித்து முத்திரைப் பதித்த நூல் !
முக்காலமும் பொருந்தும் முன்னேற்ற நூல் !

மரத்தில் தேசிய மரம் ஆலமரம் உள்ளது !
மலரில் தேசிய மலர் தாமரை உள்ளது !

விலங்கில் தேசிய விலங்கு புலி உள்ளது !
பறவையில் தேசியப் பறவை மயில் உள்ளது !

தேசிய மரம் மலர் விலங்கு பறவை உள்ளன !
தேசிய நூல் மட்டும் இல்லையே ஏன் ?

உலகப்பொது மறையை தேசிய நூலாக்க !
உமக்கு தயக்கம் ஏன் ? காரணம் என்ன ?

திருக்குறளுக்கு இணையான நூல் உலகினில் இல்லை !
தீர்க்கமாக அறிந்திட்ட உலகஅறிஞர்கள் சொன்ன உண்மை !

திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திடுக !
திருக்குறளை வாழ்வில் தினம் கடைபிடித்திடுக !

thirukurail 1


திருவள்ளுவர் ! கவிஞர் இரா .இரவி !

புலவர்களின் புலவர்
கவிஞர்களின் கவிஞர்
திருவள்ளுவர் !

உலகப்பொதுமறைப் படைத்த
உலகப்பெரும் புலவர்
திருவள்ளுவர் !

பெயரிலேயே திருவைப் பெற்ற
திருவாளர்
திருவள்ளுவர் !

அறநெறிப் போதிக்கும்
அற்புத இலக்கியம் வடித்தவர்
திருவள்ளுவர் !

அவ்வையின் உதவியால்
அரங்கேற்றம் ஆனவர்
திருவள்ளுவர் !

அழைத்ததும் ஓடிவரும்
அன்பு மனைவியைப் பெற்றவர்
திருவள்ளுவர் !

உலகில் அதிக மனிதர்கள்
வாசித்த இலக்கியம் படைத்தவர்
திருவள்ளுவர் !
ஈராயிரம் வயது கடந்தும்
இளமையாக இருப்பவர்
திருவள்ளுவர் !

மரபு அன்று என்றவர்களையும்
ஏற்க வைத்தவர்
திருவள்ளுவர் !

வாசுகியின் கணவர்
வாசகர்களின் கண் அவர்
திருவள்ளுவர் !

thirukurail 2


தமிழ் இலக்கியத்தின் மணிமகுடம் திருக்குறள் – கவிஞர் இரா.இரவி

தமிழ் இலக்கியத்தின் மணிமகுடம் திருக்குறள்
தனிப்பெரும் இடம்பெற்ற இலக்கியம் திருக்குறள்
தமிழ் என்ற சொல்லே இடம் பெறாத திருக்குறள்
தமிழன் என்ற சொல்லே இடம் பெறாத திருக்குறள்
கடவுள் என்ற சொல்லே இடம் பெறாத திருக்குறள்
கற்கண்டை மிஞ்சும் கனிச்சுவை மிக்க திருக்குறள்
வாழ்வியல் நெறியை பயிற்றுவிக்கும் திருக்குறள்
வாழ்வின் அர்த்தம் உணர்த்தும் திருக்குறள்
உலக இலக்கியங்களின் உன்னதம் திருக்குறள்
உலகிற்கு அறநெறி அறிவிக்கும் திருக்குறள்
உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்
உலக மக்கள் யாவரும் அறிந்த திருக்குறள்
அழியாப் பெருமையுடன் நிலைத்திருக்கும் திருக்குறள்
அறியாமை நீக்கிடும் அறிவுடைமை திருக்குறள்
மனிதநேயம் மனத்தில் விதைக்கும் திருக்குறள்
மடமை நீக்கி பகுத்தறிவைப் போதிக்கும் திருக்குறள்
ஈடு இணையற்ற இனிய இலக்கியம் திருக்குறள்
எண்ணிலடங்கா கருத்துப் புதையல் திருக்குறள்
காந்தியடிகளின் குரு டால்ஸ்டாய் என்ற அறிஞர்
டால்ஸ்டாயின் குரு செந்நாப்புலவர் திருக்குறள்
சொக்க வைக்கும் சொற்களின் சுரங்கம் திருக்குறள்
சோகத்தை மறக்க வைக்கும் சுகம் திருக்குறள்
தமிழுக்கும் செம்மொழி பெற்றுத் தந்த திருக்குறள்
தமிழருக்குப் பெருமை ஈட்டித் தந்த திருக்குறள்

thirukurail 3

திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் – கவிஞர் இரா.இரவி

திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும்
திருக்குறள் வழி நடந்தால் வாழ்க்கை சிறக்கும்
தான் என்ற அகந்தையை அகற்றுவது திருக்குறள்
நான் என்ற செருக்கை அழிப்பது திருக்குறள்
உயர்ந்த ஒழுக்கத்தை உணர்த்திடும் திருக்குறள்
ஓயாத உழைப்பைப் போதிக்கும் திருக்குறள்
முயற்சியை முன் நிறுத்திடும் திருக்குறள்
அயற்சியை உடன் அகற்றிடும் திருக்குறள்
ஆறாவது அறிவை பயிற்றுவிக்கும் திருக்குறள்
ஆராய்ச்சி அறிவை வளர்த்திடும் திருக்குறள்
மனிதனை மனிதனாக வாழவைக்கும் திருக்குறள்
மனிதனின் மிருகக்குணம் போக்கிடும் திருக்குறள்
மனிதனை அறிஞனாக ஆக்கிடும் திருக்குறள்
மனிதனின் அறியாமையை நீக்கிடும் திருக்குறள்
மனிதனை சான்றோனாக செதுக்கிடும் திருக்குறள்
அறிவியல் அறிவை உருவாக்கும் திருக்குறள்
அப்துல்கலாமை உயர்த்தியது திருக்குறள்
உலக இலக்கியத்தின் இமயம் திருக்குறள்
உலகில் ஈடு இணையற்ற நூல் திருக்குறள்
உலக மனிதர்கள் யாவருக்கும் வாழ்க்கையை
உணர்த்தும் ஒப்பற்ற உயர்ந்த திருக்குறள்
இல்லறம் நல்லறமாக விளங்கிட வேண்டும்
அன்பும் அறனும் அவசியம் வேண்டும்
உயர்ந்த தவத்தை விட சிறந்தது
ஒழுக்கமாக இல்லறத்தில் வாழ்வது
பிறர் பழிக்கும் தீமைகள் இன்றி
பிறர் போற்றும் வாழ்க்கை இல்லறம்
பூ உலகில் செம்மையாக வாழ்பவன்
வானுலக தேவர்களை விட சிறந்தவன்
வாழ்வது எப்படி என்பதை அறிய
வளமான திருக்குறளைப் படியுங்கள்
பாடாத பொருள் இல்லை திருக்குறளில்
சொல்லாத கருத்து இல்லை திருக்குறளில்
1330 திருக்குறள் மனப்பாடம் செய்வதைவிட
10 திருக்குறள் வழி நடப்பது நன்று

thirukurail

உலக மொழிகளின் மூலம் தமிழ்மொழி கவிஞர் இரா.இரவி

இலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி

இனிய உச்சரிப்பின் இனிமை தமிழ்மொழி

உலகப் பொதுமறையை உலகிற்கு தந்திட்ட தமிழ்மொழி

உலகமொழிகளின் மூலம் ஒப்பற்ற தமிழ்மொழி

காவியங்களும் காப்பியங்களும் நிறைந்த தமிழ்மொழி

கனிச்சாறையும் கற்கண்டையும் மிஞ்சிய தமிழ்மொழி

எண்ணிலடங்கா சொற்கள் கொண்ட தமிழ்மொழி

எண்ணத்தை உயர்வாக்கும் உயர்ந்த தமிழ்மொழி

பழமைக்கு பழமையான தொன்மைமிகு தமிழ்மொழி

புதுமைக்கு புதமையான புத்துணர்வுமிகு தமிழ்மொழி

இணையத்தில் கொடிகட்டிப் பறக்கும் தமிழ்மொழி

இணையில்லாப் புகழ்மிக்கக உயர்தனித் தமிழ்மொழி

முதல் மனிதன் பேசிய முதல்மொழி தமிழ்மொழி

மூத்தோரை மதிக்கும் மரியாதை மிக்க தமிழ்மொழி

உலகிற்கு பண்பாட்டை பறைசாற்றும் தமிழ்மொழி

உலக இலக்கியங்களில் முதன்மையானது தமிழ்மொழி

மனிதநேயத்தை முன்மொழியும் மொழி தமிழ்மொழி

மனிதனை மனிதனாக மதிக்கும் நல் தமிழ்மொழி

பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கும் தமிழ்மொழி

பல நூறு மொழிகளில் சிறந்திருக்கும் தமிழ்மொழி

புலவர்கள் பலரை உருவாக்கிய தமிழ்மொழி

அறிஞர்கள் பலரை செதுக்கிய தமிழ்மொழி

விஞ்ஞானிகள் பலரை வளர்த்த தமிழ்மொழி

மெஞ்ஞானிகள் பலரை வழங்கிய தமிழ்மொழி

இயல்,இசை,நாடகம் சிறந்து விளங்கிடும் தமிழ்மொழி

எத்திக்கும் முத்தமிழிலும் முத்திரை பதித்திடும் தமிழ்மொழி

அகமும் புறமும் அழகாக விளங்கும் தமிழ்மொழி

அற்புத உறவுகளுக்கு தனித்தனி சொல்லழகு தமிழ்மொழி

முல்லை,மருதம்,குறிஞ்சி,நெய்தல்,பாலை பாடிய தமிழ்மொழி

மூச்சாக உலகத் தமிழருக்கு விளங்கிடும் தமிழ்மொழி

மனதை இளமையாக்கும் இனிய தமிழ்மொழி

மமதையை அழித்து ஒழித்திடும் தமிழ்மொழி

தாலாட்டு தொடங்கி ஒப்பாரி வரை இனிய தமிழ்மொழி

தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் தமிழ்மொழி

ஒரு எழுத்தில் பொருள் கூறும் தமிழ்மொழி

ஒரு எழுந்து மாறினால் பொருள் மாறும் தமிழ்மொழி

காந்தியடிகள் மனதார புகழ்ந்திட்ட தமிழ்மொழி

தமிழனாக பிறந்திட ஆசைப்பட வைத்த தமிழ்மொழி

கவிஞர்கள் கட்டித் காத்த கரும்பு தமிழ்மொழி

கவிதைகள் கட்டித்தங்கம் போன்ற தமிழ்மொழி

உலகம் உள்ளவரை என்றும் நிலைக்கும் தமிழ்மொழி

உலகில் ஈடு இணையற்ற உன்னதமொழி தமிழ்மொழி

Thiruvalluvar 5

உலகின் சிறந்த மொழி தமிழ் !கவிஞர் இரா .இரவி !

உலகில் பல மொழிகள் இருந்தாலும் ,அற்புதத்தமிழ் மொழிக்கு ஈடான மொழி உலகில் இல்லை .உலகின் முதல் மொழி தமிழ் .உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ் .
அகழ்வாய்வுகளில் , பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்களில் தமிழ் எழுத்துக்கள் உள்ளது .மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் பல மொழிகள் அறிந்தவர் .ஆராய்ந்தவர் .அவர் நிறுவிய உண்மை உலகின் முதல் மொழி தமிழ் .உலக மொழிகளின் மூலம் தமிழ் .

தமிழ் மொழி இலக்கண இலக்கியங்கள் நிறைந்த மொழி .நீதிக் கதைகள் ,வாழ்வியல் கற்பிக்கும் கதைகள் நிறைந்த மொழி .மகாகவி பாரதியார் பல மொழிகள் அறிந்தவர் .அவர் பாடினார் .யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம் ..என்று கல்வெட்டுப் போல செதுக்கி உள்ளார் .
.
தமிழ் மொழியின் சிறப்பை உலகம் முழுவதும் அறிந்து வைத்துள்ளனர் .ஆனால் தமிழகத்தில் வாழும் தமிழர்கள்தான் தமிழ் மொழியின் சிறப்பை உணரவில்லை .ஆங்கில மோகம் பிற மொழி மோகம் பிடித்து அலைகின்றனர் .வேற்று மொழி அறிஞர்கள் பலர் தமிழ்தான் தொன்மையான மொழி .உலகின் முதல் மொழி என்ற ஆய்வு முடிவாக அறிவிக்கின்றனர் .என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில் ..தமிழர்கள் பிற மொழி கலந்து பேசுவதை விட வேண்டும் .
தமிழ் படித்தால் வேலை கிடைக்காது .தமிழ் படித்தால் பயன் இல்லை என்று இன்று பலர் தவறாக பரப்புரை செய்கின்றனர் .இன்று எல்லாத் துறையிலும் சாதித்த சாதனையாளர்கள் அனைவருமே ஆரம்பக்கல்வியை தமிழ் வழி பயின்றவர்கள்தான் .அப்துல் கலாம் தொடங்கி மயில்சாமி அண்ணாத்துரை வரை ஆரம்பக்கல்வியை தமிழ் வழி பயின்றவர்கள்தான் .
திரைப்படத்துறையில் இயக்கத்தில், இசையில், நடிப்பில் சாதித்தவர்கள் அனைவரும் ஆரம்பக்கல்வியை தமிழ் வழி பயின்றவர்கள்தான் .தாய்மொழியான தமிழ்மொழியில் குழந்தைகள் அனைவரும் ஆரம்பக்கல்வியை பயின்றால் .சுயமாக சிந்திக்கும் ஆற்றல் பிறக்கும் . தாய்மொழிதான் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உரம் போன்றது .

எந்த மொழியும் தெரிந்து கொள்வதில் தவறு இல்லை .தாய்மொழியான தமிழ் மொழி தெரியாமல் பிற மொழி பயில்வது மடமை .இன்று பலர் தாய் மொழியான தமிழ்மொழியை விட்டுவிட்டு ஆங்கிலத்தையும் ,இந்தியையும் ,சமஸ்கிருதத்தையும் தேர்வு செய்து குழந்தைகளை படிக்க வைக்கின்றனர் .மேல் நிலைத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற இந்தியும் ,சமஸ்கிருதமும் உதவும் என்று நம்பி குழந்தைகளுக்கு தமிழ் கற்ப்பிக்காமல் தவிர்த்து வருகின்றனர் .மதிப்பெண் பெறும் இயந்திரமாகவே குழந்தைகள் வளர்கின்றனர்.
.
ஆரம்பக் கல்வி தமிழ் மட்டுமே இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும் .தமிழகத்தில் மட்டும்தான் தமிழே படிக்காமல் பட்டப் படிப்பு வரை படிக்க முடியும் என்ற அவல நிலை உள்ளது .வேறு எந்த மாநிலத்திலும் இந்த அவல நிலை இல்லை .

குழந்தைப் பருவத்தில் இருந்து தமிழ்மொழி கற்பித்தால் குழந்தைகள் அறிவாளியாக வரும் .மேதையாக வரும் .சாதனையாளராக வரும் .தமிழ் மொழியால் பல நன்மைகள் உண்டு .பண்பாடு ,ஒழுக்கம் ,பொறுமை ,நீதி ,நெறி அனைத்தும் கற்பிக்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு .

தமிழ் மொழியின் மகுடமாக விளங்கும் திருக்குறள் .அனைவரும் படிக்க வேண்டிய வாழ்வியல் இலக்கியம் .உலக இலக்கியங்களில் திருக்குறளுக்கு இணையான ஒரு இலக்கியம் இல்லை என்று அறிஞர்கள் அறிவித்து உள்ளார்கள் .
காந்தியடிகள் லியோ டால்ஸ்டாய் நூல்களின் மூலமாக திருக்குறளின் சிறப்பை உணர்ந்து பின் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களை வாங்கி படித்து அறிந்தார் .அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டார் காந்தியடிகள் .காரணம் திருக்குறளை அதன் மூல மொழியான தமிழில் படிப்பதற்காக .

குசராத்தி மொழியை தாய் மொழியாகக் கொண்ட காந்தியடிகள் திருக்குறளுக்காக தமிழை நேசித்தார் .தமிழனாக பிறக்க ஆசைப்பட்டார் .ஆனால் தமிழத்தில் பிறந்த தமிழர்களோ தமிழ் படிக்க மறுக்கின்றனர் .ஏன் ? இந்த அவல நிலை .
இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று பொய் பேசி வருகின்றனர் .இந்தி தெரிந்த வடவர்கள் பலர் வடக்கே வேலை இன்றி தமிழகத்தில் வேலை தேடி தினந்தோறும் வந்த வண்ணம் உள்ளனர் .

உலகின் முதல் மொழியான தமிழ் மொழியை விட்டு விட்டு பிற மொழியை குழந்தைகளுக்கு கற்ப்பிப்பது மடமை .கண்ணை விற்று விட்டு சித்திரம் வாங்கி என்ன பயன் .சிந்திக்க வேண்டும் .


Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment on gist

Most Popular

Tamil Deepam

started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World.

About Us

TamilDeepam.com was started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World. We identified this online opportunity used to give the awareness in all aspects to the tamil speaking people.

Copyright © 2021 TamilDeepam.com, powered by Wordpress.

To Top