அப்பாவின் நாற்காலி. கவிஞர் இரா.இரவி
அப்பாவின் நாற்காலி காலியாகவே உள்ளது இன்று
அப்பா அமர்ந்திருக்கையில் அழகோ அழகு அன்று!
அமர்ந்தபடியே கண்களால் வழி நடத்தினார்
அல்லல் கண்டு வருந்தாமல் போராடி வென்றார்!
நல்ல கணவராக அம்மாவிற்கு இருந்தார்
நல்ல அப்பாவாக எனக்கு இருந்தார்!
நல்ல மாமனாராக என் மனைவிக்கு இருந்தார்
நல்ல தாத்தாவாக என் குழந்தைகளுக்கு இருந்தார்!
இருந்தபோது தெரியவில்லை அவர் அருமை
இறந்தபின்னே உணர்கின்றேன் அவர் பெருமை!
நிழலின் அருமை வெயிலில் தெரியும் உண்மை
நான் அப்பாவை இழந்தபின் அறிந்தேன் அவரை!
கோபம் அடைந்து நான் பார்த்ததே இல்லை
குணத்தில் குன்றாக நிமிர்ந்து நின்றவர்!
அப்பா அமர்ந்த நாற்காலி வெற்றிடமானது
அவரின் நினைவை அடிக்கடி ஊட்டி வருகின்றது!
- கவிஞர் இரா .இரவி